ரீடர்ஸ், ஓவியங்கள்: சேகர்
##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
புகைப்பட மேக்கப் புகைச்சல்!
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுப்பதற்காக சென்றிருந்தேன். இயல்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தலைக்குக் குளித்து, மேக்கப் தவிர்த்து, வெறும் பொட்டு மட்டும் வைத்திருந்தேன். எடுத்த படம் திருப்தியாக வந்திருந்தது. பிரின்ட் போட அரை மணி நேரம் ஆகும் என்பதால், பின்னர் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்துச் சென்று புகைப்படத்தை வாங்கியதும், அதைப் பார்த்து நொந்துவிட்டேன். 'டச் அப்' செய்கிறேன் பேர்வழி

என்று, பறந்திருந்த முடியை வெட்டி, முகத்துக்கு பவுடர் அடித்து என கம்ப்யூட்டர் மூலமாக என் முகத்தை அலங்கோலமாக்கியிருந்தனர். எனக்கு அந்தப் புகைப்படங்கள் அவசரமாக தேவை என்பதால், வேறு வழியில்லாமல் அவற்றை வாங்கிக் கொண்டு, ''இனி, புகைப்படத்துக்கு மேக்கப் போடுவது என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு ஒப்புதல் பெற்றுச் செய்யுங்கள்'' என்று அறிவுறுத்திவிட்டு வந்தேன்.
- என்.உஷாதேவி, மதுரை
நமக்கு நாமே!
சென்னைக்குப் புதிதாக மாற்றலாகி வந்த என் தோழி, தன்னுடைய பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மூன்று, நான்கு தபால் கார்டுகளை தானே எழுதி, புதிதாக குடியேறியிருக்கும் முகவரிக்கு அனுப்பினாள். இதற்கு அவள் தந்த விளக்கம் - ''புதிதாக

குடிவந்துள்ள எங்களுடைய குடும்பத்தினரின் பெயர்கள், இந்தப் பகுதி தபால்காரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், எந்த வீடு, யார் என்றெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு தடுமாற்றமாகவே இருக்கும். இப்படி நாமே நான்கைந்து கடிதங்களைப் போட்டு வைத்தால், பெயர்கள் பரிச்சயமாகிவிடும். அதன் பிறகு, கடிதங்கள் எல்லாம் சரியான நேரத்துக்கு, தவறாமல் வந்து சேர ஆரம்பித்துவிடும்.''
நாமும் பயன்படுத்தலாம்தானே இந்த நல்ல யோசனையை!
- சுஜாதா, சென்னை-61

கடவுளே ஆனாலும்..?!
எங்கள் பகுதியில் நாற்சந்தியிலிருக்கும் அம்மன் கோயிலருகே நின்று கொண்டிருந்தேன். ஸ்கூட்டியில் வந்த ஓர் இளம்பெண், கோயில் கருவறையை நோக்கி முகத்தை திருப்பி, கண்கள் மூடி இருநொடிகள் பிரார்த்தித்தபடியே அதேவேகத்தில் சென்றாள். அதேநேரம், நாற்சந்தியின் மற்றொரு முனையிலிருந்து வந்த டேங்கர் லாரியை அவள் கவனிக்காமல் போகவே... கண் மூடி கண் திறப்பதற்குள் விபத்தில் சிக்கினாள். பலத்த அடிபட்டவளை, அருகிலிருந்தவர்கள் தூக்கி உட்கார வைத்து முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, கடவுளே ஆனாலும்... கவனம் வண்டியில் வேண்டுமல்லவா? அரசியல் தலைவர் பிரசார வேனில் வேகமாகப் போகும்போது ஜனங்களுக்கு கை காட்டுவது போல, கோயிலைப் பார்த்தால்... நொடியில் கும்பிட்டுக் கடக்கும் பழக்கம் வேண்டாமே... குறிப்பாக, டிரைவிங்கில் இருக்கும்போது!
- அ.யாழினி பர்வதம், சென்னை-78

மாமியாரைப் பிடித்திருக்கிறது!
என் தோழியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர். பெண்ணை அவர்களுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று கேட்டபோது, ''என் வருங்கால அத்தையிடம் தனியாக பேச வேண்டும்'’ என்று சட்டென்று சொன்னாள் தோழி! 'பொதுவாக மாப்பிள்ளையும் பெண்ணும்தான் தனியாக பேசுவார்கள், இதென்ன புது விருப்பம்?' என்று அனைவருக்கும் ஆச்சர்யம். என்றாலும், மாப்பிள்ளையின் தாயார், இதற்கு சம்மதித்தார். தனி அறைக்கு சென்ற இருவரும், சில நிமிடங்களில் சிரித்த முகத்துடன் வந்தனர். ''திருமணத்துக்கு முழு சம்மதம்'’ என்று தோழி சொல்ல, அனைவரும் சந்தோஷத்துடன் கலைந்தனர்.
''வருங்கால அத்தையிடம், அப்படியென்ன ரகசியம்?'' என்று தோழியிடம் நான் விசாரித்தபோது,
''கணவன் - மனைவி உறவுக்குள் காலப்போக்கில் புரிதல் வந்துடும். ஆனா, மாமியார் - மருமகள்ங்கிறது... சிக்கலான உறவு. 'அத்தைகூட பேசணும்’னு அவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததுலயே... என் மேல அவங்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஆரம்பிச்சாச்சு'' என்றவளை கட்டியணைத்தேன்.
சபாஷ்!
- ஆர்.வனஜா, போளூர்