மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவிழி - 27

அறிவிழி
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிழி ( Anton Prakash )

அண்டன் பிரகாஷ்

##~##

தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய வேலையில் இருப்பவர்களுக்கும், குடும்பத்தை விட்டு வேலைக்காக வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும், தங்கள் குழந்தைகளைவிட்டுப் பிரிந்திருப்பதன் வேதனை தெரியும். இதை நிவர்த்திசெய்யப் பயணம் முடிந்து ஊர் திரும்பும்போது, குழந்தைகளுக்குப் பரிசுகளின் மூலம் பிரிவின் வெறுமையைச் சற்றே நிரப்பி விட முயற்சிகள் நடக்கும். இமெயில், ஸ்கைப் என்றெல்லாம் வந்துவிட்டாலும், அருகில் இருப்பதன் அருமை, தூரம் சென்றால்தானே தெரியும். அதோடு, குழந்தைகளுக்குத் தெளிவான மொழிப் பயிற்சி வரும் வரை, அவர்களிடம் பேச்சிலும் எழுத்திலும் குறிப்பிட்ட அளவே தொடர்புகொள்ள முடியும்.

அவர்களுக்கு நன்கு புரிந்த மொழி அன்பும் அரவணைப்பும்தானே. இந்த அடிப்படைகளைக்கொண்டு பல முயற்சிகள் நடந்துவருகின்றன. உதாரணத்துக்கு, MessagePetz என்ற பெயரில் தயாரிக்கப்படும் பொம்மைக் கரடி. இந்தக் கரடிக்கு WiFi, Bluetooth இரண்டு இணைப்புகளும் உண்டு. அதன் கழுத்துக்குக் கீழ் செவ்வக வடிவில் சின்னத் திரை இருக்கிறது. அலைபேசி யில் இருக்கும் மென்பொருள் மூலம் நீங்கள் இந்தத் திரையில் எழுத்துகளையும் படங்களையும் அனுப்ப முடியும். படுக்கச் செல்லும் இரவு நேரத்தில் ‘Good night sweet heart’ என்று செய்தியை அனுப்புகிறீர்கள். அந்தச் செய்தி திரையில் ஒளிர்கிறது. அதைப் பார்த்த உங்கள் குழந்தை கரடி பொம்மையைக் கட்டிப்பிடிக்கிறாள். இதைக் கண்டறிந்து கரடி பொம்மை உங்களுக்கு ‘You just got a hug’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பும்.

அறிவிழி - 27

இந்தப் பொம்மை போன்ற சாதனங்களை இணையத்தில் இணைக்கப்பட்ட வஸ்தாதுக்கள் ( Internet of things ) என்று அழைக்கிறார்கள். தூரமாக வாழும் தம்பதியினர் தமது செக்ஸ் வாழ்க்கையைத் தொடர்ந்து சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள, Durex நிறுவனம் வெளியிட்டிருக்கும் இணைய இணைப்பு வஸ்தாதுபற்றி எழுத இந்தத் தொடருக்கு 'A’ சான்றிதழ் வேண்டும் என்பதால், அதை நீங்களாகவே கூகுளிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். Internet of things... பிரிவு அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பிரமாண்டமாக வளரும் என யூகிக்கப்படுகிறது. பிரபல டெக் நிறுவனமான Cisco நிறுவனம் 2020-க்குள் இந்தப் பிரிவு 14 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புக்கு விரிவடையும் என்கிறது. உண்ணும் உணவு தவிர, பயன்படுத்தும் ஒவ்வொன்றும் இணையத் தில் இணைக்கப்பட்டதாக இருக்கும் நிலை வர, அதிக வருடங்கள் ஆகலாம். ஆனால், அடுத்த சில வருடங்களில் உங்களைக் குறிவைத்து இரண்டு வகையான சாதனங்கள் படையாகப் புறப்பட்டு வரப்போகின்றன. ஒன்று, கண்களில் அணிந்துகொள்ளும் கூகுள் கிளாஸ் போன்றவை. அடுத்தது, உங்களது கைகளின் மணிக்கட்டைக் குறிவைத்து கடிகாரமாகக் கட்டிக்கொள்ளவும் ப்ரேஸ்லெட்போல அணிந்துகொள்ளவும் வசதியான வகையில் வரவிருக்கும் சாதனங்கள்.  

இந்தப் பிரிவு கிடுகிடுவெனப் பிரபலமாகிவிடும் எனத் தோன்றுகிறது. காரணம், நமது வாழ்வில் அவசியமானதாக ஆகிவிட்டிருக்கும் அலைபேசி யின் குறைபாடுகள். ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்ற ஸ்மார்ட் அலைபேசியின் பயனீட்டாளர் சராசரியாக 150 தடவை அலைபேசியைப் பயன்படுத்துகிறாராம். குறைந்தது ஒரு கையாவது இதற்குத் தேவை என்பதால், நமது கைகளின் இயக்கம் குறிப்பிட்ட அளவுக்கு அலைபேசி உபயோகத்துக்கு என்றே நாளன்றில் செலவாகிவிடுகிறது. உதாரணத்துக்கு, உடற்பயிற்சி செய்ய உதவும் MyfitnessPal போன்ற பல அலைமென்பொருட்கள் இருக்கின்றன. 15 நிமிடங்கள் நின்றும், நடந்தும், குனிந்தும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிபற்றிய விவரங்கள் அலைபேசியின் மென்பொருளில் இருந்தாலும், அதைப் பார்ப்பதற்குக் கைகள் தேவை; அதற்குப் பதிலாகக் கையில் கட்டிக்கொள்ளும் சாதனமாக இருந்தால், உங்களது கைகளை மற்ற இயக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? இதுபோலத் தின வாழ்வின் பல்வேறு தேவைகளுக்கு அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவதைவிட, மணிக்கட்டுப் பகுதியில் கட்டிக்கொண்டுவிட முடிந்தால் நமது செயல்திறன் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்தச் சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

அணிந்துகொள்ளும் சாதனங்களின் உதவியால் தனிப்பட்ட மனிதர்களின் இயக்கம்பற்றிய தகவல்கள் அதிகமாகச் சேகரமாகும். இந்த big data-வைப் பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகள் நடக்கும்.

அறிவிழி - 27

மேரி மீக்கர் என்ற பெயர் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் பரிச்சயம். சிலிக்கான் வேலி பகுதியின் புகழ்பெற்ற KCPB  என்ற தொழில் முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் மீக்கர், வருடத்துக்கு ஒரு முறை மே அல்லது ஜூன் மாத வாக்கில் இணையம்பற்றி வெளியிடும் விவரங்கள் டெக் உலகில் இருப்பவர் களால் மிகவும் மதிக்கப்படுபவை. மீக்கர் இந்த வாரம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை:

இணையம் தொடர்ந்து விரிவடைந்தபடியே வருகிறது. அடுத்த வருட இறுதிக்குள் 3 பில்லியன் மக்கள் இணையத்தில் இணைந்துவிடுவார்கள். இணையத்தின் டாப் 10 தளங்களில் 8 தளங்கள் அமெரிக்காவில் உருவானவை. ஆனால், இவற்றின் பயனீட்டாளர்களில் 80 சதவிகிதம் அமெரிக்காவுக்கு வெளியே இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கர்கள் ரொம்பவே கஞ்சம். இதில் நம்பர் ஒன் இடம், இந்தியர்களுக்கு!

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதில் சீனா முதல் இடம் பிடித்துவிட்டது. அதே சமயம் இந்தியாவில் இப்போதுதான் 'வைரல் வேகத்தில்’ ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவருகிறது!  

- விழிப்போம்...