சினிமா
Published:Updated:

யானை வருது... மாலை தருது!

ஜோதிகா

யானை வருது... மாலை தருது!

சாக்லேட் பேபி! படக் படக் என்று துடிக்கிற கண்களும், குறும்புச் சிரிப்பும், கும்மென்ற கன்னங் களுமாக இன்று இளைஞர்களின் நரம்புகளில் இசை மீட்டுகிற குட்டிப் பெண். அடுத்து ரிலீஸ் ஆகிற படங்களின் லிஸ்ட்டை எடுத்தால், இளம் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஆளுக்கு ஒரு படம் பண்ணுகிறார். இளமை விளையாடும் தேகம், முகத்தில் மட்டும் அப்படி ஒரு குழந்தைத்தனம், வெற்றிக் கொடி பறக்கவிட்ட அத்தனை ஹிட் ஹீரோயின்களுக்கும் இதுதான் ஃபார்முலா!

##~##

மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில்... ப்ரியதர்ஷன் இயக்கத்தில் தயாராகிற ஒரு படப்பிடிப்பில் இருந்தவருக்கு ஹலோ சொன்னோம்.

''ஹாய்... என்ன இங்கே?'' என்று வியந்து ஓடிவந்தார். ''ஒரு 'ஒரு லிஸ்ட்’ வேணுமே...'' என்றோம். ''என்னது?'' என்றவர் நாம் விவரித்ததும் ''நான் ரெடி'' என்றார் தன் கூந்தலைக் கை விரல்களால் ஒதுக்கியபடி.

ஒரு பேர்; ''க்யூட்டி என்னோட செல்லப் பேர். வீட்ல எப்பவும் இப்படித்தான் கூப்பிடுவாங்க.''

ஒரு கலர்; ''கறுப்பு பிடிக்கும்!''

ஒரு மலர்; ''ரெட் ரோஸ்!''

ஒரு படம்; '' 'சாகர்’. ஏன்னா, கமல்ஜி... கமல்ஜி... கமல்ஜி!''

ஒரு இடம்; ''சென்னையில் இருக் கிற என் அக்காவுடைய 'நக்மா ஹவுஸ்’தான் இப்போதைக்கு என் அரண்மனை.''

ஒரு அதிர்ஷ்டம்; ''நான் சூர்யாவோடு நடிச்சது. சூர்யா ரொம்ப ஹோம்லி, ஃப்ரெண்ட்லி ஆள். சூர்யாவோட நான் நடிச்சது மறக்க முடியாத நாட்கள்!''

ஒரு பொறாமை; ''ம்... குரூப் டான்ஸர்ஸ்! பாடல் காட்சிகளில் சொல்லிக் கொடுக்கிற ஸ்டெப்ஸை ஆட முடியாம ரெண்டு மணி நேரம் ரிகர்சல் பண்றப்போ... அவங்க செம ஸ்பீடா... படா ஸ்டைலா சிக்சிக்னு ஆடுறதைப் பார்க்கும் போது வருமே ஒரு பொறாமை!''

ஒரு பிரார்த்தனை; ''என் அம்மா முஸ்லிம். அப்பா இந்து. எனக்கு எம்மதமும் சம்மதம். மும்பைல இந்து-முஸ்லிம் கலவரம் நடந்தப்போ, நான் ரெண்டு நாள் அழுதுட்டே கிடந்தேன். எல்லோரும் நல்லா இருக் கணும்னுதான் நான் வேண்டிக்குவேன்!''  

ஒரு பொழுதுபோக்கு; ''நான் ஒரு கிச்சன் க்வீன். எப்பப்போ நேரம் கிடைக்குதோ... அப்பப்போ கிச்சன்ல கலவரம் பண்ணிட்டிருப்பேன். என்னோட பெஸ்ட் அயிட்டம் பட்டர் சிக்கன்!''

ஒரு சீன்; ''  'பூவெல்லாம் கேட்டுப் பார்’ல எங்க வீட்லயே சூர்யா கார் டிரைவரா சேர்ந்துடுவாரு. ஒருகாட்சியில நான் மாடியிலயும் அவர் கீழேயும் நின்னுட்டு கண்களாலயும் கைகளாலயும் மனசாலயும் காதல் பேசிக்குவோமே... அதான்!''

