
மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

நீங்கள் பாவைக்கூத்து பார்த்திருக்கிறீர்களா?
எல்லா ஊர்களிலும் பாவைக் கூத்து... தோல் கூத்து... என்பதை, எங்கள் ஊரில் பாக்கூத்து என்று தான் சொல்வார்கள். புது நெல் மணிக் கதிர்களிலிருந்து நல் மஞ்சள் ஒளி, ஊருக்குள் பரவும் அறுவடைக் காலங்களில், 10 நாட்கள் ராமாயணக் கூத்து நடக்கும். அப்பாக்களும் அம்மாக்களும் ராமருக்காகவும் சீதைக்காகவும் வந்தால், தாத்தா-
உளுவத் தலையன் என்பது சின்ன உடலும் பெரிய தலையும்கொண்ட ஒரு பொம்மை. உச்சிக் குடும்பன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில், 'ஆலம்பனா... நான்தான் உங்கள் அடிமை!’ என்று சொல்லும் நடிகர் அசோகன் சாயலில் அப்படியே அச்சுஅசலாக இருக்கும் பெரிய பொம்மை.
அந்தச் சின்ன வெள்ளை வேட்டி யில் மஞ்சள் வெளிச்சம் பாய்ந்ததும் முதலில் உளுவத் தலையன்தான் வருவான். கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, 'அம்மணமாக வந்து முன்னாடி உட்காந்திருக்கிற அத்தனை பெருசுகளுக்கும்... அழுக்கு வேட்டியோட பின்னாடி உட்கார்ந் திருக்கிற அத்தனை சிறுசுகளுக்கும்... வணக்கம்!’
'ஏலேய்... உளுவத் தலையா! ஒன் குளத்து வாயைக் கொஞ்சம் மூடு. வந்தனம் பாடுறா னாம்... வந்தனம். வாக்கரிசிக்குப் பொறந்த பய...’ என்று சொல்லிவிட்டு, கணீர்க் குரல் எடுத்துப் பாட ஆரம்பிப்பான் உச்சிக் குடும்பன். ஊர் அப்படிச் சிரிக்க, அவனைப் பின்தொடர்ந்து உளுவத் தலையனும் கொஞ்ச நேரம் ஆமாம் சாமி பாடுவான்...
'என் பேரு உச்சிக் குடும்பன்.’
'ஆமா... உச்சிக் குடும்பன்.’
'இவன் பேரு உளுவத் தலையன்.’
'ஆமா... உளுவத் தலையன்.’
'நாங்க ரெண்டு பேரும்
எதுக்கு வந்திருக்கோம்?’
'ஆமா... எதுக்கு வந்திருக்கோம்?’
'உங்களுக்கு வணக்கம் சொல்ல...’
'ஆமா... வணக்கம் சொல்ல.’
'வணக்கம்!’
'ஆமா... வணக்கம்!’
'ராமர் வந்தா மாலை போடுங்க!’
'ஆமா... பண மாலை போடுங்க.’
'ராவணன் வந்தா சீலை போடுங்க.’
'ஆமா... ச்சீ... தூரப் போனு சத்தம் போடுங்க.’
'அனுமன் வந்தா அரிசி போடுங்க!’
'ஆமா... நல்ல அரிசி அள்ளிப் போடுங்க.’
'அப்படியே உளுவத் தலையன் உங்ககிட்ட வந்தா... நல்லா உதை கொடுங்க.’
'ஆமா... உதை கொடுங்க!’
கூட்டம் சிரித்து உருளும்.

