மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

வெற்றிலையே... வெற்றிலையே...

##~##

மாயா டீச்சர் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், கல்யாணப் பத்திரிகையுடன் வெற்றிலை, பாக்கு மற்றும் சாக்லேட்கள் வைத்துவிட்டுச் சென்றார். அவரை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தார் டீச்சர். ஹாலில் அருண், கதிர், கயல், ஷாலினி நான்கு பேரும் கையில் வெற்றிலையை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

''என்ன, வெற்றிலையை யார் போட்டுக்கிறதுனு பேசிக்கிறீங்களா? சின்னப் பசங்க வெற்றிலை போடக் கூடாது'' என்றார் டீச்சர்.

''ஏன்?'' என்று கேட்டாள் கயல்.

''பெரியவங்களே அளவாக யூஸ் பண்ணணும். தொடர்ந்து வெற்றிலை போட்டால், பற்கள் வலுவிழக்கும். நாக்கின் சுவை நரம்புகள் பாதிக்கும். உங்களுக்கு பற்களும் சுவை நரம்புகளும் மென்மையாக இருக்கும். அதனால், பாதிப்பு சீக்கிரமே ஏற்படும்'' என்றார் டீச்சர்.

''பயப்படாதீங்க டீச்சர், நாங்க வெற்றிலை போடுறதுபற்றிப் பேசலை. இதுக்கு எப்படி இவ்வளவு மரியாதை வந்துச்சினு பேசிட்டு இருக்கோம்'' என்றான் கதிர்.

''ராமாயணக் காலத்திலிருந்தே வெற்றிலைக்கு மதிப்பு இருக்கு. 2,000 ஆண்டுகளாக உலகம் முழுக்க வெற்றிலை சாகுபடி நடக்குது. இதன் பிறப்பிடம் மலேசியா. அங்கே இருந்து இந்தியா, மடகாஸ்கர், கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியது. இப்போது இந்தியாதான் வெற்றிலை உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கு. மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம், ஒடிசா என இந்தியா முழுக்க 42,000 ஏக்கரில் பயிராகுது. ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் வருமானம் கிடைக்குது. அரேபியா, எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்றாங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இதை எப்படி டீச்சர் பயிரிடுறாங்க?'' என்று கேட்டான் அருண்.

''அதை நேரில் பார்க்கலாம்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்தார். அது பிரமாண்டமான வெற்றிலையாகவே மாறி, இவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது.

''இதைத்தானே டீச்சர் கல்யாண வீடுகளில் தாம்பூலம்னு சொல்றாங்க?'' என்று கேட்டாள் ஷாலினி.

''ஆமாம்! வெற்றிலைக்கு அரபிக் மற்றும் பெர்சியன் மொழியில், தான்பூல் என்று பெயர். இந்தியில் தாம்புலி. அதைத்தான் நாம் தாம்பூலம் என்கிறோம். இதன் தாவரவியல் பெயர், பைபர் பீட்டல் (றிவீஜீமீக்ஷீ தீமீtமீறீ). மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வகைத் தாவரங்களுக்கு எண்ணெய் மற்றும் நறுமணத் தன்மை அதிகம். வெற்றிலை இருபால் தாவரம். ஆண் கொடி, பெண் கொடி என இரண்டு வகை உண்டு. கரும்பச்சை நிறத்தில் இருப்பவை ஆண் வெற்றிலைகள். இளம்பச்சையாக

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

இருப்பவை பெண் வெற்றிலைகள். நிறம், காரத்தன்மை, வடிவத்தைப் பொறுத்து வெள்ளைக்கொடி, பச்சைக்கொடி, கற்பூரி, சிறுகமணி, பங்களா, தேசவாரி, சக்கரைக்கொடி என வகைப்படுத்துவார்கள். தவிர, பயிரிடப்படும் ஊர்களின் பெயர்களிலும் வகைப்படுத்துவார்கள். இப்படி இந்தியாவில் மட்டும் 100 வகை வெற்றிலைகள் பயிராகின்றன'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை ஓரிடத்தில் இறக்கியது. அங்கே மூங்கில் கொட்டகைகள் நிறைய இருந்தன. ஒரு கொட்டகையின் கதவைத் திறந்துகொண்டு மாயா டீச்சர் உள்ளே செல்ல, சுட்டிகள் பின்தொடர்ந்தார்கள்.

''இது என்ன டீச்சர்... அவுட்டோருக்குப்  போறோம்னு நினைச்சுட்டு வந்தா, இண்டோருக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?'' என்று கேட்டாள் கயல்.

''கரெக்ட்தான் கயல். இதிலும் இண்டோர், அவுட்டோர் உண்டு.திறந்தநிலைச் சாகுபடி, மூடிய முறைச் சாகுபடி என இரண்டு விதமாக வெற்றிலை பயிரிடப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் திறந்தநிலைச் சாகுபடி நடக்கும். நாம் வந்திருப்பது மூடிய முறைச் சாகுபடி நடக்கும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு. வட மாநிலங்களின் பல பகுதிகளில் மூடியமுறைச் சாகுபடிதான். ஏன்னா, இங்கே கடுமையான வெப்பம் அல்லது அதிகமான குளிர் என்ற காலநிலை இருக்கும். அதனால், இப்படி மூங்கில், வைக்கோல் மற்றும் கரும்புத் தோகையால் பந்தல் அமைப்பார்கள். இதற்கு 'பரேஜா’ என்று பெயர். இது வெளியே இருக்கும் கடுமையான வெப்பம் மற்றும் குளிரைத் தடுக்கும்'' என்றார் டீச்சர்.

