
கோபிநாத்
எங்கள் பாட்டி கோபத்தில் பேரப் பிள்ளைகளைத் திட்டும்போது 'அரசாளுவ’ என்ற வார்த்தையைத் தான் அதிகம் பயன்படுத்துவார். ரொம்ப நாள் வரை அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. விவரம் தெரிந்த பிறகு ஒரு தாத்தாவிடம் கேட்டபோது, 'அரசாளுவ என்றால் 'அரசை ஆள்வாயாக’... 'மன்னனாக உயர்வாயாக’ என்று அர்த்தம் சொன்னார். தான் கோபத்தில் சொல்லும் தவறான வார்த்தைகள்கூடப் பலித்துவிடக் கூடாது என்பதற்காக வாழ்த்தையே வசவாக்கி இருக்கிறார்கள் அப்போதைய பெரியவர்கள். இப்போது நாம் கோபத்தில் திட்டும்போது சபிப்பதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் பழக்கம். ஆனால், அப்போதோ பாட்டிகள் திட்டும்போதுகூட 'வாழ்த்துப்பா’தான் பாடியிருக்கிறார்கள் என்பது எத்தனை நெகிழ்ச்சியான சுவாரஸ்யம்.
உண்மையில் வார்த்தைகளைப் போல வலுவான ஆயுதம் வேறு எதுவும் இல்லை. அது நேர்மறையான, எதிர்மறையான, காயம் ஏற்படுத்துகிற, ஆத்திரத்தைத் தூண்டுகிற பல்வேறு உணர்வுகளின் தாக்கத்தைக் காலம் முழுக்கச் சுமக்கிறது.
சாலையில் இண்டிகேட்டர் போடாமல் திரும்பியதற்காக பின்னால் வந்த ஒருவர் கோபமாகச் சொல்லிவிட்டுப் போகிற வார்த்தை, குறைந்தபட்சம் அரை மணி நேரமேனும் மனசைக் கலைத்துப் போட்டுவிடுகிறது. துரத்திப் போய் நாமும் அந்த ஆளை நாலு திட்டு திட்டுவோம் என்று மனசு திட்டம் போடுகிறது.
'இப்படியே இருந்தா, நீ நடு ரோட்லதாண்டா நிப்ப’ என்று 15 வருஷங்களுக்கு முன்பு வேதியியல் ஆசிரியர் சொன்னதை நினைக்கும் போது இப்போதும் சுருக்கென்று அழுத்துகிறது. சொந்தமோ, பந்தமோ, பழகியவனோ, வழிப்போக்கனோ, யாரோ, எவரோ... எது சொன்னாலும் மனதை ஆழமாகத் தைத்துவிடுகிறது.
'வார்த்தைகளைக் கொட்டிவிட்டால், அள்ளிவிட முடியாது’ என்று யாரேனும் சொல்ல... நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். அல்லது யாருக்கேனும் கூறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும், வார்த்தைகளைக் கொட்ட யாரும் அவ்வளவு யோசிப்பது இல்லை. நமக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் வார்த்தை, அடுத்தவனை அநியாயத்துக்குக் காயப்படுத்தி விடும்!

எவ்வளவோ துன்பங்களை, சம்பவங்களை, ஏமாற்றங்களை ஜீரணிக்க முடிகிற மனதால், பல நேரங்களில் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் போய்விடுகிறது. கல்யாண வீட்டில் நாலு பேர் மத்தியில் மனம் கோணும்படியான ஒரு வார்த்தை சொல்லியதற்காக, அதோடு உறவை அத்துக்கொண்டுபோன குடும்பங்களை நாம் அறிவோம். ஏழ்மையைக் கேலி செய்யும் பூடகமான வார்த்தைகள், சுயமரியாதையை வம்பிழுக்கும் ஜாடைப் பேச்சுகள், காதல் மணமுடித்த பெண்ணை இகழும் பட்டங்கள் என்று நயவஞ்சக வார்த்தைகள், காலம் முழுக்க அதைக் கேட்பவர் மனதில் ரண மாகப் படிந்துவிடுகின்றன.
அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களை மன்னித்துவிட முடிந்தாலும், அந்த வார்த்தைகளை மறக்கவே முடிவது இல்லை. அதுவும் நாம் நேசிக்கும் மனிதர்கள் சொல்லும் வார்த்தைகள், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அம்மா, அப்பா, ஆசிரியர்கள், நண்பர்கள், வழிகாட்டி என்று நாம் நம்பும் சிலர் சொல்லும் வார்த்தைகள் காலம் முழுக்க நம்முடன் பயணிக்கும் வல்லமை படைத்தவை.
அதே சமயம் நமக்கு நல்லது நினைக்கும் யாரும் நம்மைத் துன்புறுத்த வேண்டும் என்பதற்காக, அந்த வார்த்தைகளைச் சொல்வதும் இல்லை. ஆனால், அது சொல்லப்பட்ட தருணம், இடம், சூழல் அப்போதையை மனநிலை போன்ற சில காரணிகள்தான் அந்த வார்த்தையின் வீரியத்தைத் தீர்மானிக்கின்றன. 'நீ உருப்படவே மாட்டே’ என்று திட்டுகிற அப்பா, தன் மகன் எதற்கும் லாயக்கில்லாதவன் ஆகிவிட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் திட்டுவது இல்லை. இருந்தாலும், தான் எப்போதும் நம்பும் அப்பா அப்படியரு நம்பிக்கைக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்துவதை எந்த மகனும் விரும்ப மாட்டான்!

ஒரு பிள்ளையைப் பொறுத்தவரை அவன்/அவள் மிக அதிகமாகச் சார்ந்திருப்பதும் சரண டைவதும் தனது வீட்டைத்தான். இதனாலேயே அந்த வீட்டு மனிதர்கள் சொல்லும் வார்த்தைகள் அந்தப் பிள்ளையின் மனதில் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும். 'உன்னால் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட பிள்ளைகள், இந்த உலகத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்கள். நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கேட்டு அதனை உடைத்தெறிந்து நிமிர்ந்து நின்றவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால், அறியாப் பருவத்தில் ஏற்பட்ட காயத்தின் வடுவோடுதான் அவர்களின் காலம் நகருகிறது.
'எனக்கு என்ன நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் என் வீடு இருக்கிறது. என் வீட்டு மனிதர்கள் இருக்கிறார்கள்’ என்று நம்புகிற பிள்ளையிடம், அதே வீட்டில் இருந்து நம்பிக்கை இல்லாத, சோர்வை உண்டாக்கும் வார்த்தைகள் வந்து விழுவது நியாயம் இல்லை. 'உறைக்கிற மாதிரி சொன்னால்தான் புரியும்’ என்ற நினைப்பில் நம்பிக்கையைக் குலைக்கும் தன்மைகொண்ட அமில வார்த்தைகளைக் குழந்தைகளிடம் சொல்லாதீர்கள் என்று உளவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்து கிறார்கள்.
சமூகத்தில் சாதனையாளர்களாக நாம் கொண்டாடும் பலர், 'சின்ன வயசுல என் அப்பா சொல்லிக்கொடுத்த அந்த இரண்டு வரியை, நாலு வார்த்தையை நான் இப்பவும் ஞாபகத்தில் வெச்சிருக்கேன்’ என்று சொல்வார்கள். அந்த நேர்மறை வார்த்தைகளே மறக்காமல் இருக்குமென்றால், மனசை ரணமாக்கிய வார்த்தைகள் நிச்சயம் மறந்துபோக வாய்ப்பே இல்லை.
என்னுடன் பேசும் பலரும் காலம் முழுக்கச் சில வார்த்தைகள் தங்களைத் துரத்திக்கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். நெருக்கமானவர்களுடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்ளும் பலர், 'அன்னைக்கு அவங்க சொன்ன அந்த வார்த்தையை என்னால மறக்க முடியல’ என்பதைத்தான் இன்றும் என்றும் காரணமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
தான் தடுக்கி விழுந்தபோது தாங்கிப் பிடித்த அப்பாவே, 'தான் எதற்கும் லாயக்கில்லை’ என்று சொல்வதை ஒரு மகனால்/மகளால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்று, உள்ளுக்குள் நொறுங்கிப்போகிறார்கள். அல்லது எதிர்வினையில் இறங்குகிறார்கள். அதுதான் மனித இயல்பும்கூட.
