மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 09

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##
சி
னிமாப் பாடல்கள்தான் என்னை சினிமாவுக்கு வரத் தூண்டின என்று சொல்ல லாம். சம்பிரதாயமான இசை உலவும் சூழலில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், சினிமா இசை கேட்பதில் எங்கள் குடும்பத்தில் தடை ஏதும் இல்லை. தொலைக்காட்சி, பண்பலை வானொலி வசதிகள் இல்லாத காலத்தில், இலங்கை வானொலிதான் திருநெல்வேலி மக்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருந்தது. தமிழ் திரைக் கலைஞர்களின், திரைப்படங்களின் பெயர்களை இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் கேட்கும்போது, தமிழ் எவ்வளவு அழகான மொழி என்பது நமக்குப் புரியும்.
மூங்கில் மூச்சு! - 09

மயில்வாகனன் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீத் என அத்தனை அறிவிப்பாளர்களுக்கும் ஒவ்வோர் வீட்டிலும் ரசிகப் பட்டாளம் உண்டு. முகம் தெரியா அந்த அறிவிப்பாளர்களுக்கு, ஆளாளுக்கு அவரவர் ரசனைக்கு ஏற்ப கற்பனையாக உருவம் கொடுத்துவைத்து இருப்பார்கள். வெகுகாலம் கழித்து பி.ஹெச்.அப்துல் ஹமீதின் உருவம் எனக்குத் தெரிய வந்தபோது, அநியாயத்துக்கு ஏமாந்துபோனேன். அதுநாள் வரை என் மனதில் இருந்த அப்துல் ஹமீத், எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹேர் ஸ்டைலுடன் முரட்டு கதர் வேட்டி, சட்டையில் இருந்தார். (மேல் துண்டும் உண்டு) மின்னல் அடிக்கும் பளபள வழுக்கைத் தலையுடன். எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை ஹாலில் காப்பி அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க வரும் பறக்கும் படை ஆபீஸர் மாதிரி, டிப்டாப் உடை அணிந்த அப்துல் ஹமீதை இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மற்ற இலங்கை அறிவிப்பாளர்களின் உண்மையான உருவம் எனக்குத் தெரியாமலே போனது, ஒரு மாதிரியான நிம்மதியை அளிக்கிறது!

மூங்கில் மூச்சு! - 09

பொங்கும் பூம்புனல், நீங்கள் கேட்டவை, மலர்ந்தும் மலராதவை, புது வெள்ளம், பாட்டுக்குப் பாட்டு என மனதுக்குப் பிடித்த பல நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானாலும், என் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி, நட்சத்திர அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா வழங்கும் திரை விருந்துதான். 'வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக் கருவி முன் ஆவலுடன் குழுமி இருக்கும் ரசிகப் பெருமக்க ளுக்கு எனதன்பு வணக்கம்’ என்று கே.எஸ். ராஜா வணக்கம் சொல்லும்போது, தோசை கரைத்துக்கொண்டு இருக்கும் மீனாட்சி அக்காள் மாவுக் கைகளுடன் பதில் வணக்கம் சொல்லுவார். 'அவாள் நம்மகிட்டெயே நேர்ல சொல்லுத மாதிரி இருக்குல்லா?’ என்பார். ஒரு படத்தின் வசனப் பகுதிகளை ஒலிபரப்பும்போது, முக்கியமான வசனத்துடன், தான் உரையாடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதில் பெரும் வரவேற்பும் வெற்றியும் பெற்றவர் கே.எஸ்.ராஜா.

