மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாஸ்வேர்டு - 09

பாஸ்வேர்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பாஸ்வேர்டு

கோபிநாத், படம்: கே.ராஜசேகரன்

சுப்புராஜுக்கு ஒரு பெரிய பிசினஸ் மேக்னெட் ஆக வேண்டும் என்பது நீண்ட காலக் கனவு. பள்ளிக்கூட அறிமுக வகுப்புகளில், 'நீ என்னவாகப்போகிறாய்?’ என்று கேட்டபோதே, 'படிச்சு பெரிய ஆளாகி ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆவேன்... கோட் சூட் போட்டுட்டு அம்பாஸடர் கார்ல போவேன்... லயன்ஸ் கிளப் மெம்பர் ஆவேன். ராதா, அம்பிகாவை வெச்சு விளம்பரப் படம் எடுப்பேன்’ என்றுதான் சொல்வான். அவன் குடும்பத்திலும் பலர் சிறிதும் பெரிதுமாகக் கடை வைத்திருந்தார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பரபர நேரங்களில் சுப்புராஜும் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏதோ ஒரு சொந்தக்காரரின் கடையில் சுறுசுறுவெனச் சுழல்வான்.

பீக் சீஸன் சமயங்களில் ஒரு பொருளை எப்படியெல்லாம் விற்க வேண்டும், அரை மனது வாடிக்கையாளர்கள் சமாதானமாகும் வகையில் எப்படிச் சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிக்க வேண்டும், தொழிலை விரிவுபடுத்த வேண்டிய சமயத்தில் தன் குடும்பத்தினர் என்னென்ன தவறுகளைச் செய்தார்கள்... கல்லூரிக் காலத்தில் என்னைப் பார்க்கும்போது எல்லாம் இப்படித்தான் என்னிடம்விவாதித்துக் கொண்டே இருப்பான் சுப்புராஜ். 'வெள்ளைக் காரன்லாம் பிசினஸ் செஞ்சா, பக்கா பிளா னோடத்தான் எதுலயும் இறங்குவான். எந்த பிசினஸுக்கும் ரிசர்ச்தான் ரொம்ப முக்கியம்!’ இப்படித்தான் ஒவ்வொரு பேச்சையும் முடிப்பான்.

இடையில் தொடர்புவிட்டுப்போய் இரண்டு வருடங்களுக்கு முன் அவனைச் சந்தித்தேன். சரவணா ஸ்டோர் கணக்காக உள்ளூரில் 'சுப்புராஜ் ஸ்டோர்’ என்று ஆரம்பித்திருப்பான் என்று நான் நினைக்க... ஆனால், அவன்அப்படியே தான் இருந்தான். 'இல்ல மாப்ள... எல்லாம் ரெடி. பிரமாதமான பிளான் ரெடி. ஏ டு இசட் ஐடியா. ஆனா, நடுவுல பி,சி,டி,இ,எஃப்லாம் கிடையாது. ஒவ்வொரு கஸ்டமருக்கும் நமக்கும் நேரடி கனெக்‌ஷன்!’ என்று ஏதேதோ சொன் னான். அவன் சொன்ன தொனியையும் வேகத் தையும் பார்த்தபோது அடுத்த இரண்டுமாதத்துக் குள் எப்படியும் தேங்காய் உடைத்துக் கடை போட்டுவிடுவான் என்றுதான் தோன்றியது. ஆனால், இறுதியாக, 'எல்லாம் ரெடிடா... கொஞ்சம் ரிசர்ச் வேலை மட்டும் பாக்கி. அவ்வ ளவுதான்’ என்றான். எனக்கு நம்பிக்கைகொஞ்சம் குறைந்துபோனது. 'ஆறேழு வருஷமாவே இப்பவோ அப்பவோனு எல்லாம் கூடி வருது. ஆனா, ரிசர்ச் வேலை மட்டும் இழுத்துட்டே இருக்கு. மார்க்கெட் ஸ்டடி மட்டும் திருப்தியா முடிச்சுட்டா... உடனே, கடைக்குப் பூஜைபோட்ரலாம்’ என்று இரண்டு வருடங்களுக்கு முன் சொன்னான்.

