மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ஹரன்

##~##

''எங்கே பார்த்தாலும் வறட்சியாக இருக்கிற இந்தக் கோடையில், இப்படி ஓர் இடத்தை நினைச்சே பார்க்க முடியலை'' என்றாள் தீபா.

தீபாவும் மாயா டீச்சரும் அந்த ஆற்றங்கரையின் மணலில் உட்கார்ந்து இருந்தார்கள். தூரத்தில் பசுமையான வயல்வெளி. பரத், பிரசாந்த், சுரேகா மூன்று பேரும் ஆற்றில் உற்சாகத்துடன் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்குத் துணையாக அந்தக் கிராமத்தின் இளைஞன் ஒருவன் இருந்தான்.

''இயற்கையின் பல நிகழ்வுகளைப் புரிஞ்சுக்கவே முடியாது தீபா. இங்கே இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளிப்போனால், கடுமையான வறட்சியில் தவிக்கும் ஊர்கள். ஆனால் இங்கே பார், எவ்வளவு பசுமை!'' என்றார் டீச்சர்.

கோடை விடுமுறைக்காக சுட்டிகளை இந்தக் கிராமத்துக்கு மாயா டீச்சர் அழைத்துவந்திருந்தார். மூவரும் ஆசைதீரக் குளித்து முடித்து வந்ததும், எல்லோரும் நடக்க ஆரம்பித்தார்கள். ஊருக்குள் நுழைந்தபோது, எதிரே கூரை இல்லாத ஒரு மாட்டு வண்டியில் வேறு ஒரு மாட்டைக் கிடத்திக்கொண்டு சிலர் வேகவேகமாக வந்தார்கள். இவர்களுடன் இருந்த இளைஞன், ''மாரி என்ன ஆச்சு?'' என்று கேட்டான்.

''நம்ம முத்துசாமி மாட்டை பாம்பு கடிச்சிருச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறோம்'' என்றான் எதிரே வந்தவர்களில் ஒருவன்.

சுட்டிகள் அந்த வண்டியைப் பார்த்தார்கள். அதில் இருந்த மாட்டின் பெரிய கண்கள் பயத்தில் மேலும் பெரிதாகத் தெரிந்தது. கால்களும் உடலும் வலிப்பு வந்ததைப்போல் உதறிக்கொண்டிருந்தது. ''விரியன் பாம்பு கடிச்சிருக்குங்க. நீங்க வீட்டுக்குப் போங்க. நானும் இவங்களோடு ஆஸ்பத்திரிக்குப் போறேன்'' என்றவாறு அந்த இளைஞன் சென்றுவிட்டான்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''விரியன் பாம்புதான் கடிச்சதுனு இந்த அண்ணன் எப்படிச் சொல்றார்?'' என்று கேட்டாள் சுரேகா.

''அந்த மாட்டின் நெற்றியில் வீக்கமாக இருந்தது. விரியன் பாம்பு கடித்தால், வீக்கம் ஏற்படும். நல்ல பாம்பு கடித்தால் வீக்கம் ஏற்படாது. மாடுகளுக்குப் பெரும்பாலும் தலைப் பகுதியில்தான் பாம்பு கடிக்கும். ஏன்னு சொல்லுங்க'' என்றார் டீச்சர்.

''பாம்பைப் பார்த்ததும் மாடு அதைத் துரத்த நினைச்சு முட்டுற மாதிரிக் குனியும். அப்போ, பயத்தில் பாம்பு மாட்டைக் கொத்திடும்.'' என்றான் பரத்.

