Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 3

அணிலாடும் முன்றில்
News
அணிலாடும் முன்றில்

ஐயோ... அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் அவளது மருதாணி விரல்களை இனிமேல் பார்க்க முடியாதா?

அக்கா

'கொலு வைக்கும் வீடுகளில் ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்கும் என்று தங்கச்சி பாப்பாக்களை தூக்க முடியாமல் தூக்கி வரும் அக்கா குழந்தைகள்!’
கலாப்ரியா

'அஞ்சறைப் பெட்டியின் மிளகும் சீரகமும் பேசிக்கொண்டன. மிளகு கேட்டது, 'ஏன் இந்த வீட்டில் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்?’

சீரகம் சொன்னது, 'இந்த வீட்டுப் பெண்ணுக் குக் கல்யாணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவனுடன் வேறு வீட்டுக்குச் செல்லப்போகிறாள்.’

மிளகின் குரலில் காரம் குறைந்தது. 'ஐயோ... அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் அவளது மருதாணி விரல்களை இனிமேல் பார்க்க முடியாதா?’

கூடத்தில் ஜன்னல் அருகே நின்று இருந்த தையல் மெஷினைப் பார்த்துக் கீழே சிதறி இருந்த துணித் துணுக்குகள் கேட்டன. 'அப்படியா? சீரகம் சொல்வது உண்மையா?’

அணிலாடும் முன்றில்
அணிலாடும் முன்றில்

தையல் மெஷின் வருத்தத்துடன் பதில் அளித்தது, 'ஆமாம். இனி, அவளின் கொலுசுக் கால்களுடன் நாம் கதை பேச முடியாது. அவள் யாரோ ஒருவனுடன் மணமாகி, எங்கோ போகிறாள். எத்தனையோ முறை தையல் ஊசி என்னைக் குத்தி இருக்கிறது. அப்போது எல்லாம் வலித்தது இல்லை. இந்த வலி, வேறுவிதமாக இருக்கிறது!’

ஆங்காங்கே பாதரசம் உதிர்ந்து இருந்த நிலைக் கண்ணாடி கொஞ்சம் கர்வத்துடன் சொன்னது, 'கவலைப்படாதீர்கள். கடைசியாக அவள் என்னைத்தான் பார்த்தாள். அவள் உருவத்தை நான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். நாம் எப்போது வேண்டுமானாலும் அவளைப் பார்க்கலாம்.’

நான் இந்த உரையாடல்களைக் கேட்டபடி கூடத்தில் இருந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். மொட்டை மாடியில் புகைக் கூண்டில் சாய்ந்தபடி நண்பன் அமர்ந்து இருந்தான். பால்ய கால நண்பன். பக்கத்து வீட்டில் வசிப்பவன். எட்டாம் வகுப்பு வரை அவனும் நானும் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு, அவன் ஃபெயிலாகி பட்டுத் தறி நெய்யச் சென்றுவிட்டான். அவனது அக்கா வுக்குத் திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பிய நாள் அது. அவன் முகம் அழுத மாதிரி இருந்தது. சுற்றிலும் உதிர்ந்துகிடந்த வேப்பம் பூக்களில் எறும்புகள் மொய்த்துக் கொண்டு இருந்தன. ''டேய், இங்கதான் இருக்கியா? எல்லோரும் உன்னைத் தேடுறாங்க. அக்கா கிளம்பப்போகுது வாடா'' என்றேன். ''என்னமோ மாதிரி இருக்குடா'' என்றபடி எழுந்து வந்தான்.

வாசலில் ஒரு வாடகை கார் நின்று இருந்தது. உறவினர்கள் கூடி வழி அனுப்பிவைக்க, காரில் எல்லோருக்கும் கையாட்டிக்கொண்டு இருக்கும்போது, சட்டென்று உடைந்து அக்கா அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றி அனுப்பிவைக்கப் பெரும்பாடாகிவிட்டது. தெருக் கோடியில் புள்ளியாகி கார் திரும்பியது. எல்லா அக்காக்களையும் போலவே, பக்கத்து வீட்டு அக்காவும் கல்யாணமாகிக் காணாமல் போனாள்.

இனி, அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல; அக்கா வந்து போகும் வீடு.

