மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 20

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்

அட்சரப் பாத்திரம்!

##~##

ரு நாடக மேடை; நல்லதொரு நாடகம் நடக்க இருக்கிறது.

ஊர்ச் சனம் வருகிறது, நாடகம் பார்க்க - நாலு பேர்; ஆறு பேர்; எட்டு பேர்; பத்து பேர் என்று!

ஒருவர் ஒருவராகவும், இருவர் இருவராகவும் கூட வருகிறது.

இன்னணம் சிறுகச் சிறுக வந்து நாடகக் கொட்டகை நிரம்பிவிடுகிறது.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 20

முதல் மணி; இரண்டாம் மணி; மூன்றாம் மணி என மணியடித்து முடிந்ததும் -

திரை தூக்கப்படுகிறது; நாடகம் தொடங்குகிறது.

பல்வகைப் பாத்திரங்கள் மேடையில் உலவி,

அழுது; சிரித்து; தழுவி; நழுவி; ஊடலும் கூடலும் தேடலும் வாடலுமாய் -

நவரசங்களின் பிழிவாகி நாடகத்தை நகர்த்திச் செல்கின்றன.

உச்சக்கட்டத்திற்கு வந்து ஜனங்கள் 'உச்’சுக் கொட்டும் அளவில் -

நாடகம் முடிகிறது; நாடகக் கொட்டகையை விட்டுக் கூட்டம் வெளியேறுகிறது!

எப்படி?

நாடகம் பார்க்க வருகையில், நாலும் ஆறும் எட்டும் பத்துமாய் வந்ததே - அப்படியா?

அல்ல; அல்ல! ஒட்டுமொத்தமாய் ஒரு சேரக் கொட்டகையைவிட்டு, ஒரே நேரத்தில் வெளியேறுகிறது -

கூத்தைப் பார்க்க வந்த கூட்டம்!

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 20

மேற்கண்ட காட்சியை ஒரு மேற்கோளாகக் காட்டி -

ஓர் உலகாயத உண்மையை, நமக்கு உணர்த்துகிறான் முந்நூற்று முப்பத்திரண்டாம் குறளில் -

வள்ளுவன்!

'கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.’

கூத்தாடும் அரங்கிற்குக் கூட்டம் ஒவ்வொருவராக வருவதும், கூத்து முடிந்த பின் கூட்டம் ஒரே கும்பலாய் வெளியேறுவதும்போல்.

செல்வம் சேரும்போது, சிறுகச் சிறுகச் சேர்வதும் - அது விலகும்போது ஒட்டுமொத்தமாய் ஒரே நேரத்தில் விலகுவதும் இவ்வுலகில் நிகழ்கிறது என்று -

'நிலையாமை’ அதிகாரத்தில் நிலை நிறுத்துகிறான் தன் கருத்தை வாசுகி மணாளன்!

இதே வள்ளுவன்தான் இன்னோர் இடத்தில் விளம்புகிறான் -

'அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை  
பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு’
- என்று.

இவ் இரண்டு குறள்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது யாதெனில் -

செல்வம் நிலையாததாயினும், செல்வம் இன்றி நாமிங்கு நிலைத்தல் இயலாத காரியம் என்பதுதான்!

Money is a necessary evil - இது நான் சொன்னதல்ல; தேசப் பிதா தெரிவித்தது!

'உள்ளபடி செல்வம்
இல்லா தவரே -
உலகினிலே உயிர்
வாழ்வது தவறே;
கல்லா ராயினும்
காசுள்ள வரைக் -
காட்சிப் பொருளாய்க்
காணார் எவரே?’

- இது, உடுமலை நாராயணக் கவிராயர் பாட்டு.

'இல்லா தவனை இல்லாள் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது அவன்வாய்ச் சொல்!’

- இது அவ்வையார் பாட்டு.

'உன்னிடம் பணம் இல்லையேல் -
உன்னை உலகுக்குத் தெரியாது;
உன்னிடம் பணம் இருக்குமாயின் -
உன்னை உனக்கே தெரியாது!’

- இது ஓர் ஆங்கிலப் பழமொழி.

ப்படியெல்லாம் பணத்தைப்பற்றி யோசிக்கும் வேளையில் - பார்த்ததும் படித்ததுமாய், இரண்டு நிகழ்வுகள் என்னுள் நிழலாடுகின்றன!

1949-நான், சென்னை ஓவியக் கல்லூரியில், 'Commercial Art’ மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தேன்; சிந்தாதிரிப்பேட்டை, அய்யா முதலித் தெருவில் வாசம்.

திரு.தேவிபிரசாத் ராய் சௌத்திரி கல்லூரி முதல்வர்; திரு.கிருஷ்ணா ராவ் என் ஆசிரியர்.

ஒரு சமயம் - காலை வேளையில் நான் கல்லூரிக்குள் நுழையும்போது -

கைக்குழந்தையோடு ஒரு பெண்மணி என்னை வழிமறித்து -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 20

'அய்யா! என் மார்ல பால் வத்திப் போச்சு; கைப்பிள்ளெ வெறுங் காம்பெ சப்பிச் சப்பி, வாய் வலிச்சுக் கத்துது;புருசன் மொடாக் குடியன் - போய்ச் சேந்துட்டான்! பட்டினி எங்களெப் பிச்சுப் பிடுங்குது. என் மாதிரி இங்க வந்த ரெண்டு மூணு பொண்ணுங்களுக்கு, தினம் உங்க பள்ளிக் கூடத்துல வேலெ கிடைக்குது... நடுவுல இருக்கிற தரகருங்க, என்னெ ஏத்துக்க மாட்டேங்கறாங்க; நீங்க சொல்லி, ஒரு ரெண்டு மூணு நாள் வேலெயாச்சும் வாங்கிக் குடுத்தீங்கன்னா -

எங்க ஒடம்புல உசுரு தங்கும்!’ என்று என்னைக் கெஞ்சினாள்.

என் ஆசிரியர் கிருஷ்ணா ராவிடம் சொல்லி, அந்தப் பெண்ணுக்கு நாலஞ்சு நாள் வேலை வாங்கிக் கொடுத்தேன்.

அந்தப் பெண் பார்த்த வேலை என்ன தெரியுமா?

நாள் முழுக்க - எங்கள் வகுப்பறையில் நிர்வாணமாக நிற்பதுதான்!

Crayons -ஐக்கொண்டு நாங்கள் Anatomy  வரைய - அவளது நிர்வாணம்தான் Model!

'நிர்வாணம்’ எய்தியதாய்ச் சொல்லும் துறவிகளெல்லாம், நிர்வாணத்தைத் துழாவிக்கொண்டுஇருக்கும் இன்றைய நிலையில் -

அன்று, நிர்வாணமாய் நின்று, நிஜமான நிர்வாண நிலையைத் தன் குழந்தை பொருட்டு எய்திய -

அந்தப் பெண்ணைப் படமாக வரையும்போது - அம்பாளை வரைவது போலிருந்தது!

ஆம்; அம்பாள் சந்நிதியில் வீசுமே ஓர் அருள் மணம் -

அம் மணம் வீசியது - அவளது

அம்மணம்!

ரு ரஷியக் கதை. தன் அஞ்சு வயதுப் பையனை ஒரு ரொட்டிக் கடையில் வேலைக்குச் சேர்க்க விரும்புகிறாள் -

வறுமை வயப்பட்ட ஓர் இளம் விதவை! வேலையில்லை என்று துரத்துகிறான் ரொட்டிக் கடை முதலாளி; அவளோ, நிதம் நிதம் விடாப்பிடியாக அவன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறாள்; அவன் எட்டி உதைக்கிறான்!

இறுதியில் அவள் பையனுக்கு வேலை கொடுக்கிறான் அந்த ரொட்டிக் கடை முதலாளி!

'அம்மா! முதலாளி எவ்வளவு இரக்கமுள்ளவருன்னு - இப்பத்தாம்மா புரிஞ்சுது!’ என்கிறான் மகன், தாயிடம்!

அந்த மகன் அறிய மாட்டான் - அன்னை தனது குடற் பசியைத் தீர்க்க, முதலாளியின் உடற்பசியைத் தீர்த்தாள் என்று!

'வரிக்கு வரி
வரிக்கு வரி -
வன்பசிக் கொடுமையை
வார்த்தையில் கொட்ட...
அடியேனிடம்
அட்சரப் பாத்திரம் இருக்கிறது;
அதைப் போக்கவல்ல
அட்சயப் பாத்திரம் இல்லை!’

- சுழலும்...