''கரெக்ட். சில சமயம் கால் பகுதியில் கடிபடும். அப்படி நடந்தால், இவங்களே கடிபட்ட இடத்தைச் சுற்றி   கயிற்றால் இறுக்கமாகக் கட்டி, கத்தியால் கீறிவிட்டு, விஷத்தை மேலும் பரவாமல் தடுத்துருவாங்க. நெற்றியில் அப்படிச் செய்றது ஆபத்து. கால்நடை ஆஸ்பத்திரியில் ஊசி போட்டு விஷத்தை முறிப்பாங்க. மனிதர் அளவுக்கு பாம்பு விஷம் மாடுகள் ரத்தத்தில் வேகமாகப் பரவாது. ஏன்னா, நம்மைவிட மாடுகள் பலம் வாய்ந்தவை. எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால், இந்த மாடு நிச்சயம் பிழைச்சுரும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டீச்சர், நாமும் போய்ப் பார்க்கலாமே'' என்றான் பிரசாந்த்.

''அவங்க ரொம்பத் தூரம் போய்ட்டாங்களே... சரி, மந்திரக் கம்பளம் இருக்கக் கவலை ஏன்?'' என்ற டீச்சர், கம்பளத்தை எடுத்தார். அது அவர்களைச் சுமந்துகொண்டு வானில் பறந்தது.

'' மாடுகள் இப்படிப் பாம்புக்கடியால் பாதிக்கப்படுவது அபூர்வம்தான். பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றுவதுதான் சவாலான விஷயம்'' என்றார் டீச்சர்.

''மாடுகளுக்கும் நோய்கள் வருமா டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

''நல்லாக் கேட்டே. தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், நச்சு நோய்கள், சத்துக் குறைவு நோய்கள் எனப் பல வகைகள் இருக்கு. நுண்கிருமிகளால் ஏற்படுவது தொற்று நோய்கள். அதில் தீவிரமான தொற்று நோய்கள் எந்தவித அறிகுறியும் இல்லாமலே மாட்டைப் பாதிக்கும். நோய் தாக்கிய சில மணி நேரத்திலேயே மாடுகள் சுருண்டு விழுந்து செத்துரும். மற்ற மாடுகளுக்கும் நோய்ப் பரவும். கவனக்குறைவாக இருந்தால், ஒரு மாட்டுப் பண்ணையே காலியாகிடும். இது இல்லாமல் காய்ச்சல், வயிறு வீக்கம், கண்கள் சிவப்பது எனும் அறிகுறிகளோடு சாகடிக்கும் தொற்று நோய்களும் உண்டு. அப்படி ஒரு இடத்துக்குப் போகலாம் வாங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மந்திரக் கம்பளம் திசை மாறிப் பறந்து, ஒரு வெட்டவெளியில் இறங்கியது. அவர்கள் முகக் கவசத்துடன் நடந்தார்கள். ''மாட்டைத் தொற்றிய நோய், மனிதர்களுக்கும் பரவும். அதுக்குத்தான் இந்த முன்னெச்சரிக்கை'' என்றார் டீச்சர்.

அந்த வெட்டவெளியில் பல இடங்களில் குழிகளை வெட்டி, இறந்த மாடுகளைப்  புதைத்துக்கொண்டு இருந்தார்கள். குழியில் நிறையச் சுண்ணாம்புக் கற்களைப் போட்டார்கள். ''மாட்டைத் தாக்கிய கிருமிகள் சுலபத்தில் மடியாது. மண்ணுக்குள்ளேயே கிருமிகள் இருக்கும். அதுக்குத்தான் சுண்ணாம்புக் கற்களைப் போடுறாங்க. சுண்ணாம்புக் கற்களுக்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை இருக்கு. அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரி நோய்கள் மாடுகளை அடிக்கடி தாக்கும். மேய்ச்சலில் இருக்கும்போதே சுருண்டு விழுந்து இறந்துவிடும். விவசாயிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருந்தது. 1876-ல் ஜெர்மனியின் ராபர்ட் காக் (ஸிஷீதீமீக்ஷீt ரிஷீநீலீ) மற்றும் ஃபிரான்சின் லூயிஸ் பாஸ்டியர் (லிஷீuவீs றிணீstமீuக்ஷீ) என்ற விஞ்ஞானிகள், பாசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் (ஙிணீநீவீறீறீus ணீஸீtலீக்ஷீணீநீவீs) என்ற கிருமி இந்த நோயை ஏற்படுத்துவதைக் கண்டுபிடிச்சாங்க. பிறகு, அதற்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி மாடுகளுக்கு ஏற்படும் பல தொற்று நோய்களுக்கான மருந்துகளைப் பலரும் கண்டுபிடிச்சாங்க'' என்றார் டீச்சர்.

