Published:Updated:

யட்சன் - 24

யட்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
யட்சன் ( சுபா )

யட்சன் - 24

யட்சன் - 24
##~##

செந்தில் தெளிவடைந்திருந்தான். காயங்கள் ஆறி, தழும்புகளாகக் காயத் தொடங்கியிருந்தன. கைலாசத்தை எரிச்சலுடன் பார்த்தான்.

'என்னை என்ன செய்றதா உத்தேசம்..?'

'அடிதடிக்கெல்லாம் தயாராயில்லேனு சொல்ற... கொஞ்ச நாள் எங்க பாதுகாப்புல இரு.'

'இதுக்குப் பேரு பாதுகாப்பா... ஜெயிலா?'

அவருடைய போன் ஒலித்தது.

'இப்ப வெளிய கொஞ்சம் சூடா இருக்கு... பத்து நாள் போவட்டும்' என்று துண்டித்தார். முகத்தில் சோர்வு தெரிந்தது.

'பொம்பளைங்கனு பாக்காம எல்லாரையும் தூக்கணும்போல இருக்கு!'

'வெட்டுக் குத்து தவிர, வேற யோசனையே வராதா உங்களுக்கு?'

'என் நிலைமைல நீ இருந்தா என்ன பண்ணுவ, சொல்லு? கேளம்பாக்கத்துல நாலு ஏக்கர் வாங்கிப் போட்டிருந்தேன். அங்க நல்லா விலை போகுதுனு தெரிஞ்சதும், அந்த இடத்துல ஆறேழு குடிசைங்க வந்திருச்சு. காலி பண்ணுங்கடான்னா, இருபது லட்சம் கொடு, முப்பது லட்சம் குடுனு அடாவடித்தனம் பண்றாங்க. பொம்பளைங்க, குழந்தைங்க இருக்காங்களேனு பாக்கறேன்... பேசாம பசங்களை அனுப்பி ஒரே நாள்ல ஆம்பளைங்களைப் போட்டுத் தள்ளிட்டு, குடிசைங்கள எரிச்சிரலாம்னு ஆத்திரம் வருது.'

'நான் வேற ஒரு வழி சொன்னா, என்னை விடுதலை பண்ணுவீங்களா?'

'சொல்லு செந்தில்...'

'பெருச்சாளியும் விஷம் இல்லாத பாம்பும் கிடைக்குமா..?'

கைலாசம் அவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தார்.

வுக்குத் தோப்பு சண்டையை முடித்துவிட்டு, நாயகியுடன் பைக்கில் வருவதாகக் காட்சி அமைப்பு. பாரியின் முதுகில் ஒன்றிச் சாய்ந்து, பைக்கில் கயல்விழி கண்களை மூடியிருந்தாள். இரண்டாவது டேக் ஓ.கே. ஆனது.

'பேக்அப்...' என்றான் ஜோ.

யட்சன் - 24

புழுதியில் புரண்ட அழுக்கு உடையை காஸ்ட்யூமரிடம் ஒப்படைத்துவிட்டு, 'கயல்... ஒரு நிமிஷம்'' என்றான் பாரி.

கயல்விழி திரும்பினாள்.

'நீ இங்கிலீஷ் கத்துக்கறதா சொன்னாங்க...'

'ஆமாம் பாரி... நான் தமிழச்சி. எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டாங்க. வடநாட்டு மீடியா ஆளுங்கல்லாம் இங்கிலீஷ்லதான் கேள்வி கேக்கறாங்க. அதான் ஒரு டீச்சரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்.'

'நீயாவது பரவால்ல... எட்டாவது. நான்... ஸ்கூலே போகல. அவர் உனக்கு கிளாஸ் எடுத்து முடிச்சப்புறம் எனக்கு எடுப்பாரானு கேக்கணும்.'

'தனித்தனியா எதுக்கு? சேர்ந்தே கத்துப்போம்...' என்றாள் கயல்விழி.

'நானும் இவங்ககூடப் போலாமா?' என்று ஏக்கத்துடன் கேட்டான் செந்தில்.

'உன் ஐடியாவாச்சே... போயிட்டு வா!' என்றார் கைலாசம்.

வெளிக் காற்றைச் சுவாசித்ததிலேயே செந்திலின் ரத்தம் புத்துணர்ச்சி பெற்றது. கார் எஃப்.எம்மில் இளையராஜா 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை’யால் காதில் தேன் பாய்ச்சினார். இருபுறமும் அணைத்து அமர்ந்திருந்த ஆட்கள் துப்பாக்கிகளை மடியிலும் கவனத்தை வெளியிலும் தயாராக வைத்திருந்தனர்.

இருட்டையும் ஆங்காங்கே செங்குத்தாக எழும்பிக்கொண்டிருந்த ராட்சஸக் கட்டடங்களையும் செந்தில் ஆர்வத்துடன் கவனித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். நெடுஞ்சாலையை ஒட்டிப் பிரிந்த பாதையில், வேலியற்ற அந்த நிலம் இருந்தது.

ஒன்பது குடிசைகள். செந்தில் காரிலேயே அமர்ந்திருந்தான். ஆட்கள் இறங்கினார்கள். துள்ளித் திமிறிய சிறு கோணிப்பைகளை எடுத்துச் சென்று குடிசைகளின் அருகில் திறந்துவிட்டார்கள். விடுபட்ட பெருச்சாளிகள் சந்தோஷமாகக் குடிசைகளுக்குள் புகுந்தன. பாம்புகள் நெளிந்து ஓலைக் கிழிசல்களில் நுழைந்தன.

சிரியருக்கு எழுபது வயது. தடித்த கண்ணாடி. வரிவரியாகத் தளர்ந்த முகம். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பொறுமையோடு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினார். வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது, 'வணக்கம் தம்பி...' என்று அகலமாகச் சிரித்தாள் கயல்விழியின் அம்மா. ஐந்தடி உயரம். பீப்பாய் போன்ற அகலம். தடித்த தங்கச் சங்கிலி. தங்க ஜிமிக்கி. திருத்திய புருவங்களும், கண்களின் மையும், கன்னத்து ரூஜும் நாற்பத்தைந்து வயதை இளமையாகக் காட்ட இயலாமல் தோற்றிருந்தன.

'தெலுங்குல ஒரு பையன், இடுப்பைப் பிடிச்சாலும் நெஞ்சோட கட்டிப்பிடிச்சாலும் முரட்டுத்தனமா அழுத்துறான். பாப்பாவுக்குச் சிவந்துபோயிடுது. ஆனா, நீங்க என் பொண்ணைப் பூ கணக்காத் தொடறீங்க... தேங்க்ஸ்!'

பாரி புன்னகைத்தான்.

'ஏன் தம்பி, புரொடக்ஷன்ல பேசி கேரவன் ஏற்பாடு செய்யக் கூடாது? சின்னப் பொண்ணு... பாத்ரூம் கீத்ரூம் வந்தா என்ன செய்யும்?'

'அம்மா...'

'நீ சும்மா இரு பாப்பா... ஹைதராபாத்ல ஸ்டார் ஹோட்டல்ல நமக்கு மூணு ரூம் கொடுக்கல? புதுப் பசங்களோட நடிச்சா அவ்வளவுதான் மரியாதை!'

பாரி தலை குனிந்தான்.

''பாரி, எங்க அம்மா எப்பவும் அப்படித்தான். மனசுல வெச்சுக்காத...' என்று கயல்விழி தனியே மன்னிப்பு கோரினாள். எதிர்பாராத நிமிடத்தில் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

பெண்களுடன் பழகிப் பழக்கம் இல்லாத பாரி சட்டென்று விலகி, ''குட் நைட்...'' என்றான்.

அவனுக்கான அறை இருந்த ஹோட்டலுக்கு நடந்தே போனான். ரிசப்ஷனில் சாவி வாங்கும்போது, 'உங்களுக்காக ஒரு பொண்ணு ரொம்ப நேரமா காத்திட்டிருக்கு' என்று காட்ட...

'என்னை ஞாபகம் இருக்கா..?' என்று கேட்டபடி எழுந்தாள் தீபா.

- தடதடக்கும்...