Published:Updated:

“பதினேழு வருஷம் மிருகமா இருந்தேன்!”

“பதினேழு வருஷம் மிருகமா இருந்தேன்!”

“பதினேழு வருஷம் மிருகமா இருந்தேன்!”
##~##

சென்னை கோடம்பாக்கம், டைரக்டர்ஸ் காலனி. நடைபாதைக் கடைகளில் ஒன்றாக இருக்கிறது பிச்சையா தேவரின் அந்த டீக்கடை.

''திருட்டு, கொள்ளை, வழிப்பறினு செஞ்சுக்கிட்டு ஒரு பதினேழு வருஷம் மிருகமா அலஞ்சம்யா... வேண்டாம்னு அந்தக் கருமத்தத் தலை முழுகிட்டு, இப்பிடி டீத்தண்ணியப் போட்டு வித்துக்கிட்டு இருக்கம்யா. இருபது வருஷத்துக்கு முந்தி திருநவேலி டவுன்ல பிச்சைத் தேவர் சரக்குனு மோந்து பாத்தே சொல்ற அளவுக்கு, அருமையா சாராயங் காச்சி வித்தம்யா...'' - சாதாரணமான குரலில் சொல்கிறார் அந்த டீக்கடைக்காரரான பிச்சையாத் தேவர்!

ஆம்... பிச்சையாவைப் பார்க்கிற யாருக்கும் அவரது பூர்வீகம்பற்றி எந்தச் சந்தேகமும் வராது. மெலிந்த ஆனால், உறுதியான தேகம். நெற்றி நிறையச் சந்தனத்துடன் இஞ்சி டீ போட்டுத் தரும் பிச்சையாவைப் பார்த்தவுடன் யாருக்கும் பிடித்துப்போகும்.

இவரின் கதை 60-களில் தொடங்குகிறது. திருநெல்வேலியை அடுத்த மதக்குறிச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் மானூர் ரஸ்தாதான், பிச்சையாவின் பூர்வீகம்.

''திருட்டுப்பய ஊர்யா எங்கூரு. ஆனா, இப்ப இல்ல. என்னோட முடிஞ்சுதுய்யா. என்னைவெச்சே ஊரத் திருத்திப்புட்டாங்கய்யா.''

18 வயதில் செட்டியார் ஒருவரை வழிப்பறி செய்ததாக ஒரு பொய் வழக்கில் சேர்த்த பிறகுதான், பிச்சையாவின் திருட்டு வாழ்க்கை ஆரம்பித்தது. அக்கம்பக்கத்துக் கொள்ளையரும் அவ்வப்போது, 'ஒரு கை குறையுது, வா தம்பி’ என்று கூப்பிட ஆரம்பித்தனர்.

''நூத்துக்கணக்குல சங்கிலி அறுத்தம்யா... ஆயிப்போச்சு, கொள்ளக் காலம் ஆயிப்போச்சுல்லா... எங்கிட்டு அறுத்தம், யாரு கழுத்துல அறுத்தம்னே இப்பெல்லாம் நெனவில்ல.. ஊரூரா, காடு காடாப் போயிக் கொள்ளைஅடிச்சோம். வீரவநல்லூர்லதாம்யா முதத் தடவையா புடிச்சுப்போட்டாங்க... 401 கேங் ராப்ரி'' என்று சொல்கிற பிச்சையா மீது போலீஸ் தொடர்ந்த 10 வழக்குகளில் அவரே நேரடியாக வாதாடி, எட்டில் விடுதலை பெற்றிருக்கிறார்.

''ரெண்டு கேஸ்ல மட்டும் தோத்துப்புட்டேன்...'' என்பவர், சில வருடச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்து, இப்போது பழைய வாழ்க்கையைவிட்டு விலகிவிட்டாலும் அப்போது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கையில், பிச்சையாவின் சோர்ந்த கண்கள் பிரகாசிக்கின்றன. திருமணம் ஆன பிறகு, கொஞ்ச நாள் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, விவசாயம் பார்த்திருக்கிறார் பிச்சையா. மழை பொய்த்ததும் விறகு வெட்டி, டவுனில் கொண்டுபோய் விற்றும் கைவண்டி இழுத்தும் வாழ முயன்றிருக்கிறார். முடியவில்லை. கையில் இருந்த ஒரு ரேடியோவை 300 ரூபாய்க்கு விற்று, மூன்று சிப்பம் கருப்பட்டி வாங்கித் தங்கள் தோட்டத்திலேயே சாராயம் காய்ச்சி விற்க ஆரம்பித்தார்.