பிறகு, அவர்கள் அங்கே இருந்து கிளம்பினார்கள். ''பொதுவாக ஓர் இடம் ரொம்ப அசுத்தமாக இருந்தால், மாட்டுத் தொழுவம் மாதிரி இருக்குனு சொல்வாங்க. இது, 'மாடுகள் இருக்கிற இடம் அசுத்தமாக இருக்கலாம்’ என்பது மாதிரி இருக்கு. அதுவே தப்பு. மனிதர்கள் மாதிரி மாடுகளுக்கும் தொற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம், சுற்றுப்புறத் தூய்மையின்மையே. அதனால், மாட்டுத் தொழுவத்தையும் தூய்மையாக வெச்சுக்கணும். நோயால் பாதித்த மாட்டைத் தனியாகக் கட்டிவைக்கணும். அந்த மாட்டுக்கு வைத்த தண்ணீர் பாத்திரம், தீவனத்தை வேறு மாடுகளுக்கு வைக்கக் கூடாது.'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அப்போ, தொற்றா நோய்கள் எது?'' என்று கேட்டாள் சுரேகா.

''இதுவும் நம்முடைய அலட்சியத்தால் ஏற்படுவதுதான். பேன், உண்ணி போன்றவை மாடுகளின் உடலில் நீண்ட நாட்களாக இருந்தால், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். மாட்டின் உடலுக்குள் குடல் புழுக்கள், நாடாப் புழுக்கள் இருந்தாலும் மாடு நோயாளியாகிடும். மாட்டை அடிக்கடி குளிப்பாட்டுவது, முறையான தடுப்பு ஊசி மற்றும் மருந்துகளைக் கொடுப்பதன் மூலமாக இதைத் தடுக்கலாம். அங்கே பாருங்க'' என்றார் டீச்சர்.

கம்பளத்தில் பறந்தவாறே கீழே பார்த்தார்கள். ஓர் இடத்தில் மாடுகள் ஆற்றில் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தன. ''இப்படி வெட்டவெளியில் தண்ணீர் குடிக்க விடும்போது கவனமாக இருக்கணும். இந்தக் காலத்தில், பல இடங்களில் தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலந்துடறாங்க. அந்தத் தண்ணீரைக் குடிக்கும் மாடுகளுக்கு நோய்கள் தாக்குது. இதை நச்சு நோய்கள் என்பார்கள். இப்போ, பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துறாங்க. அப்படிப் பயன்படுத்தின புற்களையும் ரசாயனம் கலந்த தீவனத்தையும் கொடுக்கிறதாலும் நச்சு நோய்கள் ஏற்படுது. இதனால் மாடுகளுக்கு சத்துக்குறைபாடும் ஏற்படுது'' என்றார் டீச்சர்.

''சுருக்கமாச் சொன்னால், மனிதர்கள் தங்கள் உடம்பைக் கெடுத்துக்கிறதோடு மாட்டையும் நோயாளி ஆக்குறாங்க'' என்றான் பிரசாந்த்.

''சரியாச் சொன்னே.  பால், விவசாயம் என மனிதர்களுக்கு அதிகமான பலன்களைத் தரும்  மாடுகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களைக் கால்நடை மருத்துவமனையில் இறக்கியது. பாம்பு கடித்த மாட்டுக்கு விஷ முறிவு மருந்தைக் கொடுத்து பிழைக்கவைத்துவிட்டார்கள். அந்த மாடு தெம்புடன் நடக்க, எல்லோரின் முகங்களிலும் மகிழ்ச்சி.

கிராமத்துச் சுட்டிகளுடன் சேர்ந்து நம்ம சுட்டிகளும் அந்த மாட்டின் பின்னால் உற்சாக ஊர்வலம் சென்றார்கள்.