'மீனவ நண்பன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் ஒரு வசனத்தைப் போட்டு 'என்ன சொல்கிறீர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களே?’ என்பார். உடனே, இவர் கேள்விக்காகவே காத்து இருந்த மாதிரி 'அந்த ஏழை ஒங்ககிட்டெ சொத்தக் கேட்டானா, சொகத்தக் கேட்டானா? கேவலம் ஒரே ஒரு ரொட்டித் துண்டு’ என்ற நிதானமாகப் பதில் அளிப்பார் எம்.ஜி.ஆர். வீடாக இருந்தாலும், ரத்னா தியேட்டர் மாதிரி படபடவெனக் கைதட்டல் சத்தம் கேட்கும். இதேபோல இலங்கையில் நீண்ட நாட்கள் ஓடி சாதனை புரிந்த படங்களின் வரிசையில் 'நீயா’ படத்து ஸ்ரீப்ரியாவும், 'கடல் மீன்கள்’ படத்து கமல்ஹாசனும் கே.எஸ்.ராஜாவின் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டே வேறு வேலை பார்க்கப் போவார்கள்.

தர வரிசையில் நீண்ட நாட்கள் முன்னணியில் இருந்த பாடல்களில் இன்றளவும் என் நினைவில் உள்ள பாடல் 'சங்கிலி’ திரைப் படத்தின் 'நல்லோர்கள் வாழ்வைக் காக்க’ என்ற பாடல்தான். அப்போது எல்லாம் இலங்கை வானொலியில் அந்தப் பாடலைத்தான் புத்தாண்டு அன்று ஒலிபரப்புவார்கள். சிவாஜி ஸ்டைலில் நம்மிடம் பாடலுக்கு இடையே டி.எம்.சௌந்தர்ராஜன் 'ஹே... ப்பி நியூ... இய...ர்’ என்று சொல்லுவார். அதன் பிறகு, 'சகலகலா வல்லவன்’ வந்தது. இன்று வரை 'இளமை... இதோ இதோ’ பாடல்தான் புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல். 'சங்கிலி’ திரைப்படப் பாடலுக்குப் பிறகு, நீண்ட நாட்கள் இலங்கை வானொலியின் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த பாடல், 'நிழல்கள்’ திரைப்படத்தின் 'பொன்மாலைப் பொழுது’.

மூங்கில் மூச்சு! - 09

பல புகழ் பெற்ற தமிழ் சினிமாப் பாடல்களை எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலிதான். வாணி ஜெயராமை மிகச் சரியாகத் தமிழ் மக்களிடம் கொண்டுசேர்த்த 'தீர்க்க சுமங்கலி’ படத்தின் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலை நான் முதன்முதலில் இலங்கை வானொலியில்தான் கேட்டேன். அந்தப் பாடல் தான்சேன் விருது பெற்ற பாடல் என்ற தகவலைச் சொல்லி, அதன் பிறகுதான் ஒலிபரப்புவார்கள். இளையராஜாவின் முதல் டூயட் பாடலான 'லட்சுமி’ படத்தின் 'தென்ன மரத்துல தென்றலடிக்குது’ பாடலை இலங்கை வானொலி சொல்லிச் சொல்லி ஒலிபரப்பியது. அது போக 'காற்றுக்கென்ன வேலி... ’('அவர்கள்’), 'மதன மாளிகையில்...’ ('ராஜபார்ட் ரங்கதுரை’), 'ஆடி வெள்ளி...’ ('மூன்று முடிச்சு’), 'கண்டதைச் சொல்லுகிறேன்...’ ('சில நேரங்களில் சில மனிதர்கள்’), 'ராதா காதல் வராதா...’ ('நான் அவனில்லை’) எனப் பல பாடல்களை இப்போது கேட்டாலும், எனக்கு ராஜேஸ்வரி சண்முகத்தின் அறிவிப்புக் குரலுடன்தான் கேட்க முடிகிறது.

