சினிமா
Published:Updated:

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!
News
விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

“மிஸ்டர் விஜயகாந்த்... எங்களை விட்டுடுங்க!”வாசகர் கேள்விகள்

##~##

கி.ராஜா, தேனி.

''விஜயகாந்த்-எங்கே... உங்க மனசுல என்ன தோணுதோ... பளிச்னு சொல்லுங்க?''

''இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப்  படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி’யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!''

அன்பு மாதவன், சென்னை-14.

''நீங்கள் பார்த்துப் பெருமைப்படும், பொறாமைப்படும் இயக்குநர் யார்?''

''1982-ம்  வருஷம்னு நினைக்கிறேன்... ஓர் இளைஞன் என் ஆபீஸுக்கு வந்தார். வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ரத்னத்தோட பையன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்ட அந்த இளைஞன், என்கிட்ட ஒரு கதை சொன்னார். நவீனமா, அதே சமயம் ரொம்ப க்ளாஸிக்கலா இருந்தது அந்தக் கதை. எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி.ஆனா, நானே அப்போ வளரும் இயக்குநர்தான். அதனால அந்தப் படத்தை அப்போ நான் பண்ண முடியாதுனு சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிட்டேன்.

பின்னாடி அந்த இளைஞன் இயக்கிய 'பகல் நிலவு’  படம் பார்த்து அசந்துபோனேன். யெஸ்... ஹி இஸ் மணிரத்னம். அவருடைய 'மௌன ராகம்’, 'நாயகன்’ படங்கள் அவர் மேல பெரிய மரியாதையை உண்டாக்குச்சு. நான் பெருமைப்படும் பொறாமைப்படும் ஒரே இயக்குநர் மணிரத்னம் மட்டும்தான். இந்திய அளவில் சிறந்த 10 இயக்குநர்கள்னு பட்டியல் போட்டால், அதில் மணிரத்னத்துக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவில் இருக்கும் உலகத் தரப் படைப்பாளி மை லவ்வபிள் டைரக்டர் மணிரத்னம்.  அவருடைய 'கடல்’ படத்தை எல்லாரும் பலவிதமாக விமர்சனம் செஞ்சாங்க. ஆனா, 'கடல்’ படம் நான் முழுமையாக அங்கீகரிக்கும் படம்!''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

எல்.தாமரை, காஞ்சிபுரம்.

 ''கண்ணதாசன் - வைரமுத்து... ஒப்பிடுங்க?''

''நான் சின்ன வயசுல இருந்தே வியந்து பார்த்த மகா கவிஞன் கண்ணதாசன். என் முதல் படமான '16 வயதினிலே’ படத்தில் 'ஆட்டுக் குட்டி முட்டையிட்டு’னு இறவாப் புகழ்கொண்ட பாடல் கொடுத்த வர். தமிழ் சினிமாவின் மிகச் சுமாரான பல படங்களைக்கூடத் தன் பாடல் வரிகளால் வரலாற்றில் இடம் பிடிக்கவைத்த பிறவிக் கவிஞன்... கவியரசர்!  

அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என் மண்ணின் மகாகவி வைரமுத்து. என்னுடைய மண் சார்ந்த படங்களுக்குத் தனது வைர வரிகளால் உயிரூட்டியவர் வைரமுத்து.நான் விதை போட்டேன்... இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறார் வைரமுத்து.

இரண்டு பேருமே தமிழ்த் தாயின் அற்புதமான தவப்புதல்வர்கள்!''

ராசி.அன்பழகன், சோளிங்கநல்லூர்.

''உங்கள் அம்மா கருத்தம்மா உங்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள்?''

''கருத்தம்மா இல்லைன்னா, இந்த பாரதிராஜா இல்லை. அரசாங்க வேலையை உதறிட்டு சென்னைக்குப் புறப்பட்டப்போ, என் எல்லா உறவுகளும் கறுப்புக் கொடி காட்டினாங்க. ஆனா, என் அம்மா மட்டும்தான் எனக்கு ஆதரவு தெரிவிச்சு பாசத்தோட அனுப்பிவெச்சா. என் சூட்கேஸ்ல மூணு பேன்ட், மூணு சட்டை போக  எனக்குப் பிடிச்ச மூணு சிகரெட் பாக்கெட்களையும் வாங்கிவெச்சு என்னை வழி அனுப்பினா.

சென்னை வந்து சினிமாவில் வேர் பிடிச்சு நான் வளர்ந்த பிறகு, என் கூடவே வந்து தங்கிட்டா. சில வருடங்களுக்கு முன்னாடி அவ உடல்நிலை சரியில்லாம போனப்போ என்னைப் பக்கத்துல உக்கார வெச்சு, 'ராசா... ராசா...’னு என் முகத்தை வருடிக் கொடுத்துட்டே இருந்தா அந்தப் பாசக்காரி. அப்போ திடீர்னு ஒருநாள் அவ சுயநினைவு இழந்துட்டா. அதுல இருந்து அவளை ஒரு குழந்தை கணக்கா நான் பார்த்துக்கிட்டேன். சாப்பாடு ஊட்டுறது, குளிப்பாட்டுறதுனு எல்லாமே நானே செஞ்சேன். மருந்து மாத்திரைகளோட நான் ஊட்டிய பாசம் வீண்போகலை. திடீர்னு ஒருநாள் சுயநினைவு வந்து பழைய பாசத்தோடு 'ராசா...’னு கண் கலங்கக் கூப்பிட்டு என்னைக் கலங்க வெச்சா என் ஆத்தா. அப்புறம் ரெண்டு வருஷம் வரை உயிரோடு இருந்தா. இப்போ கருத்தம்மா இல்லாத உலகத்துல, இந்த பாரதிராஜா பாதி உயிரோடதான் நடமாடிட்டு இருக்கான்!''    