'என்னடா சொன்னே..?’ என்று உளுவத் தலையன், உச்சிக் குடும்பனைச் சத்தம் போட்டு விரட்டுவான். அந்த நேரத்தில் யாருக்கும் தெரியா மல் சத்தம் வரும் அந்தச் சின்ன கூடாரத்துக்குள் எட்டிப் பார்த்தால், உள்ளே முழு மண்டையும் நரைத்து உடல் ஒடுங்கிப்போன கிழவர் ஒருவர் இரண்டு பொம்மைகளையும் இரண்டு கைகளால் ஆட்டிக்கொண்டு, இரண்டு குரல்களில் மாறி மாறி உளுவத் தலையனாகவும், உச்சிக் குடும்ப னாகவும் பாடிக்கொண்டிருப்பார். அவரைச் சுற்றி ராமர், லட்சுமணன், சீதை, அனுமன், ராவணன் எனப் பொம்மைகள் குவிந்து கிடக்கும். இரண்டு பெண் குழந்தைகள் அவர் கேட்கக் கேட்க... பொம்மைகளை எடுத்து எடுத்துக் கொடுத்தபடி இருப்பார் கள். அவ்வளவு பெரிய அனுமன் பொம்மையை எடுத்து மடியில் வைத்தபடி, பத்துத் தலை ராவணன் பொம்மையைத் தோளில் வைத்தபடி, அழகான சீதாப் பிராட்டி பொம்மைக்குப் பொட்டுவைத்த படி, விளையாடிக்கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்த்தால் அவ்வளவு பொறாமை யாக இருக்கும்.
ஊரில் பாவைக் கூத்து நடக்கிறபோது எல்லாம் அந்தப் பொம்மைகளில் ஏதாவது ஒரு பொம்மை யைத் திருடி பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோவதற்கு ஒரு கூட்டமே அலையும். அதில் நான் ரொம்ப முக்கியமானவன். இரவு முழுவதும் கூத்து நடத்திவிட்டு, பகலில் கூடாரத்துக்குள் அவர்கள் உறங்கிக்கொண் டிருக்கும்போது, அந்தக் கூடாரத் தையே சுற்றிச் சுற்றி வருவோம். சில்லறைக் காசுகளைக் கொடுத்து சிறுவர்களுக்கான சின்னத் தலையாட்டிப் பொம்மைகளை அவர்களிடம் வாங்குகிற மாதிரி கூடாரத்தை நோட்டமிட்டபடி அலைவோம். அந்தப் பொம்மைகளின் கை சிக்கும், கால் சிக்கும், முழுப் பொம்மை மட்டும் சிக்கவே சிக்காது.
ஒருநாள் அந்தத் தாத்தா இல்லாத மதியத்தில் நல்லவேளையாக நல்ல மழை வந்தது. கூடாரத் துக்குள் இருக்கும் அட்டை பொம்மைகள் நனைந்துவிடக் கூடாது என்று குழந்தைகளும் அதன் அப்பா, அம்மாவும் வேகவேகமாக அள்ளிக்கொண்டு பக்கத்தில் இருந்த வாசக சாலைக்குள் ஓடினார்கள். அருகில் இருந்தவர்கள் எல்லோரும் ஓடிப் போய் அவர்களுக்கு உதவினர். நானும் சென்று உதவினேன். என் இரு கைகளையும் நீட்டச் சொல்லி இத்தனை நாளாக நான் தொட்டுப் பார்ப்பதற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்தப் பொம்மைகளைக் கொத்தாக அள்ளிவைத்து வேகமாக ஓடச் சொன்னார்கள். நிஜமாகவே எனக்குப் பிடித்தமான அந்தப் பொம்மைகள் ஒரு பொட்டுகூட மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வளவு கவனமாக மழையின் ஊடாக நான் ஓடினேன். வாசக சாலைக்குள் போனதும் பொம்மைகளை ஒரு மூலையில் வைத்தவன், ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி, அவசரமாகக் கையில் அகப்பட்ட ஒரு பொம்மையை எடுத்து வாசக சாலையின் ஜன்னல் வழியாகப் பக்கத்தில் இருக்கும் ராமைய்யா பெரியப்பாவின் தொழுவுக்குள் நனைந்துவிடாமல் வீசி எறிந்தேன். பின்பு எதுவும் தெரியாதவன்போல எல்லோருடனும் சேர்ந்து மழை நிற்கும் வரை அவர்களோடு ஒட்டி நின்றுகொண்டேன்.

