பருமனைக் குறைக்க... பாதை காட்டும் புத்தகம்!
##~## |
'மூன்றே மாதத்தில் முப்பது கிலோ எடையைக் குறைக்கலாம்’, 'ஸ்லிம் பாடிக்கு நீங்கள் சொந்தக்காரி ஆகலாம்’, 'உப்பிய வயிற்றை ஒட்டிய வயிறாக மாற்றலாம்’ போன்ற விளம்பரங்களே தொலைகாட்சி நிகழ்ச்சிகளாக வரிசைக்கட்டி வருகின்றன.
உடல் பருமன் என்பது நம் ஆரோக்கியத்தைக் குலைத்து, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். 40 வயதுக்குள் பெரும்பாலான நோய்களுக்குப் பாதை அமைத்துக்கொடுப்பதில் உடல் பருமனுக்குத்தான் பெரும்பங்கு உண்டு. உடல் பருமனுக்கான காரணங்கள், பாதிப்புகள் மற்றும் தீர்வுகளை தெளிவாக தந்திருக்கிறது இந்நூல்.
அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய இந்தியாவும் இந்த நிலையை எட்டிப் பிடித்துவிடும். இந்த நிலையில், உடல் பருமனைக் குறைக்கும்போது ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சவால்களைப் பட்டியல் இடுகிறார் டாக்டர் மு.அருணாசலம். 'எப்படி உடல் பருமன் ஏற்பட்டது என்பதைத்தான் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். வேறு ஏதேனும் உடல் பிரச்னைகளின் காரணமாக உடல் பருமன் ஏற்படவில்லை என்பது மருத்துவச் சோதனைகளின் மூலம் உறுதியாகிவிட்டால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதே அவர்கள் குண்டாக இருப்பதற்குக் காரணம்’ என் கிறார் ஆசிரியர்.

இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது 'சைல்ட் ஒபிசிட்டி’. இதற்கானத் தீர்வைத் தேடி, மருத்துவ உலகமும் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது. தற்காப்பு நடவடிக்கைகளை குழந்தை பிறந்தது முதல் மேற்கொண்டால்தான், அவர்கள் வளரும் போது, நல்ல சத்தான உணவுகளை சரியான அளவில் சாப்பிடப் பழகு வார்கள்.
உடல் பருமனைக் குறைப்பது என்பது மந்திரமோ, மாயமோ அல்ல; உணவுக் கட்டுப்பாடு என்கிற விஷயத்தில்தான் நுணுக்கமான சங்கதிகள் இருக்கின்றன. எந்த உணவைக் குறைக்க வேண்டும், எப்படிக் குறைக்க வேண்டும், எந்த உணவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும், உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சிகள், எந்த நேரத்தில் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
படித்துவிட்டு நிச்சயம் பின்பற்ற தூண்டும் வகையிலும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அற்புதமான நூல்!