பொள்ளாச்சி நசன் என்.ஜி.மணிகண்டன்
##~## |
தமிழைப் படிக்கச் சிரமப்படும் சுட்டிகளுக்கு, தாய்மொழியைப் பிழையின்றி படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று நம்புகிறேன்.
முதல் பகுதியில் படித்தவற்றை இப்போது மீண்டும் ஒரு முறை அசைபோடவையுங்கள். கீழே உள்ளவற்றை யாருடைய உதவியும் இல்லாமல் படிக்க வேண்டும்.
'டட், மட, மப், மடம், படம், மட்டம்,
டம்டம், டம டம், பட டப், பட்டம்.’
இவற்றைப் படிக்க முடிந்தது அல்லவா? வாழ்த்துகள். இனி, அடுத்த நிலைக்கு நகர்வோம்.
முதல் ஐந்து அட்டைகளின் தொடர்ச்சியாக, இங்கே எட்டு அட்டைகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வோர் அட்டையிலும் உயிர்மெய் எழுத்தும், மெய்யெழுத்தும் அருகருகே தரப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு இரண்டு எழுத்துகள் படித்தால் போதும். பிறகு, முன்புபோலவே படித்ததை மதிப்பீடு செய்ய, செய்தித்தாளில் வட்டமிட வேண்டும்.
ஓர் அட்டையைப் படித்து முடித்த பிறகு, அந்த அட்டையின் கீழ் உள்ள அட்டையில் இருக்கும் எழுத்துகளைப் படித்துப் பழக வேண்டும்.
எடுத்துக்காட்டாக, அட்டை எண் 4-ஐ படித்து முடித்த பிறகு, அதற்குக் கீழே உள்ள அட்டையான 4 a-வில் உள்ள இரண்டு எழுத்துகளையும், சொற்களையும் தாமாகவே படித்துப் பழக வேண்டும்.

மாணவர்கள் எளிமையாக எழுதுவதற்கு ஏற்றவாறு, இந்த அத்தியாயத்தில் உள்ள நான்கு எழுத்துகளும் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. 'ச’ எழுத்தை மட்டும் எழுதிப் பழகினால் போதும். பிறகு, 'ச’ எழுத்தைக் கொஞ்சம் கீழே வளைத்தால், அது 'க’ எழுத்தாகும். 'க’ எழுத்தைக் கொஞ்சம் கீழே நீட்டினால், அது 'த’ எழுத்தாகும். 'த’ எழுத்தின் நடுவே கொஞ்சம் நீக்கினால், 'ந’ எழுத்தாகும். இந்த வரிசைப்படி ஓர் எழுத்தை எழுதிப் பழகினால், அடுத்த எழுத்தை எழுதுவதும், நினைவில் வைப்பதும் எளிமையாக இருக்கும்.
ஒவ்வோர் அட்டையிலும் படங்கள் தரப்பட்டுள்ளன. அந்தப் படங்களை நினைவில் வைத்தாலே, அந்த எழுத்துக்கு உரிய ஒலிப்பு முறை நம் நினைவுக்குவரும். படங்களுக்குக் கீழே உள்ள சொற்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முன்பு சொன்னது போலவே எழுத்தை எழுதிக்கொண்டே ஒலித்துப் பழக வேண்டும். இரண்டு எழுத்துகளைப் படித்த பிறகு, அடுத்த நாளில், முதல் நாள் படித்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட வேண்டும். ஒவ்வோர் அட்டைக்கும் கீழே உள்ள பயிற்சி எழுத்துகளைத் தாமாகவே படிக்க முயற்சி செய்யலாம்.
செய்தித்தாளில் எழுத்துகளைத் தேடும்போது, முந்தைய அத்தியாயத்தில் நீங்கள் படித்த எழுத்துகள்

வந்தால், அவை எளிமையாகத் தெரியும். 'செய்தித்தாளில் ஏன் வட்டமிடச் சொல்கிறீர்கள்?’ என்று சிலர் கேட்கலாம்.
செய்தித்தாளில் பெரிய, சிறிய எழுத்துகளும், கறுப்பு மற்றும் வண்ண எழுத்துகளும், பல்வேறு வடிவமுள்ள எழுத்துகளும் உள்ளன. பாடப் புத்தகத்தில் இப்படி இருப்பது இல்லை. வட்டமிட வேண்டிய எழுத்துகளைத் தேடும்போது முதலில் பெரிய எழுத்துகளிலும், பிறகு பழக்கமானதும், சிறிய எழுத்துகளிலும் வட்டமிட வேண்டிய எழுத்துகளைத் தேடலாம். மேலும், வரியற்றித் தேடும்போது, தெரியாத எழுத்தின் வரிவடிவம் தொடர்ச்சியாகக் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அந்த எழுத்தைப் படிக்கும்போது, அதனுடைய வடிவம் எளிமையாகத் தோன்றும். அத்துடன், வரி வரியாகத் தேடும்போது, 'இந்த எழுத்து இல்லை, இல்லை’ என்று மனம் சொல்லிக்கொண்டே வரும். உரிய எழுத்து வரும்போது, 'ஆ... இந்த எழுத்துதான்’ என்று மகிழ்ச்சி பொங்கும்.
நீங்களாகவே தேடிக் கண்டு பிடிப்பதால், உங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை. எழுத்தும் ஆழமாகப் பதியும். எனவே, ஒவ்வோர் அட்டையையும் முடித்த பிறகு, தாமாகவே இணைத்துப் படிக்க வேண்டும். யாரையாவது படிக்கச் சொல்லி, அப்படியே மனப்பாடம்செய்து ஒப்புவிக்கக் கூடாது.
ஒவ்வோர் எழுத்தின் ஒலிப்பையும் தனித்தனியாக ஒலித்த பிறகு, இரண்டு எழுத்துகளையும் இணைத்து ஒலிக்கப் பழக வேண்டும் (எ.கா. : ச, ச் - சச்).
மேலும், தங்களுக்குத் தெரிந்த இரண்டு எழுத்துகளைத் தாளில் எழுதி, பிறகு அவற்றை ஒலித்தும் பழகலாம். அது, கற்றுக்கொள்பவரின் புரிதல் திறனை அதிகப்படுத்தும்.
இந்தப் பகுதியில் உள்ள எட்டு எழுத்துகளையும் சேர்த்து, இதுவரை 14 எழுத்துகளைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
(தொடர்ந்து கற்போம்...)