மழை நின்றது. இடி நின்றது. ஆனால், என் மனசோ பள்ளிக்கூட மணிக்கட்டையைப் போல அச்சத்தில் கணகணவென அடிக்கத் தொடங்கிவிட்டது. ராமைய்யா பெரியப்பாவின் தொழுவுக்கு வேகமாக ஓடினேன். நல்லவேளை நான் வீசிய பொம்மை மாட்டுச் சாணத்தில் விழவில்லை. கைகள் நடுங்க, கண்கள் விரிய ஆசையாக அந்தப் பொம்மையை எடுத்துப் பார்த்தேன்.
என் மனதின் குட்டிச்சாத்தானுக்கு அவ்வளவு சந்தோஷம்! என் பிரியமான, யாராலும் தொட முடியாத பாக்கூத்தின் கதாநாயகப் பொம்மை உச்சிக் குடும்பனையே நான் திருடி வந்திருக்கிறேன். தொழுவுக்கு மேலே கட்டிவைத்திருக்கும் வைக்கோல் கட்டுக்குள் உச்சிக் குடும்பன் பொம்மையை ஒளித்துவைத்தேன். இரவு கூத்து முடிந்து எல்லோரும் போன பின்னால், நள்ளிரவில் வீட்டுக்கு எடுத்துப்போவது என்பது என் திட்டம்.
அன்று கூத்தின் கடைசி நாள். காட்டிலிருந்து திரும்பும் ராமருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும் நாள். ஊரில் உள்ள ஆண், பெண் எல்லோரும் பயபக்தியுடன் குளித்து, ராமர் பொம்மைக்கும் சீதாப்பிராட்டி பொம்மைக்கும் போடுவதற்குக் கை நிறைய மலர் மாலைகளோடு வந்திருந்தார்கள். பட்டா
பிஷேகம் முடிந்து, ஊர் மக்கள் தங்களால் இயன்ற மொய்யை எழுதிவிட்டார்கள் என்றால், கூத்து இனிதே நிறைவடைந்துவிடும்.
14 வருடங்கள் வனவாசம் முடிந்து அயோத்திக்குள் ராமர் வருவதை, உளுவத் தலையனும் உச்சிக் குடும்பனும்தான் பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால், உச்சிக் குடும்பனோ ராமைய்யா தாத்தாவின் தொழுவுக்குள் வைக்கோலுக்கு உள்ளே அல்லவா இருக்கிறான்! இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?
உளுவத் தலையன் மட்டும் வந்து உச்சிக் குடும்பன் இல்லாமல் கதை சொல்வானா? நடுங்கும் முழு உடலையும் போர்வைக்குள் ஒளித்துவைத்தபடி அம்மா மீது சாய்ந்தபடி வேடிக்கை பார்த்தேன்.
உளுவத் தலையன் வந்தான். எல்லாரும் கை தட்டினார்கள். வந்த கொஞ்ச நேரத்திலே திரையில் அழ ஆரம்பித்துவிட்டான். 'அய்யா, சாமி மக்களே... யாராவது இந்த உச்சிக் குடும்பனைப் பாத்தீங்களா? அவன ஆளைக் காணோம். யாராவது தேடிப் பிடிச்சுத் தந்தீங்கன்னா, உங்களுக்குப் புண்ணியமாப்போகும்ங்க!’ என்றபோது எதுவும் தெரியாத எல்லோரும் சிரிக்க, எனக்கு முகம் வேர்த்து ஒழுகியது.
'ஐயா... யாராவது என்னோட உச்சிக் குடும்பனைப் பார்த்தா அனுப்பிவைங்கய்யா! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்'' என்று இரண்டு கைகளையும் உளுவத்தலையன் பொம்மை அந்தக் கூட்டத்தைப் பார்த்து விரித்தபோது, கூடாரத்துக்குள் இருந்தபடியே அந்த நரைத்த கிழவன் இரு கைகளையும் நீட்டி என்னைப் பார்த்துக் கெஞ்சுவதைப் போலிருந்தது. கை, கால் எல்லாம் இன்னும் நடுங்க, போர்வையை இழுத்து மூடி அம்மாவின் மடிக்குள் புதைந்துகொண்டேன்.
