மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - பகத்சிங் !

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

''மே தினம் வாழ்க... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக...''

அது ஒரு சிறிய கூட்டம். பெரியவர்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில், அந்தச் சிறுவனும் முஷ்டியை உயர்த்தி முழங்கிக்கொண்டு இருந்தான்.

கூட்டம் தொடர் முழக்கத்தில் இருந்தாலும் அடிக்கடி சுற்றுப்புறத்தையும் பார்த்துக்கொண்டது. எந்த நேரத்தில் ஆங்கிலேயப் போலீஸ் வருமோ, என அவர்கள் முகத்தில் மெல்லிய கலக்கம் தெரிந்தது. ஆனால், பெரியவர்களே அஞ்சிக் கொண்டு இருந்தபோதும் அந்தச் சிறுவன் முகத்தில் கொஞ்சமும் அச்சம் இல்லை. அப்போது அவன் வயது 10. இது நடந்தது 1917-ல் பஞ்சாபில்.

அந்தச் சிறுவனின் பெயர் பகத்சிங். 1907 செப்டம்பர் 28-ல் பிறந்தான். அவன் தந்தை பெயர் இஷன்சிங். மாமாக்கள் அஜித், ஸ்வண் சிங் ஆகியோருடன் அந்தத் தொழிலாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையிலிருந்த பகத் சிங்கின் தந்தை அப்போதுதான் தண்டனை முடிந்து விடுதலையாகி இருந்தார். தந்தையின் வீரமும் தேசப்பற்றும் இயல்பாகவே மகனிடமும் இருந்தன.

பகத் சிறு வயதிலிருந்தே அஞ்சா நெஞ்சன் என்று பெயர் எடுத்தான். அவனது அம்மா வித்யாவதி பலமுறை பகத்தை வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கெஞ்சி மீட்க வேண்டி இருந்தது. பஞ்சாபிய விவசாயிகளிடம் 'இஸ்கி வரி’ வசூலிக்க வந்தவர்கள் மீது கல்லடித்துத்  துரத்தினான். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வெள்ளை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டபோது, அந்த ஆசிரியர்களை எதிர்த்து கையால் எழுதிய துண்டுப் பிரசுரங்களைப் பள்ளியின் வாசலில் விநியோகித்தபோது, அவனுக்கு வயது 9.

சுட்டி நாயகன் - பகத்சிங் !

அதே நேரம், பகத் படிப்பில் மிகவும் சூட்டிகையாக இருந்தான். நிறையப் புத்தகங்களை ஆழமாகப் படிப்பான். ஆரிய சமாஜம் நடத்திய ஆங்கிலப் பள்ளியில் பகத் சேர்க்கப்பட்டான். அங்கே இருந்த வேத விற்பன்ன ஆசிரியர்கள், அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள். சக மாணவர்களை ஒன்று கூட்டி, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கக் கிளம்பியபோது, அவனுக்கு வயது 11.

ஒருநாள், பகத்தின் தந்தை அருகில் உள்ள ஓர் ஊரின் சந்தைக்குச் சென்று, அங்கே வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிரான ஒரு கூட்டத்தில் பேச இருந்தார். இதைக் கேள்விப்பட்ட பகத், அப்பாவுக்கே தெரியாமல் அந்தக் கூட்டத்துக்குச் சென்றான். அங்கே திடீரென்று புகுந்த வெள்ளையர் ராணுவம், அமைதிப் போராட்டத்தில் இருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அந்த ஊர்தான் ஜாலியன் வாலாபாக். உலகமே அதிர்ந்த துயரங்களில் ஒன்றான ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்தது அங்கேதான். 1919-ல் தனது 12 வயதில், அந்தப் போர்க்களத்தில் தன் தந்தையை இழந்தான் பகத்சிங்.

சுட்டி நாயகன் - பகத்சிங் !

ஆனாலும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் குணத்தில் இருந்து பகத்சிங் பின்வாங்கவில்லை. முன்பைவிட அதிகமான போராட்ட உணர்வுடன் மாவீரனாக நெஞ்சை நிமிர்த்தித் தனது போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகனாகப் பேசப்பட்டார் பகத்சிங்.