மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 12

மறக்கவே நினைக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
News
மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

சென்னைக்கு முதல்முறையாக வந்து இறங்கும்போது நான் எப்படி இருந்திருப்பேன்? யூகமே வேண்டாம்... நிச்சயமாக, பள்ளிக்கூடத்தில் இருந்து படிக்கப் பிடிக்காமல் ஓடிவந்த ஒரு சின்னப் பையன்போலத்தான் இருந்திருப்பேன். ஆனால், நம்புங்கள் அப்போது நான் ஒரு அடியாள்!

அடியாள் என்றால்..? ஆமாம்! நீங்கள் சினிமாவில் பார்த்துப் பார்த்துச் சலித்த எத்தனையோ மொட்டைகள், கறுப்பன்கள், தடியன்கள், மீசைகளின் வரிசையில் ஏழாவதாக, எட்டாவதாக நின்றுகொண்டு எவனோ, எப்போதோ தனக்குச் சோறு போட்ட விசுவாசத்தைக் காட்ட இருமிக்கொண்டும் முறைத்துக்கொண்டும் நிற்கும் அடியாட்களில் ஒருவனாகக்கூட நீங்கள் என்னைக் கற்பனை செய்துகொள்ளலாம். பையில் பணம் இல்லாமல், மனதில் திட்டம் இல்லாமல் வெறுமனே எங்கேயாவது போய்ப் பிழைத்துக்கிடந்தால் போதுமென்று இருந்தவன் நான். தூத்துக்குடியில் வக்கீல் தாதாவான என் நெருங்கிய நண்பன் ஒருவன்தான் வில்லிவாக்கம் இளங்கோவன் வீட்டுக்கு என்னை அனுப்பிவைத்தான்.

'இங்க பாரு மாரி... அவ்வளவு பெரிய மெட்ராஸ்ல நீ யாரையும் தெரியாமப்போய் அங்க ஒண்ணும் பண்ண முடியாது. காசு இல்லைன்னா, அங்கே மூச்சுவிடுறதுக்கு காத்துகூட வாங்க முடியாது. கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு... எனக்கு வில்லிவாக்கத்துல ஒரு கிளையன்ட் இருக்கான். பேரு இளங்கோவன். நம்ம ஏரல் பக்கம்தான் சொந்த ஊரு. ரெண்டு ஆம்பளப் பயலுக இருக்கானுவ. மேட்டர் என்னன்னா, பார்ட்டியோட பொண்டாட்டி பார்ட்டிய விட்டுட்டுப் போய்டிச்சி. எப்படியாவது பொண்டாட்டியத் தேடிப் பிடிக்கணும்னு அலையிறான். அதே சமயத்துல எங்க அவ இவனைக் கொன்ருவாளோனு பயப்படுறான். பார்ட்டிகிட்ட பணம் ஜாஸ்தியா இருக்கிறதால, பயமும் ஜாஸ்தி. அவனோட பயத்துலதான் இப்போ என் ஆபீஸே ஓடிக்கிட்டு இருக்கு. நீ அங்கே போய், ஒரு மாசம் நீ நினைச்ச மாதிரி வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா இரு. உன்னோட எல்லாத் தேவையையும் அவனே பார்த்துக்குவான். சரியா?''

மறக்கவே நினைக்கிறேன் - 12

எங்கேயோ இருக்கும் வில்லிவாக்கம்தான் மொத்த சென்னையுமே என்று நினைத்துக்கொண்டு வந்து இறங்கினேன். கண்கள் நிறையப் பயமும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலையுமாகக் கருகருவென்று நீண்டு வளர்ந்த முடியோடும் தாடியோடும் இருந்தார் இளங்கோவன். டவுசர் போட்ட ஒரு பையன், டவுசர் போடாத இன்னொரு பையன்... இரண்டு சிறுவர்களும் அப்பாவின் கைகளை ஆளுக்குஒருவராக இறுக்கமாகப் பிடித்தபடி என்னை வெறித்துப் பார்த்தார்கள்.

''தம்பி... உங்களுக்குத் தனி ரூம். என்ன வேணும்னாலும் வெட்கப்படாமக் கேளுங்க. என்கூடவும் என் பிள்ளைங்ககூடவும் நீங்க எப்பவும் இருங்க... அது போதும்!'' என்றார்.

