
யட்சன் - 21

##~## |
செந்திலின் அறை நேர்த்தியாக இருந்தது. கட்டிலுக்கு அடியில் செருகப்பட்டிருந்த சிறு பயணப் பெட்டியைத் திறந்தார் இன்ஸ் பெக்டர் துரைஅரசன். துவைத்து, மடித்து ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த துணி வகைகளுக்குக் கீழே, ஒரு டைரி கிடைத்தது. புரட்டினார்.
'கெடைச்சிருச்சுய்யா! அந்த தீபாவோட போன் நம்பர், இவனோட வீட்டு அட்ரஸ்... எல்லாம் இதில் இருக்கு'' என்று எழுந்தார் துரை அரசன்.
ஒற்றைப் படுக்கையறை. அகலமான ஹால். குட்டியான சமையலறை. வெளிச்சமும் காற்றோட்டமும் தரும் ஜன்னல்கள். அந்தச் சிறிய போர்ஷனைப் பாரிக்குப் பிடித்திருந்தது. மாடி போர்ஷனில் வீட்டுச் சொந்தக்காரர். ஓய்வூதியத்தில், மனைவியுடன் நிம்மதியாக வாழ்பவர்.
''பசங்க ரெண்டு பேரும் அமெரிக்கால இருக்காங்க. தேவி சொன்னதுக்காகத்தான் தரேன். கூட்டம் சேர்க்கிறது, தண்ணியடிக்கிறது, கலாட்டாப் பண்றதெல்லாம் இல்லாமப் பார்த்துக்க.''
''அதெல்லாம் பாரிக்குத் தெரியவே தெரியாது'' என்றாள் தேவி.
ஒரு மாதத்துக்கு முன்பு இப்படி ஒரு அழகான பெண் தனக்காக வீடு பிடித்துக் கொடுப்பாள் என்று, பாரி கற்பனைகூடச் செய்தது இல்லை. கனவுக்குள் இருப்பதைப் போல இருந்தது.
முன்பணத்துடன் வருவதாகச் சொல்லி விட்டு, தேவியுடன் வெளியே வந்தான். தெரு முனையில் நாகுவுக்காகக் கூடியிருந்தவர் களைத் திரும்பிப் பார்த்த பாரியின் கையைப் பற்றி, தேவி தன் பக்கம் இழுத்தாள்.
''அங்கே பாக்காதே...''
அவள் தானாக எடுத்துக்கொண்ட உரிமை, பாரிக்குப் பிடித்திருந்தது.

''செந்தில் தப்பானவன் இல்ல சார். சினிமாதான் அவன் கனவு. நான் எடுத்த போட்டோவைத்தான் ஷங்கர் சார் ஆபீஸ்ல குடுத்தான்...'' என்றான் கோபிசந்த்.
''உங்களுக்கு செந்திலை எத்தனை நாளாத் தெரியும்?''
''இந்த மேன்ஷனுக்கு அவன் வந்ததுலேர்ந்து நல்ல பழக்கம் சார்.''
''24 வயசு அவனுக்கு. மூணு, நாலு மாசம் பழகினதைவெச்சு ஒருத்தனை எடை போடா தீங்க. ஒருத்தனை நெத்திப் பொட்டுல சுட்டிருக் கான். எவ்ளோ பயிற்சி இருக்கணும்?''
அதற்கு மேல் செந்திலுக்கு ஆதரவாகப் பேசி, தன் நிலையை ஆபத்துக்கு உள்ளாக்கிக்கொள்ள கோபிசந்துக்கு விருப்பம் இல்லை.
'உடனடியாகத் தொடர்புகொள்...’ என்று 100-வது முறையாக மெசேஜ் செய்தாள் தீபா. அதுவும் வீணானது.
அம்மாவை விட்டு நகர முடியாமல் தவித்தாள். நிழலாடியது. நர்ஸ்.
''தீபா உங்களைத் தேடி போலீஸ் வந்திருக்கு...''