இவர்கள் உள்ளே சென்ற நேரம் வெற்றிலை அறுவடை நடந்துகொண்டிருந்தது. பெருவிரலில் நகம் போன்ற வடிவத்தில் அணிந்திருந்த இரும்புக் கருவியின் மூலம் இலைகளைக் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள்.

''வாவ்... வேகமாகவும் நேர்த்தியாகவும் பறிக்கிறாங்க'' என்றாள் ஷாலினி.

''இதே சுறுசுறுப்புடன் செய்தால், ஒருவரால் ஒரு நாளைக்கு 100 கவுளி இலைகளைப் பறிக்க முடியும். அதாவது 10,000 இலைகள். இப்படி மூடிய முறையில் வளரும்போது, மூன்று மீட்டர் உயரத்துக்கு வெற்றிலைக்கொடி வளரும். இலைகள் பெரியதாக இருக்கும். திறந்தநிலைச் சாகுபடியில், 20 மீட்டர் உயரம் வளரும். தமிழ்நாட்டில் நடக்கும் திறந்தநிலைச் சாகுபடியைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கம்பளம் பறக்க, ''வெற்றிலை ஆண்டு முழுக்க விளையுமா டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.

''ஆமாம் அருண். ஆனால், வெற்றிலை வளர்ப்புக்கு உற்பத்திச் செலவு அதிகம். ஆட்களும் நிறையத் தேவை. வெற்றிலை, கொடி வகை என்பதால், அது படர்வதற்கு ஒரு மரத்தின் துணை தேவை. இதற்காக பாக்கு, தென்னை, கல்யாணமுருங்கை, அகத்தி போன்ற மரங்களை முதலில் வளர்க்கணும். பிறகு வெற்றிலையைப் பதியன் இடணும். பதியன் போட்ட நாளிலிருந்து தினமும் நான்கு முறை நீர் விடணும். குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்த பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை செடியைக் கட்டணும். வெற்றிலையை வாடல் நோய் தாக்காமல் கவனமாகப் பார்த்துக்கணும். பறித்த இலைகளை ஈரத் துணி போட்டுப் பாது காக்கணும். உடனடியாக சந்தைக்கு அனுப்பி காசாக்கணும். வெற்றிலைப் பயிர் செய்வதில் இவ்வளவு சவால்கள் இருப்பதால், பெரும்பாலும் கூட்டுறவு முறையில் வளர்ப்பார்கள். அதாவது, நான்கைந்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் முதல் போட்டு, வெற்றிலைப் பயிர் செய்வார்கள். இப்படிக் கண்ணும் கருத்துமாக வளர்த்த பிறகு, ஆறாவது மாதத்தில் இருந்து அறுவடையை ஆரம்பிக்கலாம். 21 நாட்களுக்கு ஒருமுறை இலைகளைப் பறிக் கலாம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை கும்பகோணம் அருகே உள்ள ஒரு ஊருக்கு அழைத்து வந்தது. அங்கே திறந்தநிலை வெற்றிலைச் சாகுபடி நடக்கும் நிலத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். அப்போது, ''டீச்சர், இது என்ன பூவா?'' என்று வியப்புடன் கேட்டாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆமாம் கயல், இலையை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு வெற்றிலை பூக்கும் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். பெண் வெற்றிலைக் கொடியில் பச்சை நிறத்தில் ஒற்றை மலர்களாகப் பூக்கும். வெற்றிலைப் பழம்கூட உண்டு'' என்றார் டீச்சர்.

''வெற்றிலையைச் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''வெற்றிலையுடன் பாக்கு, புகையிலை எனச் சேர்த்துச் சாப்பிடுவதால்தான் வாய்ப் புற்று, தொண்டைப் புற்று போன்றவை ஏற்படும். வெறும் வெற்றிலையை அளவோடு பயன்படுத்தலாம். வெற்றிலையில் 85 சதவிகிதம் தண்ணீர்தான். இது தவிர, புரதச் சத்து, தழைச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், இரும்புச் சத்து என நிறைய இருக்கு. தலைவலி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்னைகளுக்கு வெற்றிலை நல்ல நிவாரணி.

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காகவே   மஞ்சள் வெற்றிலை உற்பத்தி செய்கிறார்கள். அதாவது, பறித்த வெற்றிலையைப் பீப்பாய் வடிவத்தில் இருக்கும் இரும்புக் குழாய்களில் வட்டமாக அடுக்கி, ஈரமான சாக்குத் துணியைப் போட்டு மூடிவிடுவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எடுத்து, அழுகிய இலைகளை மட்டும் நீக்கிவிட்டு பழையபடி மூடிவிடுவார்கள். இப்படியே 15 முதல் 25 நாட்கள் செய்யும்போது அந்த வெற்றிலைகள் மஞ்சள் நிறத்தை அடையும். அதற்கு மருத்துவக் குணமும் அதிகம். இந்த இலைகளுக்கு விலையும் அதிகம். இதை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துவார்கள்'' என்றார் மாயா டீச்சர்.

''அந்த இடத்தையும் பார்த்துட்டு வீட்டுக்குப் போகலாமே'' என்றாள் கயல்.

வெற்றிலை வடிவத்தில் இருந்த மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது.