Published:Updated:

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

“என் முதல் ஹீரோயின் ஜெயலலிதா!”வாசகர் கேள்விகள்

##~##

ச.இளமாறன், சிதம்பரம்.

''சினிமாக்காரர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஆறு கோடித் தமிழர்களும் அலற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆனால், ஆறு கோடி மக்களும் பாதிக்கப்படும் பிரச்னைகளை சினிமாக்காரர்கள் கண்டுகொள்வதே இல்லையே?''

''நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய பெரிய கட்அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் சினிமா நடிகன் சிரிச்சுட்டு நிப்பான். எனக்கு ஆச்சர்யமா இருக்கும். 'அட! கல்யாணப் பொண்ணுக்குத் தாய்மாமன் சினிமால நடிச்சுட்டு இருக்கான்போல... நமக்குத் தெரியாமப்போச்சே’னு நொந்துக்கு வேன். ஐ ஆஸ்க் யூ திஸ் இளமாறன்... உங்க அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி போட்டோஸ் போட்டு பேனர் வை. நான் கை தட்டுறேன். ஏன், நீ சினிமா நடிகனைக் கொண்டாடுற? அப்புறம் நீ திண்டாடுறப்ப, 'அவன் எனக்கு எதுவும் பண்ணலை’னு குத்தம் சொல்லுற? என் இனிய தமிழ் மக்களே... சினிமாக்காரங்க தன் தொழில்ல தெளிவா இருப்பாங்க. வேலையில் சின்சியரா இருப்பாங்க. அதைத் தாண்டி அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிற உண்மையை, பாவப்பட்ட தமிழன் என்னைக்குப் புரிஞ்சுக்கிறானோ...  அன்னைக்குத்தான் அவனுக்கு விடிவுக் காலம் பிறக்கும்!''

ஆர்.பன்னீர், ஆரணி.

''பார்த்திபனுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?''

''ஒரு பிரச்னையும் கிடையாது. பார்த்திபன் இஸ் எ க்ரியேட்டர். சிறந்த பேச்சாளன். குட் ஹ்யூமன். மனசுல தோணுறதை உள்ளபடி சொல்லும் துணிச்சலான கலைஞன். நான் அவனோட குருவின் குருவாக இருந்தாலும், என்னையும் குரு ஸ்தானத்தில்  தான் வெச்சிருக்கான். என்னை எந்தக் காலத்திலும் எப்போதும் குறை சொல்லிக் குற்றம்சாட்டி சுட்டுவிரல் நீட்டிப் பேசிட மாட்டான். ஹி வில் நெவர் ப்ளேம் மீ. ஆனா, நான்தான் பார்த்திபன் மேல் அதிக உரிமை எடுத்துக்கிட்டு, தெரிஞ்சே சில தப்பு பண்ணிட்டேன். மதுரையில 'அன்னக்கொடி’ இசை வெளியீட்டு விழா நடந்தப்போ, அதுல கலந்துக்கிட்டான். அவன் மனசுல உண்மையான குரு பக்தி இருந்ததாலதான், மனசுல இருந்த காயத்தை மறைச்சுக்கிட்டு அந்த விழாவில் பேசி, என்னையும் என் ரசிகர்களையும் நெகிழவெச்சான். அதே சமயம் என்னைப் பத்தின உண்மைகளையும் அந்த மேடையில் நாகரிகமா உரிச்சுக் காட்டினான். நான் அப்பவும் சொல்லி யிருக்கேன்... இப்பவும் சொல்றேன்... எப்பவும் சொல்வேன்...  பார்த்திபா... யூ ஆர் எ பார்ன் டேலன்ட். நீ மகா கலைஞன். ஆனா, உன் திறமைக் கான அங்கீகாரம் இன்னும் ஏனோ கிடைக்கலை!''  

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

ம.பாரதி, செங்கல்பட்டு.

''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ரசவாதம் என்ன? அந்த மாய மந்திரத்தில் நாங்கள் மீண்டும் லயிக்க முடியுமா?''

''இந்த ஒரு கேள்வியை இன்னும் வெச்சுக்கிட்டு ஊர் ஊருக்கு, ஆளாளுக்குக் கொடி பிடிச்சுக் கோஷம் போட்டுக் கிளம்பிடுறீங்களேப்பா..!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காம்பினேஷன் ஹிட் ஆகும். அதுதான் தமிழ் சினிமா மரபு. ஆரம்பத்துல ஸ்ரீதர் - கண்ணதாசன் - விஸ்வநாதன் காம்பினேஷன் ஹிட்! ஆனா, அதே ஸ்ரீதர் அப்புறம் இளையராஜா - வைரமுத்துவை வெச்சு 'நினைவெல்லாம் நித்யா’ படப் பாடல்களை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்க லையா? அந்த காம்பினேஷன் ஜெயிக்க லையா? 'வேதம் புதிது’ படத்தில் தேவேந் திரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உங்களை ஈர்க்கவே இல்லையா?