அதிர்ந்தாள். பரபரப்பாக வெளியே வந்தாள். காத்திருந்த சப் இன்ஸ்பெக்டர் புன்சிரிப்பு இல்லாமல் பேசினார்.
''சென்னை இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட செந்தில் பத்தி விசாரிக்கணும்னு சொல்றார்...''
''செந்திலுக்கு என்ன ஆச்சு..?'' என்றாள் தொண்டை அடைக்க.
''செந்திலுக்கு எதுவும் ஆகலை. மூணு பேரைக் கொலை பண்ணிட்டு, அந்த ஆளுதான் தலைமறைவாயிட்டாரு.''
அதிர்ச்சியில் நிலைகுலைந்த தீபா, ஆதரவுக் காகச் சுவரைப் பற்றிக்கொண்டாள். சப் இன்ஸ் பெக்டர் தன் போனில் டயல் செய்து, ''சார், தீபா சார்...'' என்று அவளிடம் நீட்டினார்.
''தீபா, செந்தில் எங்க..?'' என்றார் மறுமுனை துரை அரசன்.
''நானும் அவன் போனுக்காகத்தான் தவிப்போட காத்திருக்கேன்.''
''பொய் சொல்லலியே?''
''சத்தியம் சார். செந்தில் கொலை எல்லாம் பண்ண மாட்டான்.''
''அழாதீங்க... போலீஸுக்கு
ஒத்துழைப்பு கொடுங்க.''
தீபா மெள்ள அங்கு இருந்த நாற்காலியில் சரிந்தாள்.
பாரி தெருமுனையில் நின்றிருந்த போலீஸ் வாகனத்தைப் பார்த்தான். மேன்ஷன் வாசலில் கான்ஸ்டபிள் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்.
பாரி கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று, 'காவல் துறையைக் கண்டு பயப்படக் கூடாது’ என்பது. விரல்கள் நடுங்கி, வார்த்தைகள் குழறி, முகம் வியர்த்தால், செய்யாத குற்றத்துக்குக் கூடப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.
பல சந்தர்ப்பங்களில் காவலர்களை நேருக்கு நேர் சந்தித்து நெருக்கமாகக் கடந்துபோயிருக்கிறான். கான்ஸ்டபிளைக் கடக்கும்போது, இயல் பான தோர் ஆச்சர்யத்தை மட்டும் முகத்தில் காட்டிவிட்டு பாரி நுழைந்தான்.
''பாரி... உன்கிட்ட பேசணும்னு இன்ஸ்பெக்டர் வெயிட் பண்றார்...'' என்றார் மேனேஜர்.
கிருபாவின் வீடு இருந்த பகுதி, கோட்டூர்புரத்தில் கால்வாயை ஒட்டிக் கிளை பிரியும் ஒரு அம்மன் கோயில் வீதி. வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு, மகனுக்காக வாங்கி யிருந்த ஜெம்ஸ் பாக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு கிருபா தன் வீடு நோக்கி நடந்தான்.
ஒன்றிரண்டு வீடுகளில் கிரிக்கெட் மேட்ச்சின் இரைச்சல். மற்றபடி சந்தடி இல்லை. பத்தடிகூட நடந்திருக்க மாட்டான். சட்சட்டென்று நிழலில் இருந்து நான்கு பேர் வெளிப்பட்டனர். நால்வரும் கண்களை மட்டும்விட்டு, முகத்தைத் துணியால் மூடியிருந்தனர்.
உடனே, கிருபாவின் மூளை உஷார் சிக்னல் அனுப்ப, இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவினான். ஆனால், முதல் வெட்டு கையில் விழுந்து துப்பாக்கி எகிறியது. தொடர்ந்து கத்திகள், அரிவாள்கள் சரமாரியாக அவனை வெட்டின. தீனமாகக் குரல் கொடுத்தபடி, தார் ரோட்டில் ரத்தம் பாய, கிருபா மயங்கி விழுந்தான். வந்தவர்கள் சடுதியில் இருளில் மறைந்தார்கள்.
- தடதடக்கும்