மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

##~##

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நான் மாயா டீச்சர் பேசறேன். இதுவரைக்கும் என்னோடு மந்திரக் கம்பளத்தில் பறந்து, பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்ட தீபா, சுரேகா, பரத், பிரசாந்த் இனி வர மாட்டாங்க. காரணம், அவங்க பெரிய கிளாஸுக்குப் போயிட்டாங்க. அப்படிப் போறப்ப அவங்களுக்குத் தெரிஞ்ச ஜூனியர் சுட்டிகளை ரெகமன்ட் பண்ணி இருக்காங்க. அவங்களை அறிமுகப்படுத்திக்கங்க. இனி, அந்தக் குட்டிச் சுட்டிகளோடு, புதுப்பொலிவோடு மந்திரக் கம்பளத்தில் பறக்கலாம். விஷயங்களும் சிம்பிளா இருக்கும். ஓ.கே!

ஜூனியர்களின் முதல் பயணம்  என்பதால், நான்கு பேரும் மந்திரக் கம்பளத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டு ஏறினார்கள். ''எலுமிச்சம் பழம் சுத்தலியா?'' எனக் கேட்டுச் சிரித்த மாயா டீச்சர், ''ரெடி ஜூட்'' என்றார். மந்திரக் கம்பளம் பறந்துவந்து இறங்கிய இடம், ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதி.

அவர்கள் ஓர் ஒட்டகச்சிவிங்கி யின் காலடியில் நின்றார்கள். ''நேத்து டி.வி-யில் ஒட்டகச்சிவிங்கி பற்றி டாக்குமென்டரி பார்த்தேன். அதுதான் ஆப்பிரிக்காவின் விருந்தாளிகளா உங்களைக் கூப்பிட்டு வந்திருக்கேன். ஒட்டகச்சிவிங்கிகள் இருப்பது இங்கேதான். இதன் ஆரம்பப் பெயர், ஜராஃபா (ஞீணீக்ஷீணீயீணீ). லத்தீன் மொழியில் ஜிராஃபா (நிவீக்ஷீணீயீயீணீ ) எனப்பட்டது. பிறகு, ஆங்கிலத்தில் ஜிராஃபி (நிவீக்ஷீணீயீயீமீ) என்று மாறியது'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இதோட உயரம் எவ்வளவு டீச்சர்? நிமிர்ந்து பார்க்கவே கழுத்து வலிக்குது.'' என்றாள் ஷாலினி.

''ரொம்பக் கஷ்டமா இருந்தா இப்படி மாறிடலாம்'' என்று டீச்சர் சொல்ல, அடுத்த நொடி அவர்களின் கால்கள், கழுத்து நீண்ண்ண்ண்டு ஒட்டகச்சிவிங்கியின் உயரத்துக்கு வந்துவிட்டார்கள். ''வாவ்'' எனக் கத்தினான் கதிர்.

மந்திரக் கம்பளம், ஒரு பெரிய ஸ்கேலாக மாறியது. ''அளந்து பாருங்க'' என்றார் டீச்சர். அளந்து பார்த்த ஷாலு, ''ஐந்தரை மீட்டர்'' என்றாள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''உலகின் உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கிதான். சராசரியாக 6 மீட்டர் உயரம். முன் கால்களைவிடப் பின் கால்களின் நீளம் குறைவு. இவற்றின் சராசரி எடை 900 கிலோ. பெண் ஒட்டகச்சிவிங்கிகள், ஆணைவிட உயரத்திலும் எடையிலும் குறைவாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