நான் 'கிழக்குச் சீமையிலே’னு ஏ.ஆர்.ரஹ்மானை வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு முதல்முறையா மியூஸிக் பண்ண வெச்சேன். அப்போ என்னைத் திட்டாத வங்களே இல்லை. ஆனா, அதுக்குப் பிறகு டவுண் சவுத்ல ஒவ்வொரு வீட்டு விசேஷத்துலயும் 'மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே’ பாட்டுதானே அலறுது. 'கருத்தம்மா’ படத்துல வந்த 'போறாளே பொன்னுத்தாயி... பொலபொல  வெனக் கண்ணீர்விட்டு’ உங்களுக்குள்ள எமோஷனைத் தூண்டலையா? ஆன்ஸர் ஆல் திஸ் கொஸ்டீன்ஸ்!

அண்ட் அஸ் எ ஃப்லிம் மேக்கர், நான் இளையராஜா இசையில் மகிழ்ந்திருக் கிறேன். தேவேந்திரன் இசையில் வியந் திருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நெகிழ்ந்திருக்கிறேன். இதோ இப்போ ஜி.வி.பிரகாஷ் இசையில் சிலிர்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் மாய மந்திரம் நடந்துக்கிட்டேதான் இருக்கு!''

ச.அய்யப்பன், காஞ்சிபுரம்.

 ''எப்பவும் ஏதாவது ஒரு சேனலில் நீங்கள் இயக்கிய ஏதேனும் ஒரு படம் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. அப்போதுஎல்லாம் அந்தப் படத்தை முழுமையாகப் பார்ப்பீர்களா?''

''படம் நல்லா இருந்தா ப்ளே பண்ணத்தான் செய்வாங்க. பிடிச்சிருந்தா ரசிகர்கள் விரும்பிப் பார்க்கத்தான் செய்வாங்க. அப்படி எனக்கே பிடிச்ச படங்களை நானும் பொறுமையாக உக்காந்து பார்ப்பேன். அதுல சமயங்கள்ல நான் இயக்கிய படங்களும் இருக்கும்!''

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

''பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன் போன்ற உங்கள் நெருங்கிய சிஷ்யர்கள் உங்களைவிட்டுப் பிரிந்து செயல் படத் தொடங்கியபோது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?''

''தட் இஸ் லைஃப்!

எத்தனை அப்பா-அம்மா அவங்கவங்க பிள்ளைகளோடவே கடைசி வரை இருக்காங்க. டவுசர் போட்ட காலத்துல இருந்து கல்யாணம் பண்ணிக்கிற வரை அடிச்சுப் புடிச்சுட்டுத் திரியிற எல்லா அண்ணன் - தம்பிங்களும் கடைசி வரை ஒரே வீட்லயா குடியிருக்காங்க? அப்படிக் குடும்ப உறுப்பினர்களே தனித் தனியாப் பிரிஞ்சு வாழும்போது, என்கூட வேலை பார்த்தவங்க ஆயுசுக்கும் பக்கத்துல யேவா இருப்பாங்க? வளர்ச்சி, முயற்சி, தேவைகள்னு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை இருக்கு!''

சு.அருளாளன், ஆரணி.

''உங்கள் முதல் பட ஹீரோயினாக ஸ்ரீதேவியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?''

''என் முதல் பட ஹீரோயின் ஸ்ரீதேவின்னு யார் சொன்னா? தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா மேடம்தான், என் முதல் பட ஹீரோயின். என்ன... நம்ப முடியாத அதிர்ச்சியா இருக்கா? யெஸ்... இட்ஸ் எ மிராக்கிள்... பட் இட்ஸ் ட்ரூ!