திடீரென்று அம்மா குலவையிட... எழுந்து பார்த்தால், ராமபிரானும் சீதாப்பிராட்டியும் அயோத்தி நகருக்குள் வந்துகொண்டிருந்தார்கள். வனவாசம் முடித்து வெற்றிக் களிப்போடு கடவுள் நகர் திரும்பும் நேரத்தில் அபசகுனமாக உளுவத் தலையன் அழுதுகொண்டிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி அதிர்ச்சி அடைந்தவர்களில் ஒருவரான ராமபிரானே, உளுவத் தலையனைப் பார்த்துக் கேட்டார்.
'எனக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் இந்த நாளில், எதற்காக இப்படி நீ அழுகிறாய்?’
'சாமி... என் நண்பன் உச்சிக் குடும்பனை நான் தொலைச்சுட்டேன். அவன் இல்லாம என்னால வாழ முடியாது. வாழத் தெரியாது. அவன் எங்கே போனான்? அவனை யார் கூட்டிட்டுப் போனாங்க? எதுவுமே எனக்குத் தெரியாது. அவன் திரும்பி வரலைன்னா, நான் இங்கே இருந்து எந்தப் பயனும் இல்லை. அதான் கதறி அழறேன்!''
கூட்டம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பியது. எந்த வருடமும் ராமாயணத்தில் இப்படி ஒரு கதை வந்தது இல்லை. உளுவத் தலையனோ உச்சிக் குடும்பனோ அழுது அவர்கள் பார்த்ததே கிடையாது. அவர்களுக்கு இந்தக் கதை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும்போல.
''உச்சிக் குடும்பனைத் தொலைத்துவிட்டு உளுவத் தலையன் அழும் இந்த அபசகுன வேளையில், எனக்குப் பட்டாபிஷேகம் வேண்டாம். எத் தனை நாளானாலும் சரி, எப்போது உச்சிக் குடும்பன் வருகிறானோ... அப்போதுதான் எனக்குப் பட்டாபிஷேகம் நடக்கும்!'' என்று சொல்லிவிட்டு, ராமபிரான் மறுபடியும் காட்டுக் குத் திரும்ப, கூட்டம் சலசலத்துவிட்டது. ஊர்ப் பெரியவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். என்ன கூத்து, என்ன நடக்கிறது இங்கே என்று எல்லோரும் அந்தக் கூடாரத்துக்குள் செல்ல, இப்போது விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. உச்சிக் குடும்பன் பொம்மையை யாரோ திருடிவிட்டார்கள்.

'உச்சிக் குடும்பன்தானே! அவன் எதுக்கு? அது ஒரு வேடிக்கை பொம்மை. அந்தப் பொம்மை இல்லாம, பட்டாபிஷேகத்தை நடத்துங்கள்’ என்று எல்லோரும் சொல்ல, கிழவர் அத்தனை ஆவேசமாகிவிட்டார்.
'முடியவே முடியாது. உளுவத் தலையனும் உச்சிக் குடும்பனும் இல்லாம, நாங்க கூத்து நடத் துனதே இல்லை. நீங்க என்னடான்னா, பட்டா பிஷேகத்தையே நடத்தச் சொல்றீங்க. நடக்கவே நடக்காது. உச்சிக் குடும்பன் என் பாட்டன். அவன் இல்லாம, அவன் ஆசீர்வாதம் இல்லாம, ராமனுக்கு என்னால பட்டாபிஷேகம் நடத்த முடியாது. அதையும் மீறி அவன் இல்லாம நான் கூத்து நடத்தினா, என் குடி கூத்தே நடத்தாது'' என்று திட்டவட்டமாகக் கூறியபடி கூடாரத்தைப் பிரிக்கத் தொடங்க, கூட்டம் அவரைச் சுற்றி வளைத்து, 'எப்பா... நீ இப்படித் திடுதிப்புனு பட்டாபிஷேகத்தை நடத்தாமக் கிளம்பிப்போனா, விளைஞ்சுகிடக்கிற ஊர் வெள்ளாம வூடு வந்து சேருமா? நாசமாப்போயிடாதா? எப்படியாவது நடத்துப்பா. நடத்தாம இங்கே இருந்து போக முடியாது’ என்று ஊர்ப் பெரியவர்கள் கிழவரை மறித்துக்கொண்டு நின்றார்கள். எனக்கு வயிறு கலக்கியது.
