ஆயிஷா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா
##~## |
ராமசாமி என்றால், அந்தப் பையனை ஊரில் எல்லோரும் அறிவார்கள். பெரிய வியாபாரியின் பிள்ளை என்பதால் அல்ல, எதையும் கேள்வி கேட்டு ஆளைக் கிடுகிடுக்கவைத்துவிடுவான்.
''வீட்டில் அம்மாதான் சமையல் செய்து, பாத்திரம் விளக்க வேண்டுமா... ஏன்?'' என்று கேட்டபோது ராமசாமிக்கு வயது 4. அவன் கேட்பதோடு நிறுத்துவதில்லை. தாய் முத்தம்மா பதறிப்போகும் அளவுக்கு அண்ணன் கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து கிணற்றடியில் பாத்திரம் கழுவுவான்.
தான் படித்த பள்ளிக்கூடத்தில் சேரி மாந்தரை வகுப்பு அறைக்குக் கூட்டிச்சென்று ''ஏழையும் சாக்கடை தள்ளும் சாதாரணமானவர்களும் படிக்க முடியாத படிப்பு தனக்கு எதற்கு?'' எனக் கேட்டான்.
ஆறு வயதில் ராமசாமியிடம் சுயமரியாதை கொழுந்துவிட்டு எரிந்தது. சாக்ரடீஸாக வேடமேற்று பள்ளி விழாவில் 'எதையும் ஏன்... எதற்கு என்று கேள்’ 'உன்னையே நீ அறிவாய்’ என முழங்கினான். 'இது நடிப்புபோல் இல்லை. தத்ரூபமாக உள்ளது’ என அனைவரும் பாராட்டினார்கள். அவன் அந்த வசனங்களை நிஜ வாழ்க்கையிலும் எதிரொலிக்கவைத்தான்.
கோயிலில் எல்லாரும் சாமி கும்பிடப் போக முடியாதது ஏன்? கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் சாதி பார்க்கும் கொடுமை ஏன்? நமக்காக உழைக்கும் மக்களைத் தொட்டால் தீட்டு என்பது ஏன்?’ - இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளை அந்தச் சின்ன வயதில் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான்.

ராமசாமியின் அப்பா வெங்கடப்ப நாயக்கர் வீட்டிலேயே வைணவ குருமார்களை வரவழைத்து, சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழுமாகப் பிரபந்தங்களை ஒலிக்கச் செய்து அவர்களுக்குச் சன்மானங்களை வாரி வழங்கினார். இவன் அந்தப் பிரபந்தங்களை எல்லாம் கற்றான்.
எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த அவனுக்கு, மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் மீது மேலும் மேலும் கேள்விகளே முளைத்தன. அவனது ஒன்பதாவது வயதில் ஒருநாள் வீட்டில் வைணவ குருமார்கள் வந்திருந்தார்கள். நேரடியாக அவர்களிடம் சென்று ''அம்மன் சாமிகளை ஆராதிக்கும் சமூகம், விதவைப் பெண்களை அவமானம் செய்வது ஏன்? நந்தனாரைக் கும்பிடும் மேல் சாதி, தீண்டாமையைக் கடைப்பிடிப்பது ஏன்?'' என்று கேட்டு, தனது முதல் பகுத்தறிவுப் பிரசங்கத்தைத் தொடங்கினான்.
உலக மக்கள் யாவரையும் ஒன்றாக நடத்தும், வேறுபாடும் பாகுபாடும் காட்டாத ஒரு கடவுளைக் காட்டுங்கள், இல்லையேல் கடவுளையே புறக்கணிப்போம்’ என முழங்கினான்.
பகுத்தறிவு, பெண் விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் என விரிந்தது. பின்னாட்களில் பகுத்தறிவுப் பகலவனாக, ஆசியாவின் சாக்ரடீஸாக, தந்தை பெரியாராக உயர்ந்தான் அந்தச் சிறுவன்.