'16 வயதினிலே’ படத்துக்கு முன்னாடியே கதாசிரியர் ஆர்.செல்வராஜோட சேர்ந்து 'சொந்த வீடு’னு ஒரு ஃபென்டாஸ்டிக் கதை பண்ணோம். என் முதலாளி கே.ஆர்.ஜி. தானே தயாரிப்பாளராகப் படம் எடுக்க வந்தார். அந்தப் படம் பெண்ணுரிமை பத்திப் பேசுற சப்ஜெக்ட். 'சொந்த வீடு’ படத்துக்கு ஹீரோவா முத்துராமனை ஒப்பந்தம் செய்தேன். ஹீரோயினா ஜெயலலிதாவை நடிக்கவைக்க லாம்னு ஐடியா. அதுக்காக நானும் செல்வராஜும் ஜெயலலிதா மேடத்தின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனோம். ஒரு மணி நேரம் பொறுமையா உக்கார்ந்து நாங்க சொன்ன கதையை ரசிச்சுக் கேட்டாங்க ஜெயலலிதா. ஷி லைக்ட் அவர் ஸ்டோரி டெல்லிங்.

நாங்க கதை சொல்லி முடிச்சதும், 'கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்கதான் டைரக்டரா?’னு என்னைப் பார்த்துக் கேட்டாங்க. நான் 'ஆமாம்’னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே 'ஓ.கே’ சொல்லிட்டு 28 நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தாங்க. நான், செல்வராஜ், முத்துராமன், இசையமைப்பாளர் குமார் எல்லோரும் படப்பிடிப்புக்குப் போறதுக்குத் தயாரா கிட்டோம். பட், அப்போ ஃபீல்டுல இருந்த ஒரு பெரிய டைரக்டர் சில்லியா பிஹேவ் பண்ணார். என்னைப் பத்தி ஜெயலலிதா மேடம்கிட்ட, 'அவன் ஒரு சின்னப் பையன். ஷூட்டிங் ஸ்பாட்ல க்ளாப் போர்டு அடிக்கக்கூட லாயக்கில்லாத பையன். அவனை நம்பி ஷூட்டிங்குக்குப் போய் மாட்டிக்காதீங்க’னு தடுத்து நிறுத்திட்டார். அதனால 'சொந்த வீடு’ படம் டிராப் ஆகிருச்சு. அதே கதையைத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு 'புதுமைப் பெண்’ங்கிற பேர்ல ஏவி.எம். தயாரிச்சாங்க. ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த 'புதுமைப் பெண்’ கேரக்டர்ல ரேவதி நடிச்சிருந்தாங்க. ஸோ, நான் ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ண முதல் ஆர்ட்டிஸ்ட் ஜெயலலிதா. அப்புறம் இந்த மாதிரி எந்தப் பஞ்சாயத்தும் வரக் கூடாதுன்னுதான் '16 வயதினிலே’ படத்துல புதுப் பொண்ணா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன்!''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

எம்.பிரியா, வேலூர்.

''சென்னையில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த சின்னச்சாமியை இன்றைய இயக்குநர் இமயம் பாரதிராஜா எப்படிப் பார்க்கிறார்?''

''ஸ்வீட் மெமரீஸ்! சொந்த மண்ணில் 120 ரூபாய் சம்பளத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராகக் கம்பீரமாக வேலை பார்த்த சின்னச் சாமி, 'பாரதிராஜா’வின் சினிமாக் கனவை நனவாக்கு வதற்காக சென்னைக்கு வந்தான். வந்த இடத்தில் மாசம் 70 ரூபாய் சம்பளத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்ந்தான். அந்த சொற்ப சம்பளத்திலும் குருவிபோலச் சேர்த்து வைத்து சென்னையில் நாடகம் போட்டான். அத்தனை வறுமையிலும் துயரத்திலும் 'பாரதிராஜா’வின் கலைத் தாகத்தை அணையவிடாமல் காப்பாற்றியதில் சின்னச்சாமிக்குப் பெரிய பங்கு உண்டு. பாரதிராஜாவின் கனவுகளுக்காக பெட்ரோல் பங்க் வேலை அலுப்பையும் பசி வேதனை யையும் சின்னச்சாமி தாங்கிக்கொண்டான். இந்த இயக்குநர் பாரதிராஜாவை அந்த சின்னச்சாமிதான் வார்த்து எடுத்தான்... வளர்த்து எடுத்தான். இப்போதும் என் ஒரே உற்ற நண்பன் நான்தான்!''

பஞ்சநாதன், சென்னை-75.

''உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

''விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டா, நான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''

-  அடுத்த வாரம்

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

'' 'அல்லி கலா நாடக மன்றம்’ நினைவுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''உங்களுக்கு இளையராஜாவைவிட நெருங்கிய நண்பர் யார்?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்பி எம்.ஜி.ஆர்., கதை கேட்டாராமே?''

- கட்

பாரதிராஜாவிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:  'விகடன் மேடை- பாரதிராஜா’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.