ஒரு பொய்; ''யாராவது எனக்குப் பிடிக் காத வேலையைப் பண்ணச் சொன்னா... உடனே தலைவலினு சொல்லிட்டு ஒதுங் கிடுவேன். ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு பொய் சொன்னதா நானே உண்மையை எடுத்துவிட்டுடுவேன்!''  

யானை வருது... மாலை தருது!

ஒரு கனவு; ''ஒரு யானை எனக்கு மாலை போடுற மாதிரி அடிக்கடி ஒரு கனவு வருது. ஒரு வேளை இது அரசியல் கனவோனு நினைச்சுச் சிரிச்சுக்குவேன். கடவுளே... அது கல்யாணக் கனவா மட்டும் இருக்கக் கூடாது!''

ஒரு பயணம்; ''நெறையப் பண்ணணும். வாழ்க்கையில், கேரியர்ல அப்புறம் மனசுல வெச்சுக்கங்க... என் காதலரின் இதயத்தில்!''

ஒரு பொன்மொழி; '' 'வாழ்வில் நீ காணும் கனவுகள் நனவாக வேண்டுமானால், விழித்தெழு’!''

ஒரு டிரெஸ்; ''ஜீன்ஸ், டி-ஷர்ட்டுக்குத்தான் என் ஓட்டு!''

ஒரு அழகு ரகசியம்; ''அழகான முகத்தில் அப்பப்போ  தயிர் விட்டுக்  கழுவுங்கள்!''

ஒரு காதல்; ''சினிமாலதான் அடிக்கடி பண்றேன். சுவாரஸ்யமா சொல்ல வேற ஒண்ணும் இல்லியே!''

ஒரு நட்பு; ''ரொம்பச் சின்ன வட்டம் என்னுது. ரெண்டு அக்காக்கள்தான் நட்பு!''

ஒரு விபத்து; ''இன்னும் கல்யாணம் ஆகலியே!''

ஒரு நடிகர்; ''கமல்ஜி. அப்புறம் அமீர்கான்! ஏன்... எதுக்குனு எல்லாப் பொண்ணுங்களையும் கேளுங்க!''

ஒரு சபலம்; ''இப்போதைக்கு சாஃப்ட் டிரிங்க்ஸ் மேல மட்டும்தான்!''

ஒரு விருது; ''ஓ... ஸோனா!''

ஒரு ஆசை; ''நான் நடிக்கிற எல்லாப் படமும் ஹிட் ஆகணும். ஓ... இது பேராசையோ?!''

ஒரு ஜோக்; ''ஒரு எறும்பை மிஸ்யூஸ் பண்ற துக்காகத் துரத்துச்சாம் ஒரு யானை. பயந்துபோன எறும்பு உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஒரு பிள்ளையார் கோயிலுக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்கிச்சு. ஆனா, எறும்பு எங்கே இருக்குனு கரெக்டா யானை கண்டுபிடிச்சிருச்சு!''

''எப்படி?''

''எறும்பு வழக்கம்போல தன் செருப்பை வெளியே கழட்டிப் போட்டுருந்துச்சு... ஹி...ஹி...ஹி!''

ஒரு அவமானம்; ''முதல் இந்திப் படம் 'டோலி சஜா கி ரக்னா’ சரியாகப் போகலை. பல தயாரிப்பாளர்கள் என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.''

ஒரு சந்தோஷம்; ''ஜோதிகாவை ரசிகர்கள் 'ஸோனா’னு கூப்பிடும்போது... அதுவும் சும்மா இல்லை... 'ஐ லவ் யூ... லவ் யூடா’ சேர்த்து!''

ஒரு முத்தம்; ''எப்பவுமே அம்மா தர்ற முத்தம் மட்டும்தான்!''

ஒரு ரகசியம்; ''இந்த அக்டோபர் பதினெட்டு என் பர்த்டே. என்ன விசேஷம்னா...  

நான் அன்னிக்குத்தான் 'டீன்-ஏஜு’க்குக் குட்பை சொன்னேன்!''

- செல்லா

படங்கள்: பொன்.காசிராஜன்