பாஸ்வேர்டு - 09

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, போன மாதம் பார்த்தபோதும் அதையேதான் சொன்னான் சுப்புராஜ்.  இவன்போலவே, 'எல்லாம் ரெடி. கடை பார்த்துட்டேன். அட்வான்ஸும் கைல இருக்கு. நல்ல நேரம் பார்த்துக்கொடுத்துட்டா, அடுத்த அஞ்சு வருஷத்துல ஓஹோனு எங்கேயோ போய் நிப்போம்’ என்று சில நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் பலர்   தொடர்ந்து அதே பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு தொழில் தொடங்குவதற்குத் தேவையான வேட்கை,பணம், சூழல் எனப் பல காரணிகள் அவர்களுக்குச் சாதகமாகவே வாய்த்திருக்கின்றன.

'ஏண்டா... நீ என்ன பண்ற?’னு கேட்கிறவங் களுக்குப் பதில் சொல்றதுக்காக இந்த மாதிரி சொல்லிட்டுத் திரியிறியா..?’ என்றுகூட சுப்பு ராஜிடம் கேட்டும்விட்டேன். 'என்னடா இப்படிச் சொல்லிட்ட...  இதோ பார்... என் பிளானை’ என்று ஒரு வரைபட விளக்கத்தைக் காட்டினான். வட்டம் வட்டமாகச் சில குறியீடு கள்கொண்ட ஒரு ப்ளூப்ரின்ட், கிராஃப்கள் என்று ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைக் குறிக்கும் பல குறிப்புகள் இருந்தன. 'அப்புறம் என்ன... எதை யாச்சும் ஆரம்பிச்சுத் தொலைக்க வேண்டியது தானே?’ என்று கேட்டேன். 'இல்லடா... இருந்தா லும் இன்னும் கொஞ்சம் டீடெய்ல்ஸ்வேணும். மேல கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு....’ என்று இழுத்தான்.

'இன்னும் என்னடா டீடெய்ல்ஸ் வேணும் உனக்கு?’ என்று எனக்கு எரிச்சலாகிவிட்டது. 'எந்தத் தொழிலையும் தொடங்குறதுக்கு முன்னாடி, அதுபத்தி 100 பெர்சன்ட் தகவலையும் தெரிஞ்சுட்டுத்தான் இறங்கணும். அதான் என் கொள்கை’ என்கிற அவனுடைய நேர்மை எனக்குப் பிடித்திருந்தாலும், 'எல்லா விளக்கமும்சொல் றான். ஆனா, எதையும் தொட்டுத் தொடங்க மாட்டேங்குறானே...’ என்ற ஆதங்கம் கலந்த கோபம் தோன்றாமல் இல்லை. 'ஒரு தொழி லையோ அல்லது வேலையையோ தொடங்க, அது சம்பந்தப்பட்ட 100 சதவிகிதத் தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் சாத்தி யமே இல்லை. துணிஞ்சு உள்ளே இறங்கு... கத்துக்க வேண்டியது, கை கொடுக்க வேண்டியது எல்லாம் தானா வரும்’ என்று ஒருபெரிய லெக்சர் கொடுத்தேன். ஆனால், அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து, 'என் னாச்சு? கிரிக்கெட் விளை யாண்டோம்... நீதானே அடிச்ச... பால் மேல போச்சு...’ என்று ஆரம் பித்தான் சுப்புராஜ். எனக்குக் கிறுகிறுவென்று இருந்தது.