விழுந்துகிடந்த தேசத்தைத் தூக்கி நிறுத்திய தலைவர்கள் யாரும் தங்கள் மக்களை 'நீங்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள்’ என்று வசைபாடியது இல்லை. 'உங்களால் எதையும் சாதிக்க முடியும்’ என்று உத்வேகம் கொடுத்து உற்சாகப்படுத்தியவர்கள் தங்கள் தேசத்தை வறுமையில் இருந்தும், நோயில் இருந்தும், எதிரிகளின் மிரட்டல்/விரட்டல்களில் இருந்தும் மீட்டெடுத்து இருக்கிறார்கள். போர்முனையில் தோல்வியின் விளிம்பில், 'அவ்வளவுதான்... எல்லாம் முடிந்தது’ என்று வீரர்கள் அவநம்பிக்கையில் நிற்கும் போதுகூட, படைத் தளபதியோ மன்னனோ உரத்துச் சொல்லும் நம்பிக்கையின் வார்த்தை கள் அந்தப் போரின் போக்கையே மாற்றி அமைத்த வரலாறுகள் உண்டு.

நாட்டுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் இது பொருந்தும். பிள்ளைகளால் ஹீரோ அந்தஸ்தோடு பார்க்கப்படுகிற அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தோடு பேசுகிற வார்த்தைகள் பெரிய நம்பிக்கையை விதைக்கின்றன. நம்பிக்கைக்குரிய மனிதர்களிடம் இருந்து உற்சாகமான வார்த்தைகளைத்தான் இந்த உலகம் எதிர்பார்க்கிறது. வீடும் ஓர் உலகம்தான். காயப்படுத்தும் வார்த்தைகளைச் சொன்னால்தான் பிள்ளைக்குப் புத்திவரும் என்று கணக்குப்போட வேண்டியதில்லை. வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் அவநம்பிக்கை வார்த்தைகளையே கேட்டிருப்பார்கள் நம் பிள்ளைகள். வீடும் அந்த வேலையைச் செய்ய வேண்டாமே.
என் நண்பன் ஒருவன் மன சஞ்சலத்தில் இருக்கும்போது எனக்குத் தொலைபேசுவான். 'கோபி... எனக்கு போன் பண்ணி 'உனக்குப் பிரச்னை எதுவும் இல்லடா. எல்லாம் சூப்பரா நடக்கும்... கலக்குடா’னு சும்மா சொல்லுடா’ என்று சொல்வான். நானும் அப்படியே செய்வேன். நல்லதாக... நேர்மறையாக நாலு வார்த்தைகளைக் கேட்க வேண்டும். அதை யாராவது சொன்னால் சந்தோஷமாக இருக்கிறது அவனுக்கு. என் நண்பன் கடைப்பிடிக்கும் இந்த முறை சரியா என்பது வேறு விஷயம். ஆனால், ஏதோ ஒரு வகையில் அவனுக்கு 'ஆல் இஸ் வெல்’ வைட்டமின் தேவைப்படுகிறது.
நம்பிக்கையை ஏற்படுத்தும் வார்த்தைகள் நம்பிக்கையான மனிதர்களிடம் இருந்து கிடைத்தால், அதைவிட பாக்கியம் வேறு இல்லை. வீடு ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக இருக்க வேண்டும். அங்கு நம்பிக்கையான வார்த்தைகளும் இருக்க வேண்டும். வார்த்தைகள் வரலாறுகளையே புரட்டிப் போட்டிருக்கின்றன... வாழ்க்கையைப் புரட்டாதா என்ன?
'அரசாளுவ...’ என்பது என்னவோர் அருமையான வார்த்தை!
- ஸ்டாண்ட் பை...