இலங்கை வானொலியின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியைத் தவறாமல் திருநெல்வேலி மக்கள் கேட்டு வந்தார்கள். பொப்பிசைப் பாடல்கள் என்னும் நிகழ்ச்சிதான் அது. அந்த நிகழ்ச்சியில் இலங்கையில் உள்ள பாடகர்கள் பாடும் துள்ளலிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ’ என்னும் பெரும் புகழ் பெற்ற பாடலை நித்தி கனகரத்தினம் பாடியிருப்பார். 'அட, வாடா மருமகா என் அழகு மன்மதா, பள்ளிக்குத்தான் சென்றாள்... படிக்கத்தான் சென்றாள்’ என இந்தப் பாடலில் பெண் பாட வேண்டிய வரிகளும் ஆண் குரலிலேயே பாடப்பட்டு இருக்கும். தமிழ்த் திரை இசைப் பாடல்களுக்கு ஈடாக இந்தப் பாடலும் அவ்வளவு புகழ் பெற்று இருந்தது. நயினார்குளம் பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டு பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண்களைப் பார்த்து அப்போதைய அண்ணன்கள் பாடுவதைப் பார்த்து இருக்கிறேன். அநேகமாக எல்லா அக்காக்களும் சிரித்தபடியேதான் பஸ்ஸில் ஏறிச் செல்வார்கள்.

அம்மன் சந்நிதியிலும் கீழப் புதுத் தெருவிலும் 'நேயர் விருப்பம்’ நிகழ்ச்சியில் விருப்பப் பாடலை எழுதி போட்டுவிட்டுக் காத்திருக்கும் எத்தனையோ பேரை என் சிறு வயதில் சந்தித்து இருக்கிறேன். அப்படி அடிக்கடி இலங்கை வானொலிக்கு நேயர் விருப்பக் கடிதம் எழுதும் ஒரு பெண்மணியைப்பற்றி 'வீட்டுக்கார சொர்ணத்தாச்சி’ என்ற சிறுகதையில் எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். 'நேத்து நேயர் விருப்பத்துல 'தவப்புதல்வன்’ பாட்டு போடும்போது மாமா பேரக் கேட்டியாடே மருமகனே?’ எனத் திரவியம் மாமா ஒரு முறை கேட்டார். 'இல்லையே மாமா’. 'ஒண்ணும் பிரச்னை இல்ல. நாளைக்கு வீட்டுக்கு வா. 'உயர்ந்த மனிதன்’ பாட்டு கேட்டு இருக்கேன். அதுல சொல்லுவான். வந்து கேளு.’ மறு நாள் மாமா சொன்ன மாதிரியே 'உயர்ந்த மனிதன்’ படத்தில் இருந்து 'வெள்ளிக் கிண்ணம்தான் தங்கக் கைகளில்’ என்ற பாடலை ஒலிபரப்பினார்கள். அதற்கு முன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்லப்பட்ட நூற்றுச் சொச்சப் பெயர்களில் திரவியம் மாமாவின் பெயரைக் கவனிக்கத் தவறினேன். 'சுத்தமல்லி வசந்தாக்கு முன்னாடி நெல்லை பி.திரவியம்னு சொன்னான். கவனிச்சியா?’ பாட்டை அவரும் கேட்காமல், என்னையும் கேட்கவிடாமல் அடுத்த பாட்டு வரும் வரை மாமா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

அப்போது எல்லாம் வீட்டில் ரேடியோ இருப்பதே ஒரு கௌரவமான விஷயம். சின்ன டிரான்ஸிஸ்டர்களுக்கு அப்படி ஒரு மவுசு. வீட்டில் ரேடியோ இல்லாதவர்கள், ரேடியோ உள்ளவர்கள் வீட்டுக்குச் சென்று பாட்டு கேட்ட கதையை இப்போது உள்ள தலைமுறையினர் நம்ப மறுக்கக்கூடும். அம்மன் சந்நிதியில் இருந்து மாடத் தெருவுக்கு (இதற்கு அறம் வளர்த்த புது மாடத் தெரு என்று பெயர். அங்கு எப்படி அறம் வளர்த்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக் கொன்றை’ நாவலைப் படித்துப் பாருங்கள்) ஒரு சின்ன முடுக்கு (சந்து) போகும். அது வழியாக கணேசண்ணனும், நானும் சென்றபோது, ஒரு வளவு சேர்ந்து வீட்டில் நான்கைந்து பெண்கள் உட்கார்ந்து பீடி சுற்றிக்கொண்டு இருந்தார்கள். இலங்கை வானொலியில் 'புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் 'வான் மேகங்களே’ ஒலித்துக்கொண்டு இருந்தது. 'பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா’ என்னும் வரியை பாடிக்கொண்டே அந்தப் பெண்கள் பீடி சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த கணேசண்ணன் சொன்னான். 'அடுத்த ஜென்மத்துல இந்த பீடி சுத்தற பொம்பளைங்களா பொறக்கணும்டே. வாழ்க்கைய என்னமா அனுபவிக்காளுவ பாத்தியா’. கணேசண்ணனின் வீட்டில் ரேடியோ இல்லை.