'வேறு வழி இல்லை... உளுவத் தலையனும் உச்சிக் குடும்பனும் இல்லாமல் பட்டாபிஷேகத்தை நடத்தித்தான் ஆக வேண்டும்’ என்று எல்லோரும் சொல்ல, கிழவர் 'உங்கள் விருப்பம் நடத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். ராமருக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. ஊர்ப் பொதுமக்கள் ராமர் பொம்மைக்கும், சீதாப்பிராட்டி பொம்மைக்கும் மலர் மாலைகளையும் காணிக்கைகளையும் கொண்டுபோய்க் குவித்தனர். என் அப்பா என்னைத் தேடிப் பிடித்து, என் நடுங்கும் கைகளால் ராமபிரா னுக்கும் சீதாப்பிராட்டிக்கும் மாலைகளை அணிவிக்கவைத்தார். உச்சிக் குடும்பன் இல்லாமல் முதல்முறையாக பாக்கூத்தில் ராமருக்குப் பட்டாபிஷேகம் எங்கள் ஊரில், என்னால், அன்று நடந்து முடிந்தது என்பது பாக்கூத்தில் அவ்வளவு முக்கியமான ஒரு வரலாறு என்பது எனக்கு அப்போது தெரியாது.
காலையில் யாரிடமும் எதுவும் சொல்லாமல், கூடாரத்தைப் பிரித்துக்கொண்டு கிழவர் கிளம்பிக்கொண்டிருந்தார். அதற்கு முன்னரே ஊருக்கு வெளியே அவரின் ஒற்றை மாட்டு வண்டி திரும்பி வரும் நடுவழியில் சரியாக நான் உச்சிக் குடும்பன் பொம்மையைப் போட்டுவிட்டு, அருகில் உள்ள பாறைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன். நடுரோட்டில் கிடந்த பொம்மை யைப் பார்த்ததும் பதறி வண்டியை நிறுத்தி இறங்கிய கிழவர், அந்தப் பொம்மையை எடுத்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். வண்டியில் இருந்த எல்லோரும் ஓடிவந்து பொம்மையை வாங்கிப் பார்த்தார்கள். பாறைக்குப் பின்னால் நான் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல வேகமாக அந்தப் பாறையை நோக்கி வந்தார் அந்தக் கிழவர். எழுந்து ஒரே ஓட்டமாக ஓடி, நிற்பது யாரென்று தெரியாத உச்சிபறம்பில்தான் போய் நின்றேன். தூரத்தில் அந்த ஒற்றை வண்டி நகர்ந்துபோவது தெளிவாகத் தெரிந்தது. வண்டி மறைந்ததும் பறம்பிலிருந்து இறங்கி சாலைக்கு வந்தேன்.
உச்சிக் குடும்பன் பொம்மையை நான் போட்ட அதே இடத்தில், குழந்தைகள் காசு கொடுத்து வாங்கும் கலர் கலரான சிறுசிறு தலையாட்டிப் பொம்மைகள் கொத்தாகக் குவிக்கப்பட்டிருந்தன. அந்தக் கிழவர் இந்தத் திருடனுக்குத் தந்த பரிசு அவை. 15 பொம்மைகள் இருக்கலாம். நடுங்கிய கைகளால் அவற்றை அள்ளியெடுத்து நெஞ்சுக்கு அருகில் கொண்டுவரும்போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. அத்தனை பொம்மைகளையும் அப்படியே கொண்டுவந்து பெரிய குலுக்கைக்குள் போட்டு மூடிவைத்தேன். அடுத்த வருடம் பாக்கூத்துக் கிழவர் வந்ததும் அவரிடம் அப்படியே அந்தப் பொம்மைகளைக் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.
ஆனால், அதன் பிறகு எந்த பாக்கூத்துக்காரர்களும் எங்கள் ஊருக்கு வரவே இல்லை. எங்கள் ஊருக்கு மட்டுமல்ல; நான் போன எந்த ஊருக்கும் அவர்கள் வரவில்லை. இப்போது அந்த உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்கள் யாருக்காவது தெரியுமா?
- இன்னும் மறக்கலாம்...