அந்த வீட்டின் முதல் விடியலிலேயே எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பயணக் களைப்பில் அசந்து தூங்கி சோம்பலாக எழுந்து வந்து கண்களைக் கசக்கிப் பார்த்தால், என்னையும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய தன் இரண்டு மகன்களையும் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டுப் போயிருந்தார் இளங்கோவன்.

''டேய்! என்னடா வெளிய பூட்டியிருக்கு... யார்டா பூட்னா?''

''எங்கப்பாதான். வெளியே பூட்டிட்டு வேலைக்குப் போயிருக் காரு!''

''என்னது... வேலைக்குப் போயிருக்காரா? அப்படின்னா, நீங்க எப்படிடா ஸ்கூலுக்குப் போவீங்க?''

''ஸ்கூலுக்கா? அம்மா எங்க அப்பாவை விட்டுப் போனதுக்கு அப்புறம் நாங்க வீட்டுக்குள்ளயேதான் இருக்கோம்!''

''உங்க அம்மா எப்போ போனாங்க?''

''எங்க அப்பாவுக்கு திருப்பதி கோயில்ல போய் மொட்ட போட்டுட்டு வந்தோம்ல... அன்னைக்கே போய்ட்டாங்க!''

''அடப்பாவிங்களா... இப்போ உங்க அப்பாவுக்குக் கொண்டை போடுற அளவுக்கு முடி வளந்துருச்சேடா! இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளேயேவா இருக்கீங்க?''

''ஆமா... வெளிய போனா, எங்க அம்மா எங்களைத் தூக்கிட்டுப் போயிருவாங்கனு, எங்க அப்பா எங்களை வெளியவிடுறதில்ல!'

இரண்டு குழந்தைகளும் அழுகையே வராதுபோலவும், அடக்க முடியாமல் அவ்வளவு அழுகை வருவதுபோலவும் என்னிடம் பேசியவிதம் எனக்குள் பகீர் அதிர்ச்சியை உண்டாக்கியது. அரை மணி நேரம் ஒரு வீட்டுக்குள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரிந்த எனக்கே மண்டை அவ்வளவு சூடானது என்றால், ஆறு மாதங்களுக்கும் மேலாக சூரிய வெளிச் சமே படாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் அந்தக் குழந்தைகளின் மனம் எப்படி இருக்கும்? யாரும் எடுத்து ஓங்கி அடிக்காமலே ஒரு சுத்தியல் மண்டையைச் சுளீரென்று பதம் பார்த்தது போலிருந் தது எனக்கு.

''சரிடா... நமக்குச் சாப்பாடு?''

''அதான்... அப்பா மூணு நேரத்துக்கும் மூணு பேருக்கும் சாப்பாடு வாங்கி வெச்சிட்டுப் போயிருக்காங்களே' என்று ஒரு மூலையில் குவித்துவைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு மூட்டையைக் காட்டினார்கள். பசங்க ஏற்கெ னவே கொஞ்சம் பிரித்துக் கொறித்துவிட்டு, அப்படியே போட்டுவைத்திருந்தார்கள். அந்த மொத்த வீட்டையும் மொத்த சாப்பாட்டையும் பார்க்கப் பார்க்க எனக்குத் தலை சுற்றியது. வில்லிவாக்கம்தான் சென்னை என்று வந்தவனுக்கு, வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு அழுக்கு வீடுதான் சென்னை என்றாகிப்போனது.

மறக்கவே நினைக்கிறேன் - 12

இரவு வேலையை முடித்துவிட்டு, கை நிறையப் பண்டங்களோடும் விளையாட்டுச் சாமான்களோடும் திரும்பி வந்தார் இளங்கோவன். அவரிடம் கோபப்பட எனக்குத் துணிச்சல் வரவில்லை. காரணம், கதவைத் திறந்தவுடன் தன் பிள்ளைகளை அப்படியே அள்ளியெடுத்து, முத்த மழை பொழிந்த அந்தத் தகப்பனைப் பார்க்க அவ்வளவு பரிதாபமாகவும், குழப்பமாகவும், அச்சமாகவும் இருந்தது. இளங்கோவனிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்பதை முன் தீர்மானித்துவிட்டு, ரொம்பவே பழகிய ஏற்றுக்கொண்ட குரலில்தான் கேட்டேன். ''எதுக்குங்க என்னை உள்ள வெச்சிப் பூட்டிட்டுப் போனீங்க?''