அந்தத் தொழிலுக்கும் போட்டி வந்துவிட்டது. அந்தப் பகுதி பிரபல தாதா அருவா காத்தப்பத் தேவரின் தம்பி லட்சுமணனை போலீஸ் பிடித்ததும் லட்சுமணன், பிச்சையா வைக் காட்டிக்கொடுக்க... பிச்சையாவின் ஊறல் பானைகளை உடைத்து எறிந்தது போலீஸ்.

''சரக்கு வித்துட்டு சாயந்திரம் வந்தம்யா... இதப் பாத்ததும் கோவம் தலைக்கேறிப்போச்சு. லட்சுமணன் வூட்டு வாசல்ல போய் நின்னு, கண்டமேனிக்கு ஏசிப்புட்டு வந்து படுத்துட்டேன். மறுநாள் காலைல நான் டீக்கடைல இருக்கேன். இந்தப் பய லட்சுமணன் அங்க வந்தாம்யா. உள்ள போய், அவங்க அண்ணன் காத்தப்பன் இருக்கானானு பார்த்துட்டு வெளிய வந்து, என் செருப்பையே எடுத்து என்னை அடிச்சுப்புட்டான். அப்புறம் காத்தப்பன் கையில அருவாளோட வந்து வாசல்ல நின்னான். அங்கு இருந்த ஆளுங்க தடுத்துட்டாங்க. நான் வந்துட்டேன். இது பெரிய மானக்கேடாப் போச்சுய்யா.

என்னை வழில பாத்தா... கேவலமா ஒரு வார்த்தை சொல்லிக் காறித் துப்புவான் காத்தப்பன். நான் அப்பிடியே கூசிப்போயிருவேன். அப்பதான், எங்கூட இன்னும் ரெண்டு பேரு சேந்தாங்க. தங்கபாண்டி, நாராயணன்னு... சமயம் பாத்துக் காத்திருந்தோம்.

“பதினேழு வருஷம் மிருகமா இருந்தேன்!”

ஒரு நாள் லட்சுமணன் திருநெல்வேலில இருந்து வைக்கோல் வண்டி ஓட்டிக்கிட்டு வர்றது தெரிஞ்சு, 'இன்னிக்கு இவனை மொதல்ல தீத்துருவம்’னுட்டுப் பொறப்பட்டோம். நேரா எங்க சாமிகிட்டப் போனேன். சாமிங்கறது பண்டாரசாமி கோமுட்டிக் கோட்டை சாமி. அவரே ஒரு தெய்வம். அவருகிட்டப் போய் 'சாமி, டார்ச் லைட் தாங்க’னு கேட்டேன். சாமி ஒண்ணும் பேசாம, டார்ச் லைட்டைத் தந்தாரு. அவரு குடுத்ததும் அந்த முருகனே வந்து வரங் குடுத்த மாதிரி. மூணு பேரும் போய் ரோட்ல காத்திருந்தோம். கொஞ்ச நேரத்துல லட்சுமண னோட வண்டி வந்த தைப் பாத்துட்டோம்.

அவனும் எங்களைப் பாத்துட்டாம்யா. அவனுக் கும் நெஞ்சுல சுருக்குன் னுட்டு இருக்கும்ல. 'எலே’ அப்பிடின்னு சத்தங் குடுத்தான். நான் டார்ச்சை அடிச்சுக்கிட்டே ஓடுறேன். வண்டில ஆளக் காங்கல. நல்லா உத்துப் பாத்தேன்... எடது மாட்டுக்குப் பின்னால உக்காந்து இருக்கான் லட்சுமணன். தல மட்டுந்தான் தெரியுது. வண்டியச் சுத்திக்கிட்டு எடது பக்கமா வந்து, கையில இருந்த கட்டையால கெரண்டக் கால்ல ஒண்ணு போட்டேன். அப்பிடியே சாஞ்சுட்டான். அவன் தல துண்டையே அவுத்து, கைய பின்னா லக் கட்டி இழுத்து ஓரமாப் போட்டுட்டு, என்ன செருப்பால அடிச்ச கைய மணிக்கட்டுல இருந்து மூட்டு வரைக்கும் கட்டையால அடிச்சுக் கூழாக்கிட்டேன்.