பாஸ்வேர்டு - 09

சின்னதாக ஃபேன்சி ஸ்டோர் தொடங்கி, சூப்பர் மார்க்கெட் வரை வளர்ந் தவர்கள்... சில ஆயிரங்களில் தொடங்கி கோடி களில் பிசினஸைக் கொண்டுசென்றவர்கள் எனப் பலரும் தங்கள் அளவில் ரிசர்ச் செய்த வர்கள்தான். கடந்த வாரம் ஒரு பிசினஸ் டிசைனரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'இந்தியா மிகப் பெரிய கன்ஸ்யூமர் மார்க்கெட். இங்கே எந்த பிசினஸ் செஞ்சாலும் ஜெயிக்கலாம். ஆனா, செய்ற வேலையில் தீரவே தீராத ஆர்வம் இருக்கணும். என்ன சிக்கல் வந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு ஒரு துணிச்சல் வேணும். இது ரெண்டும்தான் இன்னைக்கு ஒரு பிசினஸ்ல ஜெயிக்க அவசியமான மூலதனம்’ என்றார்.

உண்மைதான். உலகின் மகா பெரிய வாடிக்கையாளர் கூட்டம் இருக்கும் நம் ஊரில், கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்கிற பலரும், மேலே மேலே பிசினஸில் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். டி ஷர்ட்டுகளில் ஆங்கில வாசகங்களுக்குப் பதிலாக, தமிழ் சினிமாவின் காமெடி பஞ்ச்களைப் பொறித்து இளைஞர்களைக் கவரும் வகையில் கடை வைத்திருக்கிறார் ஓர் இளைஞர். பாரதி யின் மீசை, காந்தியின் கண்ணாடி என அடுத்தடுத்து சில முயற்சிகள் செய்கிறார். மேற்குலகின் பிரபலமான உணவு வகைகளின் பெயரையும், உள்ளூர் சாப்பாட்டு அயிட்டங்களின் பேரையும் சேர்த்து புதிய மெனுவோடு ஒரு ஐ.டி. இளைஞர் ஆரம்பித்த சின்ன கிச்சன், இன்று செம ஹிட். படபடவென்று பல கிளைகளைத் தொடங்கிவிட்டார். 'என்ன பிசினஸ் செய்தால் ஜெயிக்கலாம் என் பதைவிட, என்னால் எந்த பிசினஸிலும் ஜெயிக்க முடி யும் என்பதுதான் முக்கியம்’ என்ற அந்த ஐ.டி. இளை ஞரின் சிந்தனை அமர்க்களமாக இருந்தது.

தொழில் தொடர்பான நம்முடைய ஆராய்ச்சிகள், 'வெற்றி பெற வாய்ப்பிருக்கும் தொழில்கள் எவை?’ என்ற கோணத்திலேயே இருக்கின்றன. 'எனக்குப் பிடித்த விஷயத்தை வெற்றிகரமான தொழிலாக நடத்துவது எப்படி?’ என்ற கோணத்திலும் நாம் சிந்தித்துப் பழகலாம். அதைவிடப் பேசிக்கொண்டும் ஆராய்ந்துகொண்டும் இருக்காமல் செயலில் இறங்குவது அவசியம்.

ஆனால், நம்மில் பல சுப்புராஜ்களுக்கு எம்.என்.சி. கம்பெனிகளின் ஃபார்முலாதான் சரி என்று தோன்றுகிறது. 'எதையும் பிளான் பண்ணித்தான் செய்யணும்...’ என்று திட்டமிட்ட்ட்ட்ட்ட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒருவிதமான எஸ்கேபிஸம்தான். ஏனோதானோ என்று எதையோ ஒன்றைச் செய்து கையைச் சுட்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காக, கடைசி வரை திட்டம் போட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிட முடியாது. 'ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி’ என்று ஆறேழு வருடங்களாக அலைவது, ஒருவன் தெளிவே இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது என்ற உண்மை இங்கே பலருக்குப் புரிவது இல்லை.