அக்காக்கள் இல்லாத வீடு அரை வீடு. ஹாலில் ஆணியால் கீறிய தாயக் கட்டங்களில் இனி மதிய உணவுக்குப் பிறகான இடைவேளையில் காய்கள் நகரப்போவது இல்லை. 'ஓராறு மூ பன்னெண்டு’ என்று சீரான லயத்துடன் ஒலிக்கும் குரலைக் கேட்க வரும் மஞ்சள் பட்டாம்பூச்சி வெறுமையுடன் திரும்பப்போகிறது.

அணிலாடும் முன்றில்! - 3

முற்றத்தில் உதிர்ந்த பவழ மல்லியைப் பொறுக்கிக்கொண்டே தான் பார்த்த திரைப் படங்களின் கதையை டைட்டிலில் தொடங்கி, சண்டைக் காட்சியின் சிறப்புச் சத்தங்கள் வரை துல்லியமாகச் சொல்லும் அக்காவைக் காணாமல் மாலைச் சூரியன், தன் வெளிச்சத்தைச் சுருட்டிக்கொண்டு இரவின் இருட்டில் கரையப்போகிறான்.

ஒன்றை ஒன்று பார்த்தபடி அழகாகத் தலையணை உறைகளில் அக்கா எம்ப்ராய்டரியில் வரைந்த வாத்துகள், ஸ்வீட் ட்ரீம்ஸ் இல்லாமல் ஞாபக அலைகளில் நீந்தப்போகின்றன.

புதையல் அள்ள ஆள் இல்லா மல், காலிக் குழியுடன் காத்து இருக்கும் பல்லாங்குழிக்கும்; தனிமைக் காற்றில் ஆடும் தோட்டத்து ஊஞ்சல் பலகைக்கும்; சன்னமான குரலில் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ எனக் கூடவே முணுமுணுக்கும் பழைய வானொலிப் பெட்டிக்கும்; கிளிப் பச்சைத் தாவணி காயாத கொடிக் கயிற்றுக்கும்; அக்கா இல்லாத செய்தியை யார் போய் சொல்லப்போகிறார்கள்?

நான் அக்கா தங்கைகளுடன் பிறக்காதவன். தம்பிகளுடன் வளர்ந்தவன். எங்கள் வீட்டில் நான் இருந்ததைவிட, நண்பர்கள் வீட்டில்தான் எப்போதும் இருப்பேன். நண்பர்களின் அக்காக்கள் நமக்கும் அக்காதானே? என் ஆளுமையின் ஒவ்வோர் அணுவிலும் நண்பர்களின் அக்காக்கள் நிறைந்து இருக்கிறார்கள்.

நான் ப்ளஸ் டூ படித்துக்கொண்டு இருந்த காலத்தில் ஒரு மழைநாள். மழை நிற்கும் வரை ஒரு மரத்தடியில் சைக்கிளுடன் நண்பர்கள் நின்று இருந்தோம். கனவுகளில் மிதந்த வயது அது. ஒரு சிகரெட்டைக் கொஞ்சம் பிடித்துவிட்டுப் பாதியை நண்பன் தர... ஸ்டைலாகப் புகைவிட்டபடி திரும்பிப் பார்க்கிறேன், குடை பிடித்தபடி சாலையில் நடந்து செல்லும் எஸ்தர் அக்கா என்னையே முறைத்தபடி செல்கிறது. அதற்குப் பிறகு, அந்த அக்கா ஒரு வாரம் என்னிடம் பேசவில்லை. அந்த அக்காவுடன் சர்ச்சுக்குச் சென்று மண்டியிட்டு... 'இனி, சிகரெட் பிடிக்க மாட்டேன்’ எனச் சொல்லிய பிறகே, பேச ஆரம்பித்தது. இன்றும் பதற்றமான நேரங்களில் புகை பிடிக்கும்போது எல்லாம் மனசு பால்ய வயதுக்குள் நுழைந்து, அந்த அக்காவுடன் கர்த்தர் முன் மண்டியிடுகிறது. அக்காவும் ஆண்டவரும் மன்னித்தாலும், என் குற்ற உணர்வில் இருந்து நான் விடுபடப்போவது இல்லை.