அவனக் கொன்னே இருப்பம்யா... ஆனா, மூதி இழுத்துக் கீழ போட்டதும் 'பிச்சையா, அன்னிக்கு என்ன என்ன ஏச்சு ஏசுனே... நான் ஒரு வார்த்தையாச்சும் பேசி இருப்பனா?’னு கெஞ்சுதாம்யா. அவன எப்பிடிக் கொல்றது? வுட்டுத் தொலைச்சுட்டேன். ஆனா, இவன் ஒத்தக் கால இழுத்துக்கிட்டே ஊருக்குள்ள வந்துருவான்னு ஒரு பயம் இருந்தது எனக்கு. அதனால என்ன பண்ணேன்... 'யே லட்சுமணா... உங்கண்ணனை அடிச்சு ஒடங்காட்ல போட்டு இருக்கம்லே’ அப்பிடினு அவங்கிட்ட சொன்னேன். 'சத்தங் குடுத்தாலோ, இங்க இருந்து ஒரு அடி நவுண்டாலோ, உங்கழுத்த கரகரன்னு அறுத்தெறிஞ்சுருவோம்’னுட்டு திரும்பி வந்தோம்.

மணி நாலாச்சு. காத்தப்பனைத் தேடிப் பொறப்பட்டோம். பிள்ளைவாள் கடைல சைக்கிளை விட்டுட்டு டீ குடிச்சுக்கிட்டு இருந்தான். நான் அவனைப் பாத்த அதே செகண்டுல அவனும் என்னப் பாத்துட்டான். 'ஏலே காத்தப்பா’னு எங்குரலக் கேட்டதும் அப்பிடியே செலயா சமஞ்சுபோயிட்டான். சைக்கிளைப் போட் டுட்டு ஓடிப்போயி, அவங்கையப் புடிச்சேன். நாராயணன் ஓடி வந்து இன்னொரு கையப் புடிச்சான்.

அருவாக் காத்தப்பன், நல்ல ஓங்குதாங்கான ஆளு. ஆனா, அன்னிக்கு எங்கோபத்தப் பாத்து அவன் பயந்துபோயிருக்கணும். அப்பிடியே நின்னான். புடிச்ச கையத் திருப்பி பைப்பால ஒரே போடு... அவன அந்தமானிக்கு இழுத்துக்கிட்டுப் போயி, ஒடங்காட்ல போட்டு பைப்பால அவனோட வலது கையில ஒரு நூத்தம்பது அடி. அடில கட்டய வெச்சுட்டு, அவனோட வலது கால்ல நூத்தம்பது அடி... அப்புறம் கொல்ல மனசில்ல... ஆமா, அப்பிடியே வுட்டுட்டு நேரா வந்தோம். உனக்கு மீச வேறயாடானு அவனோட மீசையக் கையில புடிச்சு, ரத்தம் வரவரப் புடுங்கி எறிஞ்சுட்டுதாம் அந்த எடத்த வுட்டே வந்தேன்னா, பாருங்க.

நேரா லட்சுமணன் வூட்டு வாசலுக்கு வந்து நின்னு, 'கேட்டுக்க... உம் புருஷன அடிச்சுத் தாழையூத்து ரோட்டுல போட்டிருக்கோம். காத்தப்பனை அடிச்சு மேக்கால ஒடங்காட்டுல போட்டிருக்கோம்... போய் எடுத்துக்கிட்டுப் போங்க’ன்னுட்டு, நேரா வூட்டுக்கு வந்துட்டேன்...'' என்று இப்போது அந்த ரத்தம் தோய்ந்த நாட்களை விவரிக்கும்போதும் பிச்சையாவின் கோபம் இன்னும் தெரிகிறது.

சென்னையில் தான் உண்டு தன் டீக்கடை உண்டு என்று மிக அமைதியாக இருக்கிறார். அவர் கடையருகே யாராவது அடித்துக்கொண்டால் மட்டும், ''ஏய்! வேணாம்யா... நீ எதிராளிய அடிக்கற அடி, உன் எதிர்காலத்து மேல வுழுற அடிய்யா... நீ கொல்லப் பாக்கறது அவனை இல்லை... உன்னையேதாம்யா. வாழ்நாள் பூரா அழுந்தி அழுந்திச் சாவணும்யா. வுட்ரு... அனுபவப்பட்டவஞ் சொல்றம்யா... வுட்ரு...'' என்று பதற்றத்துடன் தடுத்து, அடித்துக்கொண்டவர்களுக்குத் தன் கதையைச் சொல்வாராம்.

- ரூபன் ஜே

படங்கள்: கே.ராஜசேகரன்