இன்னொரு பக்கம் இப்படி ரிசர்ச் பண்ணிக்கொண்டே இருப்பது ஒரு சுகம். பார்க்கிற எல்லாரிடமும் அதுபற்றியே பேசிக்கொண்டு இருப்பது அதைவிடப் பரம சுகம். 'அருமையாப் பேசுறான். என்னென்னவோ சொல்றான். ஆனா, ஒண்ணும் உருப்படியா பண்ண மாட் டேங்கிறானேப்பா’ என்று சுப்புராஜின் அப்பா அங்கலாய்க்கிறபோது, அவனுக் குச் சுர்ரென்று கோபம் வரும். 'அப்பா வுக்கு அறிவே இல்லை’ என்று ஆத்திரப் படுவான். 'மாப்ள... என் பிளானே வேற. அதைப் புரிஞ்சுக்கிறதே ரொம்பக் கஷ்டம்’ என்று அவன் ஆரம்பிக்கும் போதே, 'ஆஹா... என்னாச்சு... கிரிக்கெட் விளையாண்டோம்...’ என்று அவன் மீண்டும் தன் புராஜெக்ட்டை ஆரம்பித்து விடக் கூடாதே என்று அலறிப் பதறத் தொடங்கிவிடுவேன்.

பாஸ்வேர்டு - 09

ஆனால், இது எதையும் கண்டுகொள்ளாமல், 'இந்த உலகத்துக்கு நான் யார்னு காட்றேன் பாருங்கடா’ என்ற வெறியும் வேகமும் சுப்புராஜுக்குக் குறைந்ததே இல்லை. அவன் என்னிடம் தன் திட்டத்தை 36-வது தடவையாகச் சொன்னபோதும்கூட, முதல் முறை சொல்லும்போது அவன் கண்களில் மின்னிய அதே நம்பிக்கை இன்னமும் தெறிக்கிறது. 'இந்தப் பாழாப்போன உலகத் துக்குத் தன் திட்டம் புரியவே இல்லை’ என்ற கோபம் இப்போதும் அந்தத் தெறிப்பில் சேர்ந்துகொண்டது. அவ்வளவுதான்!  

ஆனால், 'ரிசர்ச் போதும்... களத்தில் இறங்கு வோம்’ என்று சுப்புராஜ் ஏன் முடிவு எடுக்க மறுக்கிறான் என்பதுதான் புரியவில்லை. 'என்ன திட்டம் போட்டாலும், எவ்வளவு ரிசர்ச் செய்தாலும் பிரச்னைகள் வரும். பிரச்னைகள் வராமல் 100 பெர்சென்ட் தெளிவான பாதை யில் பயணிக்கும் திட்டம் என்று ஒன்று இல்லவே இல்லை’ என்று சுப்புராஜ்களிடம் தெளிவாகச் சொல்லியாக வேண்டும்.

அறிவும், திறனும், நம்பிக்கையும் நிறைய இருக்கிற சுப்புராஜுக்குத் தொழில் தொடங்கித் தோற்றுப்போனால் என்ன செய்வது என்ற பயம், அதைவிட அதிகமாக இருக்கிறது. அதனாலேயே தன் ரிசர்ச்களில் துளிப் பிழை இல்லாத, பிரச்னையே இல்லாத ஒரு திட்டத்தை உருவாக்கப் போராடிக்கொண்டே இருக்கிறான். ஆனால், அப்படி ஒரு திட்டம் உலகத்தில் சாத்தி யம் இல்லையென்பதால், அவன் எதிர்பார்க்கும் ரிசர்ச் முடிவு அவனுக்குக் கிடைப்பேனா என்கிறது.

திறமைசாலியான அவனைச் சக நண்பர்களே 'அவன் எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டான்டா...’ என்று கிண்டலடிக்கிறபோது, மனசுக்கு சங்கடமாக இருக்கிறது. பிரச்னைகள் இல்லாத தொழிலைத் தேடி ரிசர்ச் செய்யும் சுப்புராஜ், தன் மனசுக்குப் பிடித்தமான ஒரு தொழிலைச் செய்தால், பிரச்னைகளைக் கையாளும் துணிச்சல் தானே வந்துவிடும் என்பது என் நம்பிக்கை.

'என்ன பிசினஸ் செய்தால் ஜெயிக்கலாம் என்பதைவிட, என்னால் எந்த பிசினஸையும் ஜெயிக்க முடியும் என்பதே முக்கியம்’ என்ற அந்த ஐ.டி. இளைஞனின் கடையில் கூட்டம் கும்முகிறது சுப்புராஜ்!

- ஸ்டாண்ட் பை...