தினமும் ரேடியோ கேட்க எங்கள் வீட்டுக்குத்தான் வருவான் கணேசண்ணன். சினிமாப் பாடல்கள் போக இலங்கை வானொலியின் 'ஒலிச் சித்திரம்’ நிகழ்ச்சியும் அவனுக்குப் பிடித்தமான ஒன்று. ரிக்கார்ட் தேயும் அளவுக்கு மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்படும் 'திருவிளையாடல்’, 'தில்லானா மோகனாம்பாள்’, 'வசந்த மாளிகை’, 'தியாகம்’, 'நினைத்தாலே இனிக்கும்’, 'நிறம் மாறாத பூக்கள்’ போன்ற படங்களின் வசனங்களில் நாங்கள் ஏதும் தப்புப் பண்ணினால், கணேசண்ணன் திருத்திக் கொடுப்பான். அந்தப் படங்களில் உள்ள பல வசனங்களுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கணேசண்ணனின் மேற்பார்வையில் இலங்கை வானொலியின் மூலம் நாங்கள் பேசி மகிழ்ந்து வந்தோம். 'நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தில் நடிகர் விஜயன் குடித்துவிட்டு, 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்த வேதனையில் வாட வேண்டும். ம்ம்ம்... கண்ணதாசனுக்கும் காதல் தோல்வியா’ என்று கரகரத்த குரலில் பேசுவார். அடிக்கடி கணேசண்ணன் பேசி மகிழும் வசனம் இது. 'அந்த கொரல் யாரோடது தெரியுமாடே? அதான் டைரக்டர் பாரதிராஜா. என்னமா உணர்ந்து பேசி இருக்காரு. பாத்தியா?’

இலங்கை வானொலி ஒலிபரப்பிய நிகழ்ச்சிகளில் மறக்கவே முடியாத ஒன்று, இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல் ஒலிப்பதிவு ஒன்று. 'ஒரே முத்தம்’ என்ற படத்தின் 'பாவையர்கள் மான் போலே’ என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி இருவரும் பாட, பிற வாத்திய இசைக் கலைஞர்களின் ஒத்திகையுடன் சேர்த்து அந்தப் பாடல் ஒலிப்பதிவை ஒலிபரப்பினார்கள். சினிமாத் துறைக்கு நான் வந்த பிறகு இளையராஜா அவர்களின் எத்தனையோ பாடல் பதிவுகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும், சின்னஞ்சிறு வயதில் எங்கள் வீட்டு பட்டாசலில் உட்கார்ந்து ரேடியோவில் அந்த ஒலிப்பதிவைக் கேட்டபோது கிடைத்த மன மகிழ்ச்சி, இப்போது பிரசாத் ஸ்டுடியோவின் குளிரூட்டப்பட்ட ஒலிப்பதிவுக் கூடத்தில் எனக்குக் கிட்டவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இலங்கை வானொலிக்காக ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். பேட்டி கண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீத். அந்தப் பேட்டியில் முற்றிலும் வேறு ஒரு சிவாஜியைக் கேட்க முடிந்தது. தான் யாரை சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பதை அப்துல் ஹமீதும் தன்னைப் பேட்டி எடுப்பவர் யார் என்பதை சிவாஜியும் உணர்ந்து பேசி இருந்த அற்புதமான, இயல்பான பதிவு அது. இன்று, நமது பண்பலை அறிவிப்பாளர்களின் உச்சரிப்பையும் பிரபலங்களை அவர்கள் விளிக்கும் அழகையும் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் ஒரு பண்பலை வானொலி நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளினி, 'அங், சொல்லுங்க மிஸ்டர் மகேந்திரன்’ என்று இயக்குநர் மகேந்திரன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அந்தப் பேட்டியைக் கேட்கும்போது ஒன்று எனக்கு தெளிவாகப் புரிந்தது. நிச்சயம் அந்தப் பெண் 'உதிரிப் பூக்கள்’ பார்த்து இருக்க மாட்டார்.