''அதுவா..? அவள நம்ப முடியாது தம்பி. எப்ப வேணும்னாலும் பிள்ளைங்களத் தூக்கிட் டுப் போய்டுவா... அதான்!''

''சரி... நான் எப்படி வெளியே போறது?''

''நாளைக்கு நான் ஆபீஸ் கிளம்பும்போதே, என்கூட வந்துடுங்க. அப்புறம் நான் திரும்பி வரும்போது நீங்க வந்தா போதும்!''

''எல்லாம் சரி... பிள்ளைங்க படிப்பு?''

''அதுக்கென்ன... ஒரு டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதியிருக்கேன். அதுல பாஸ் பண்ணிட்டேன்னா, டெல்லிக்குப் போயிடுவேன். அங்க போய் என் பசங்களை ராஜா மாதிரி படிக்கவெப்பேன்!''

அதோடு சரி! அதன் பிறகு இளங்கோவனிடம் நான் பெரிய விவாதங்கள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் கண்களில் நூறு வருடங்களுக்கான முட்டாள்தனமான திட்டமிடல் தெளிவாகத் தெரிந்தது மட்டுமல்லாமல்; இனி யாரிடமும் எதற்கும் தோற்கக் கூடாது என்ற அசட்டுத் துணிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், தொடர்ந்து வரப்போகும் நாற்பத்தெட்டு மணி நேரத்தில் முழுப் பைத்தியமாக மாறிவிடக் கூடிய மனநிலையில் நான் இருந்ததால், இரண்டு நாட்களில் அந்த வீட்டைவிட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்று உடனே முடிவெடுத்தேன்.

அதன்படியே இரண்டு நாட்களில் அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, சொல்லாமல்கொள்ளாமல் கிளம்பும்போது அந்தக் குழந்தைகளை மீண்டும் ஒரு முறை கூர்ந்து பார்த்தேன். அந்த இரண்டு நாளில் என்னைப் பார்த்து அச்சடித்தது கணக்காகச் சிரிக்கப் பழகியிருந் தார்கள். அந்தச் சிரிப்புக்காகவே இன்னும் ஒரு வாரம் அந்தப் பூட்டிய வீட்டுக்குள், அவர்களுடனே இருந்து ஏன் பார்க்கக் கூடாது என்று நினைத்தேன்.

ஒரு முழு வாரம். அந்தக் குழந்தைகளோடு அந்தப் பூட்டிய வீட்டுக்குள் இருக்கும்போதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள் இருவரும் அந்த வீட்டுக்குள் எலிகளாக, பெருச்சாளிகளாக வாழ, வாழ்ந்து பழகிக்கொண்டார்கள் என்று! அண்ணனும் தம்பியும் கழிவறை, சாமியறை, சமையலறை என எல்லா அறைகளையும் ஒரே அறையாக்கி உருட்டிப் புரட்டுவார்கள். அவர்களோடு பேச வேண்டும் என்றால், நானும் அழுக்கைப் பூசிக்கொண்டு அவர்கள் பின்னால் ஓட வேண்டும். அப்போதுதான் ஏதாவது, எப்போதாவது பேசுவார் கள். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஓடிப்போய், எங்கிருந்தோ அவ்வளவு அழகான அவர்களுடைய அம்மாவின் புகைப்படத்தை எடுத்துவந்து, 'அம்மா வயித்துல நான் இருக்கும்போது’ என்று காட்டுவார்கள். அப்ப டியே அப்பா ஒளித்துவைத்த தங்கள் பள்ளிச் சீருடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, எனக்குப் போட்டுக்காட்டி, டை கட்டிவிடச் சொல்லிக் கெஞ்சுவார்கள். விளையாடிக்கொண்டு இருக்கும் போதே அவர்களாகவே என்னைப் பார்த்து முணுமுணுவென்று ஏதோ சொல்லி, அவர் களுக்குள் சண்டை போட்டுக்கொள்வார்கள். கொஞ்ச நேரம் அழுவார்கள். அழக் கூடாது என்று சொல்ல அந்த வீட்டுக்குள் ஆட்கள் யாரும் இல்லாததால், கொஞ்ச நேரத்தில் அழுகையை அவர்களாகவே நிறுத்தி, முறைக்க வும் சிரிக்கவும் பழகியிருக்கிறார்கள்.