அப்போது ஒட்டகச்சிவிங்கி நீளமான நாக்கை நீட்ட, ஸ்கேல் பழையபடி மந்திரக் கம்பளமாக மாறி, ஒட்டகச்சிவிங்கியிடம் சிக்காமல் எஸ்கேப் ஆனது. ஏமாந்த ஒட்டகச்சிவிங்கி, நாக்கால் தனது காதைக் குடைவதுபோல் செய்துவிட்டு, மீண்டும் வாய்க்குள் இழுத்துக்கொண்டது. ''என்ன டீச்சர், நாக்கு இவ்வளவு கறுப்பா இருக்கு. ஏதாவது நோயா?'' என்று கேட்டாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இல்லை கயல். நாக்கின் நிறமே அப்படித்தான். ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு 21 இன்ச் இருக்கும். இந்த நாக்கால்  காதுகளைச் சுத்தம் செய்துகொள்ளும். சரி, இப்படி வெளியிலேயே பார்த்துட்டு இருந்தால் எப்படி? உள்ளே போகலாம்''

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

என்றார் டீச்சர்.

''இது என்ன எக்ஸிபிஷனா? நான் வர மாட்டேன்'' என்று பயத்துடன் சில அடிகள் பின்னால் நகர்ந்தான் அருண்.

''பயப்படாமல் வாடா'' என்று மற்ற மூவரும் பிடித்து இழுக்க, மந்திரக் கம்பளம் அவர்களைச் சுருட்டிக்கொண்டு ஒட்டகச்சிவிங்கியின் உடம்புக்குள் நுழைந்தது.

''இதுதான் ஒட்டகச்சிவிங்கியின் இதயம். 11 கிலோவும், 2 மீட்டர் நீளமும் இருக்கும். நிமிடத்துக்கு 150 முறை துடிக்கும். நிமிடத்துக்கு 600 லிட்டருக்கும் மேல் ரத்தத்தை பம்ப் செய்யும்'' என்றார் டீச்சர்.

ரத்தக் குழாய், இரைப்பை என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வெளியே வந்தார்கள். ''ஒண்ணு தெரியுமா? ஒட்டகத்தைவிட ஒட்டகச்சிவிங்கியால் தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்கள் இருக்க முடியும். இலைகள் தவிர, பழங்களையும் விரும்பிச் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.

அவர்கள் மெதுவாக நடந்து ஓர் இடத்துக்கு வர, அங்கே ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கி, குட்டியை ஈன்றுகொண்டிருந்தது. ''ஒட்டகச்சிவிங்கியின் கர்ப்பக் காலம் 15 மாதங்கள். நின்றபடிதான் குட்டியைப் பிரசவிக்கும். பிறந்த குட்டி 2 மீட்டர் உயரம் இருக்கும். பிறந்த கொஞ்ச நேரத்திலேயே எழுந்து ஓடும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அப்படி ஓடிய குட்டியை நான்கு பேரும் வளைத்துப் பிடித்தார்கள். ஆளாளுக்கு தூக்கிக் கொஞ்சினார்கள். ''போதும் விட்டுருங்க'' என்று டீச்சர் சொல்ல, கீழே இறக்கிவிட்டார்கள்.

அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் தூரம்தான் நடந்திருப்பார்கள். அப்போது ஒரு புதர் மறைவிலிருந்து பாய்ந்துவந்த ஒரு சிறுத்தை, குட்டியைக் கவ்விக்கொண்டு சென்றது. ''ஐயையோ, என்ன டீச்சர் இப்படி ஆகிடுச்சு'' என்ற சுட்டிகளின் குரலில் வருத்தம்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஒட்டகச்சிவிங்கி, பலமான விலங்குதான். முழுமையாக வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியை ஒரு விலங்கு தாக்கிக் கொல்வது மிக அபூர்வம். எதிரியைத் தனது கால்களால் உதைத்துத் தள்ளிவிடும். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைவதற்குள் சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி, ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள் எனப் பல விலங்குகள் இவற்றை வேட்டையாடிவிடும். இதனால் 100 குட்டிகளில் 50 குட்டிகள்தான் தப்பிப் பிழைத்து பெரியதாகும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அவர்கள் மந்திரக் கம்பளத்தில் ஏறிக்கொள்ள, அது வீடு நோக்கிப் பறந்தது.