அணிலாடும் முன்றில்! - 3

ன்னோர் அக்கா தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை 'யாருகிட்டயும் சொல்லக் கூடாது’ எனச் சத்தியம் வாங்கிக்கொண்டு என்னிடம் படிக்கக் கொடுத்தது. என் வாழ்வில் நான் படித்த முதல் காதல் கடிதம். பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இருந்தது. 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நீ என்னையே பார்ப்பதாகச் சொல்கிறார்கள். நீ என்னைப் பார்ப்பது எனக்கும் தெரியும். எப்போதுதான் பேசப் போகிறாய்? உனக்காகத்தான் நான் தினமும் பெருமாள் கோயில் மைதானத்துக்கு கிரிக்கெட் ஆட வருகிறேன். எவ்வளவு காலம் என்னைத் தவிக்கவிடுவாய். நீர் இல்லாமல் மீன் இல்லை. நீ இல்லாமல் நான் இல்லை. உன்னையே நினைத்து நினைத்து சாப்பிடப் பிடிக்கவில்லை. தூங்கப் பிடிக்கவில்லை. பைத்தியம்தான் பிடிக்கிறது. உனக்கு என்னைப் பிடிக்கிறது என்றால், நாளைக்கு ஆரஞ்சு கலர் தாவணி போட்டுக்கொண்டு வா... காத்திருப்பேன்'' என்று எழுதி, ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தது.

''இப்ப என்னடா பண்ணலாம்?'' என்றது அந்த அக்கா.

''உனக்குப் பிடிச்சிருக்கா?'' என்றேன்.

''தெரியல... யெஸ் சொல்லவா? நோ சொல்லவா?'' என்று தானும் குழம்பி, என்னை யும் குழப்பியது.

''பேசாம நோ சொல்லிருக்கா!''

''ச்சீ... பாவம்டா!''

''அப்ப... யெஸ் சொல்லு!''

''ஐயோ, பயமா இருக்குடா!''

''வேணும்னா டாஸ் போட்டுப் பார்க்கலாம்'' என்றேன்.

''நல்ல ஐடியா.... நீ கௌம்பு!'' என்றது.

அன்று காற்றில் ஆடிய அந்த நாணயத்தில் இருந்து பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று அந்த அக்காவுக்குத்தான் தெரியும். ஆனால், அதற்கடுத்த மூன்றாம் மாதம் அந்த அக்காவுக்கு அவசர அவசரமாகத் திருமணம் ஆனது. கல்யாண வரவேற்புக்குப் பரிசளிக்க நண்பர்கள் சேர்ந்து பால் குக்கர் வாங்கலாமா? வால் கிளாக் வாங்கலாமா? என்று பட்டிமன்றம்வைத்து, கடைசியில் கப் அண்ட் சாஸர் வாங்கிக் கொடுத்தோம். அந்த அக்கா என் கையைப் பிடித்து அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது. அக்காவின் கைக்குட்டையில் இருந்து என் கைவிரல்களை ஈரமாக்கியது கண்ணீர்த் துளிகளா? வியர் வைத் துளிகளா என்பதை இன்று வரை நான் அறிந்தேன் இல்லை.

வேறு ஓர் அக்கா, எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  மழைக் காலங்களில் தன் கிராமத்தில் இருந்து பொரி அரிசியுடன் சேர்த்து ஈசல் வறுத்து எடுத்துக்கொண்டு வரும். உண்மையில் பொரி அரிசியுடன் வறுபடும் ஈசல்களே ஆரம்பித்துவைக்கின்றன மழையின் வாசனையையும். சாணி கொட்டிவைத்து இருக்கும் எருக் குழிகளில் ஈசல் பிடித்த கதையை அந்த அக்கா சொல்லச் சொல்ல... நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஓவியம் வரைவதில் அந்த அக்காவுக்கு அவ்வளவு ஆர்வம். என் ஜுவாலஜி ரெக்கார்ட் நோட்டில் உள்ள படங்களை எல்லாம் வரைந்து கொடுத்தது அந்த அக்காதான். அது தவளை வரைந்தால், அதன் கால்களில் குளக்கரையின் சேறு இருக்கும். அவ்வளவு துல்லியமும் ரசனையும் கொண்ட படங்கள் அவை. இன்னமும் அந்த நோட்டுகளைப் பத்திரப்படுத்திவைத்து இருக்கிறேன். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ எழுதிய ஹைக்கூபோல அந்த அக்காவின் ஞாபகங்கள்.

'பழைய குளம் தவளை குதிக்கிறது க்ளக் க்ளக்...’

இன்னும் இன்னும் நண்பர்களின் அக்காக்கள் தவிர்த்து, ப்ரியங்களில் மழை செய்யும் பெரியம்மா பெண்கள் என எத்தனையோ அக்காக்கள்.

என்னை நானாக்கிய எல்லா அக்காக்களுக்கும் என் அனந்த கோடி நன்றிகள்!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan