Published:Updated:

"கலைவாணர் கலைவாணர்தான்!"

"கலைவாணர் கலைவாணர்தான்!"

"கலைவாணர் கலைவாணர்தான்!"

''நகைச்சுவை நடிகன் என்றால், கூத்தடிப்பவன், கோமாளி என்றெல்லாம் பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த

இலக்கணத்தையே மாற்றி, மக்களைச் சிரிக்க வைக்கும்போதே சிந்திக்க வைக்கும் பொறுப்பும் நகைச்சுவை நடிகனுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தியவர் கலைவாணர் அவர்கள் ஆவார்கள்.

 அவர் சித்திரம் வரைவதில் அக்கறை காட்டினார். ஓவியக்கலை மேதை திரு.மாதவன் அவர்கள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் ஓவியராக இருந்தபோது, அவரிடம் ஓவியம் கற்க முயன்றார்.

ஒரு வேடத்தில், அவர் நாகஸ்வரம் வாசிக்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால், ஒரு பாட்டை நாகஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார் கலைவாணர் அவர்கள்.

'மாயா மச்சீந்திரா’ படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆட வேண்டியிருந்தது. ஒரு நாள் விடியற்காலையில் நாங்கள் எழுந்து பார்த்தபோது, காலில் கட்டையைக் கட்டிக்கொண்டு அவர் நடக்க முயலுவதைக் கண்டு திடுக்கிட்டோம். பின்னர், படத்தில் காலில் கட்டையைக் கட்டிக்கொண்டு ஆடிவிட்டார்!

"கலைவாணர் கலைவாணர்தான்!"

சக்கரம் வைத்த காலணிகளைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் சறுக்கி விளையாடுகின்றார்களே, இதை 'நவீன விக்கிரமாதித்தன்’ படத்தில் சக்கரக் காலணியைக் காலில் அணிந்து செய்து காட்டியவர் கலைவாணர் அவர்கள். எத்தனை முறை கீழே விழுந்திருப்பார்! முழங்காலில்தான் எத்தனை காயங்கள்?

"கலைவாணர் கலைவாணர்தான்!"

கொட்டாங்கச்சி வீணையில் வாசிக்க வேண்டிய வேடமா? உடனே அதைப் பழகுவார்; புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமா, அவரால் ஒரு பாட்டாவது சரியாக வாசிக்க முடியும். ஆர்மோனியம் வாசிப்பார்; தபேலா, மிருதங்கம் வாசிப்பார். கஞ்சிரா? தெரியும். மோர்சிங்? அதையும் வாசிப்பார். வீண் பழி ஏற்று, சிறைச்சாலைக்குச் சென்று, வெளியே வரும்போது, கச்சேரி செய்யும் அளவிற்குச் சாதகம் செய்து, சங்கீத ஞானம் பெற்றிருந்தார் கலைவாணர் அவர்கள்.

குஸ்தியா? தெரியும். சடுகுடு விளையாட்டா? தெரியும். சிலம்பமா? தெரியும். நடனமா? தெரியும். கதை எழுத வேண்டுமா? எழுதுவார். உரையாடல்? அவருடைய பாத்திரங்கள் பெரும்பாலானவற்றுக்கு அவர்தான் உரையாடல், கதை எல்லாம்.

கவிஞர்கள் இவரை அச்சுறுத்த முடியாது. கொஞ்சம் தாமதமானால் போதும்... இலக்கண விதிகள் வழுவாமல் இவரே அழகான கவிதை புனைவார். இவருடைய பாடல்களெல்லாம் இவரே பாடியதுதான். இயக்குநர் இல்லாவிட்டாலும் கவலையில்லை. இவரே இயக்குநராகி வேலையை முடித்துவிடுவார்.

அறிவுப் பெரியவர்கள் யாராயினும் சரி; அவர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கவனிக்க மாட்டார். இவருடைய மரியாதை அவர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்! தமிழ் மீது இவருக்கு இருந்த பக்தி (ஆமாம், பக்தியேதான்!) அளவிற்கடங்காதது!''

- எம்.ஜி.ஆர்.

('நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்...)