ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா
##~## |
அவள் பெயர் ஹெலன். அவளுக்கு நண்பர்கள் யாருமே கிடையாது. ஒரு காய்ச்சலில் அவளுக்கு கண் பார்வையும் காதுகேட்கும் திறனும் போய்விட்டது. கண் பிதுங்கி வெளியே இருப்பதுபோல் இருக்கும். வாயும் பேச வரவில்லை. அதனால், அவளால் யாரோடும் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாது. ஹெலன் தனியாகவே இருந்தாள். அம்மா கேட் ஆடம்ஸ் மட்டும் அவளுடன் இருப்பார்.
அந்த வீட்டுச் சமையல்காரர் ராபின் சார்லஸ். அவரது மகளான ஆறு வயது மார்த்தா வாஷிங்டன், ஹெலனிடம் எப்படியோ நெருக்கமான தோழியானாள். இருவரும் பல மணி நேரம் கை கோத்தபடி உட்கார்ந்திருப்பார்கள். ஹெலன் மார்த்தாவிடமிருந்து நடக்கவும் இடித்துக்கொள்ளாமல் ஓடவும் கற்றாள்.
ஹெலனின் தந்தை, ஆர்தர் கெல்லர், அமெரிக்க ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்தார். மகளின் நிலையைக் கண்டு அவருக்கு துயரமாக இருந்தது. டாக்டர். ஜுலியன் இ ஸோலிம் என்பவர்குறித்து அவர் கேள்விப்பட்டார். பார்வையற்றவர் களுக்கான பள்ளி ஒன்று இருப்பதையும் அறிந்து, அங்கே அழைத்துச் செல்ல முயன்றார். ஹெலன் போக மறுத்தாள். மார்த்தா உதவியோடு பெற்றோர்களைப் பணியவும்வைத்தாள்.
அதனால் 'தனது வீட்டுக்கே வந்து, ஹெலனைச் சரிசெய்ய ஒருவர் கிடைப்பாரா?’ என்று ஹெலனின் அப்பா கேட்டார். டாக்டர் ஜுலியன், ஒருவரை அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்ட ஆசிரியைதான் ஆனி சலிவான்.

ஆனி சலிவான், ஹெலனைத் தேடி வந்தபோது ஹெலனுக்கு ஆறு வயது. பேசினால் கேட்காது, பேசவும் தெரியாது. சமிக்ஞைகளைப் பார்க்கவும் முடியாது. பின் எப்படி அவரோடு தகவல் பகிர்வை மேற்கொள்வது? ஹெலன் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார், ஆனி சலிவான்.
பொம்மை ஒன்றை அவளுக்காக அவர் வாங்கி வந்திருந்தார். அதைப் பார்க்க ஹெலனால் முடியாது. அதற்கு பொம்மை என்று பெயர் என்பதுகூட அவளுக்குத் தெரியாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது என்பதும் ஹெலனுக்குத் தெரியாது. ஆனி பலவாறு முயற்சித்தார். ஜாடி, பொம்மை, மேஜை என்று தொட்டு எவ்வளவு முயன்றாலும் தோல்வியே கிடைத்தது.
ஒருநாள் பொம்மையும் உடைந்து, கண்ணாடி ஜாரும் உடைந்தது. அந்த நொடியில், 'தண்ணீர் குழாயிலிருந்து வந்தது’ என்பதற்கான எழுத்து சமிக்ஞையைக் கையில் தடவியபோது, சட்டென உணர்ந்தாள் ஹெலன். அந்த நொடியிலிருந்து சொற்களைக் கற்க ஆரம்பித்தாள். ஒரு வாரத்துக்கு 1,000 சொற்களைக் கற்றாள் ஹெலன்.
ஆனியும் ஹெலனும் 39 வருடங்கள் ஒன்றாக இருந்து, ஆசிரியர் - மாணவர் உறவுக்கே இலக்கணமானார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகி, ஓர் அறிவு ஜீவியாக வாழ்ந்து 54 புத்தகங்கள் எழுதிய ஹெலன் கெல்லர், சுட்டி நாயகிதான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆதாரம்: ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாறு - ஆனி சலிவான்