''டேய்! உங்க அம்மா எங்கே போயிருக்காங்கனு தெரியுமாடா?''

''தெரியுமே... ஊருக்குப் போயிருக்காங்க!''

''யார்டா சொன்னா?''

''எங்க அம்மாதான். போகும்போது சொல்லிட் டுத்தான் போனாங்க!''

''உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதானே?''

''எங்க அப்பா எங்ககிட்ட கேக்கலியே!''

மறக்கவே நினைக்கிறேன் - 12

''இல்லடா... உங்க அம்மா ஓடிப்போய்ட்டாங்க!''

''பொய் சொல்றீங்க. எங்க அம்மா நடந்துதான் போனாங்க. நாங்க மாடில இருந்து பார்த்தோம்!''

அவ்வளவுதான்... என் முகத்தில் அந்தச் சிறுவர்கள் காறித் துப்பியதுபோல் இருந்தது. அவர்களின் அம்மா உயிரோடு இருக்கிறாளா, இல்லையா? இருந்தால் எங்கிருக்கிறாள்? என்ன செய்துகொண்டிருக்கிறாள்? அம்மா சொன்னதை நம்பி பூட்டிய வீட்டுக்குள் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களின் பாதுகாவலுக்காக அடியாளாக நான் வந்திருப்பதை நினைத்து... என் மீது எனக்கே அசூயையாக இருந்தது.  

காலையில் இளங்கோவனிடம் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, அண்ணா சமாதி பார்த்துட்டு அப்படியே நண்பன் ஒருவனைப் பார்க்கப்போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். எக்மோருக்கு வந்து அடித்துப் பிடித்து நெல்லை எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏறி உடம்பைச் சுருக்கிக்கொண்டு கிடந்தபோதுதான், 'மாமா... நீங்க கடலைப் பார்த்துட்டு வரும்போது, பெரிய கடல் சங்கு வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று அந்தக் குழந்தைகள் சொல்லி அனுப்பியது நினைவுக்கு வந்தது. கண்கள் இரண்டையும் சிக்கென்று மூடிக்கொள்ள, ஜிவுக்கென நகர்ந்தது அன்றைய என் நெல்லை எக்ஸ்பிரஸ்.

கடந்த வாரம் எப்படியோ, யாரிடமோ என் அலைபேசி எண்ணைப் பெற்று வில்லிவாக்கம் இளங்கோவன் என்னிடம் பேசியேவிட்டார். இத்தனை வருடங்களுக் குப் பிறகு என்னைக் கண்டுபிடித்துப் பழிதீர்க்காமல், பகை வளர்க்காமல் பேசிய அந்தக் குரல் இப்போதும் என் காலில் விழுந்து கெஞ்சுவதற்குத் தயாராகவே இருந்ததுதான், என் குற்றத்தின் மீது பாய்ந்த குத்தூசி!

''என்ன தம்பி... என்னை ஞாபகம் இருக்கா? நான் தான் வில்லிவாக்கம் இளங்கோவன்!''

''சார்... நல்லா இருக்கீங்களா?''

''நல்லா இருக்கேன் தம்பி! பெரிய ஆளாகிட்டீங்கபோல... டி.வி-லகூடப் பார்த்தேன். முகம் அப்படியேதான் இருக்கு. பசங்ககூடக் கண்டுபிடிச்சிட்டாங்க!''

''ம்ம்... பசங்க எப்படி இருக்காங்க? எங்கே இருக் கீங்க?''

''நல்லா இருக்கானுங்க. பெரியவன் டென்த். சின்னவன் சிக்ஸ்த். இப்போ பெங்களூர்ல இருக் கோம்!''

''சந்தோஷங்க. உங்க மனைவி என்ன ஆனாங்க? திரும்ப வந்துட்டாங்களா?''

''இல்லை தம்பி... வாழ்றதுக்குத் தேடினேன். அப்பவும் வரலை. கொல்றதுக்குத் தேடினேன். அப்பவும் கிடைக்கலை. எங்க போனா, என்ன ஆனா... கண்டுபிடிக்க முடியலை. அதான் ஊருக்குப் போய் அவ தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டேன். பக்கத்துலதான் இருக்கா... பேசுறீங்களா?''

''இல்லை சார்... அப்புறம் பேசுறேன். வெச்சிடுறேன்!''

- இன்னும் மறக்கலாம்...