பழ.குணசேகரன், தஞ்சாவூர்.

'' 'தேவர் மகன்’ படம் பார்த்தப்போ, உங்களுக்கு என்ன தோணுச்சு?''

'' 'தேவர் மகன்’... இட்ஸ் எ குட் மூவி.  என்  நண்பர் இயக்குநர் பரதன், ரொம்ப கலை அம்சத்தோட அந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

சிவாஜி கணேசன், கமல், ரேவதி எல்லோருமே ரொம்பச் சிறப்பா நடிச்சிருந்தாங்க. அந்தப் படத்தில் அருவா இருந்தது... மீசை இருந்தது. ஆனா, அந்த மக்களின் வாழ்க்கையோ, மொழியோ, கலாசாரமோ அந்தப் படத்தில் முறையா பதிவுசெய்யப்படலை. இதுதான் அந்தப் படத்தைப் பத்தின என் கருத்து!''

வி.பாரதி, காசர்காடு.

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

 '' '16 வயதினிலே’, 'முதல் மரியாதை’... இது இரண்டும்தான் நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குப் பெருமை சேர்ப்பவைனு சொல்றேன் நான். ஒரு தேர்ந்த படைப்பாளி என்ற முறையில் இதை மறுத்துப் பாருங்களேன்?''

''ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பொறுத்தவரை அவரோட எல்லாப் படைப்புகளுமே சிறந்த படைப்புகள்தான். உங்கள் பார்வையில் அந்த இரண்டு படங்களும் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... அவ்வளவுதான். ஆனா, என்னைப் பொறுத்தவரை நீங்க சொன்ன அந்த இரண்டு படங்களுமே என்னோட முழுமையான படைப்பு இல்லை. இன்னொரு நிறைவான படைப்பில் எனது முழுத் திறமையையும் பயன்படுத்தி, நானே நடிச்சு, இயக்கி உங்கள் பார்வைக்கு வைப்பேன். அதுதான் எனக்கு முழு நிறைவு தரும் படமாக இருக்கும்!''

சி.மாலா, பொன்னேரி.

''செயின் ஸ்மோக்கரான நீங்கள் எப்படி புகைப் பழக்கத்தைக் கைவிட்டீர்கள்?''

'' 'சிகரெட்டை
விடச்சொல்லி
நச்சரித்தான்
நண்பன்...
விட்டுவிட்டேன்
நண்பனை’
- இந்தக் கவிதைக்கு ரொம்பப் பொருத்தமான உதாரணமா இருந்தவன் நான். அல்லிநகரத்தில் 18 வயதில் சிசர் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். சென்னை வந்த பிறகு சிசர் கோல்டு ஃப்ளேக். அப்புறம் வில்ஸ். ஒரு தடவை மும்பை போனப்போ 555 பிராண்ட் என்னைப் பிடிச்சுக்கிட்டது. கணக்கு வழக்கில்லாம சிகரெட்டுகளை ஊதித் தள்ளிட்டு இருந்தேன். 'தாஜ்மஹால்’ படத்தின் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி திடீர்னு நெஞ்சு வலி. தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி. ஏகப்பட்ட வியாதி பேரைச் சொல்லிப் பயமுறுத்தினாங்க. அப்போ அமெரிக்காவில் இருந்த என் நண்பனுக்கு போன்ல விஷயத்தைச் சொன்னேன். 'நீ உடனே கிளம்பி இங்கே வா’னு சொன்னான் அவன். இங்கே எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்த டாக்டருக்குக் கூடத் தெரியாம அமெரிக்காவுக்குப் போனேன். அங்கே ஒரு வாரம் ட்ரீட்மென்ட். நெஞ்சில் இருந்த சளியை நீக்கினாங்க. பழைய மாதிரி உடம்பு பரபரப்பானது. திரும்பி வர்றப்போ பிரான்ஸ் ஏர்போர்ட்டில் சிகரெட் ஆசை எட்டிப்பார்த்தது. ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினேன். ஒரு சிகரெட்டைப் பத்தவெச்சு ஒரு பஃப் இழுத்தேன். நெஞ்சுக்குள்ள என்னவோ போல இருந்தது. 'இதுதான் என் லைஃப்ல லாஸ்ட் சிகரெட்’னு எனக்கு நானே சொல்லிட்டு, பாதி சிகரெட்டையும் அந்த சிகரெட் பாக்கெட்டையும் கீழே போட்டு, பூட்ஸ் காலால மிதிச்சுத் தேய்ச்சேன். அப்போ இருந்து இப்போ வரை சிகரெட்டைத் தொட்டதே இல்லை. இப்போலாம் யாராவது சிகரெட் பிடிக்கிறதைப் பார்த்தாலே அலர்ஜி ஆகுது. கோபம் கோபமா வருது!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

 ''எம்.ஜி.ஆர் - கருணாநிதி - ஜெயலலிதா... மூவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''ஊடக வெளியில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இளையராஜா உங்களைக் கடுமையாக விமர்சிக்கிறாரே...''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

 ''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

- கட்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.