இன்றைக்கும் இருக்கிற எண்ணிலடங்கா பண்பலை வானொலிகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அறிவிப்பாளர்கள் வளவள என தமிங்கிலீஷில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். திடீர் என நினைவு வந்து, போனால் போகிறது என்று ஒரு பாடலை ஒலிபரப்புகிறார்கள். தான் தவறாகத் தமிழ் பேசுகிறோம் என்கிற குற்ற உணர்ச்சியே இல்லாமல் இவர்கள் பேசிக்கொண்டே போவதுதான் தாங்க முடியாத விஷயம். 'சார், நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க’. இப்படி யாராவது சொல்லும்போது எனக்குக் கோபம் கோபமாக வரும். 'என் தாய் மொழியில் நான் சரியாகப் பேசுவதற்கு பாராட்டப்பட்டால் அதைவிட அவமானம் வேறு என்ன’ என்று தோன்றும்.

இவர்கள் சொல்லும் நல்ல தமிழ் உச்சரிப் புக்காக இலங்கை வானொலிக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இன்னும்கூட இலங்கைத் தமிழர்களின் தமிழ் உச்சரிப்புக்கு இணையாக நம்மால் தமிழ்ச் சொற்களை உச்சரிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு, இலங்கை வானொலியில் மட்டுமே 'கிராமத்து அத்தியாயம்’ என்ற படத்தின் பெயரை ஒழுங்கான உச்சரிப்பில் நான் கேட்டு இருக்கிறேன். என்னால் 'க்ராமத்து அத்யாயம்’ என்றுதான் இன்றைக்குச்

மூங்கில் மூச்சு! - 09

சொல்ல முடிகிறது.

சமீபத்தில் ஒரு நள்ளிரவில் பண்பலை அலைவரிசையினை யதேச்சையாகக் கடந்து செல்லும்போது, சூரியன் எஃப்.எம்மில் ஒரு குரல் என்னைப் பிடித்து நிறுத்தியது. அடுத்து ' 'நாத கலா ஜோதி’ இளையராஜா அவர்களின் இசை வார்ப்பில் 'பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இருந்து 'சிம்மேந்திர மத்யமம்’ ராகத்தில் உருவான ஒரு பாடல்!’ வாழ்க் கையில் முதன்முறையாக என்னுடைய விருப்பப் பாடலான 'ஆனந்த ராகம் கேட்கும் நேரம்’ என்ற அந்தப் பாடல் எப்போது முடியும் என்று காத்து இருந்தேன். குழலிசை போன்ற அந்த அறிவிப்பாளரின் குரல், அவரது பெயரை அறிந்துகொள்ளும் ஆசை யைத் தூண்டியது. அடுத்தடுத்த பாடல்களை ஒலிபரப்பிவிட்டு, நிகழ்ச்சி முடியும்போது நன்றி சொல்லி உங்களிடம் இருந்து விடைபெறுவது 'யாழ்’ சுதாகர் என்றார். அதானே பாத்தேன்!

- சுவாசிப்போம்...