நெடுஞ்சாலை வாழ்க்கை!

##~## |
தேசிய நெடுஞ்சாலைகளில், லாரிகளை நம்பி ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. ஹோட்டல், வொர்க் ஷாப், பெட்ரோல் பங்க் தவிர்த்து சின்ன அளவில் தினசரி வருமானத்தை நம்பிப் பிழைக்கும் குடும்பங்கள் ஏராளம். பங்க் கடை, பஞ்சர் கடை, டீக்கடை, ஸ்டேஷனரி, துண்டு, லுங்கி விற்பவர்கள் மட்டுமல்லாது, டோல்கேட்டில் கிளீனிங் துணி முதல் வேர்க் கடலை வியாபாரம் பார்ப்பவர் வரை பட்டியலிட முடியும். இதில், 10 வயதுகூட நிரம்பாத சிறுவர் - சிறுமியரைப் பார்க்க நேர்வதுதான் நெடுஞ்சாலை அவலம்.
நாயுடுபேட்டையில் லாரிகளை கிரீஸ் மிஷினுடன் சுற்றிய அனைவருமே சிறுவர்கள்தான். லாரியில் கிரீஸ் வைக்கும் பாயின்ட்டுகள் மொத்தம் 21 உள்ளன. இதில், 'யுனிவர்ஸல் ஜாயின்ட்’ எனப்படும் 'மெயின் ஷாஃப்ட்’-ல் நான்கு பாயின்ட்டுகள் உள்ளன. இதில், 200 அல்லது 300 கி.மீ-க்கு ஒரு தடவை அவசியம் கிரீஸ் வைக்க வேண்டும். இதற்கு மட்டும் 50 ரூபாய். அனைத்து பாயின்ட்டுகளுக்கும் கிரீஸ் அடிக்க வேண்டும் என்றால், 150 ரூபாய் ஆகும். மூன்று லாரிகளுக்கும் கிரீஸ் அடிக்கும் சமயத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி, டீ குடித்துத் தயாரானோம்.
சேலத்தில் இருந்து பல்வேறு சாலைகளில் புகுந்து புறப்பட்டு வந்ததில், லேசாக உடல் வலி ஆரம்பித்தது. நாயுடுபேட்டையில் இருந்து இனி நால்வழிச் சாலைப் பயணம்தான். அலுப்பில்லாமல் சுகமாக இருக்கும் என நினைத்தபடியே சிவக்குமாரின் லாரிக்கு மாறினோம். லேசான குதிப்புடன் கொல்கத்தா நெடுஞ்சாலையில் கிளம்பின மூன்று லாரிகளும்.

சிவக்குமார் இந்தத் தொழிலுக்கு வந்து 24 ஆண்டுகள் ஆகின்றன. கிளீனர், டிரைவர், இப்போது ஓனர் கம் டிரைவர். இவருடைய மற்றொரு டிரைவர், ஜலேந்திரன். இந்தியாவில் டயர் பதிக்காத மாநிலங்கள் இல்லை என்பது மட்டுமே இவர்களின் பெருமை. ''ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்ப இருந்த மாதிரிதான் இப்பவும் இருக்கோம்'' என்று அலுத்துக் கொள்கிறார். ஆனாலும், தனக்குத் தெரிந்த தொழில், சொந்தத் தொழில் என்பதில் தான் இவர்களின் கர்வம், கம்பீரம், பெருமை எல்லாமே இருக்கிறது.
லாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 50 கி.மீ என்றாலும், பெரும்பாலும் இதை யாரும் கடைப்பிடிப்பது போலத் தெரியவில்லை. ஆனால், நாம் பயணம் செய்த லாரிகள், மணிக்கு 45 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லவில்லை. முன்னே சென்ற முருகனின் லாரிதான் இந்தப் பயணத்தின் கேப்டன். மற்ற இரு லாரிகளுமே இந்தப் பாதைக்குப் புதுசு. எனவே, முன்னே செல்லும் லாரி எங்கெல்லாம் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் என்ன ஏது எனக் கேட்காமலே, மற்ற இரு லாரிகளும் பொறுமை காத்தன.

''கனரக வாகனமான லாரியை கார், பைக் போல நினைத்த உடன் பிரேக் அடித்து நிறுத்திவிட முடியாது. காரணம், லாரியில் இருக்கும் சரக்கின் எடைதான் லாரி நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். அனுமதிக்கப் பட்ட அளவுக்கு மேல் சரக்கு ஏற்றிச் செல்வதில் பெரும் பிரச்னையாக இருப்பது பிரேக்தான். கூடுதலான சுமையால் பிரேக் செயல்படாமல் போய் விடும் வாய்ப்பும் உண்டு. அதேபோல், அதிக வேகமாகச் செல்வதில் விபத்துக்கான முக்கிய காரணியாகவும் இருக்கிறது. மிதமான வேகம் இன்ஜினை சமமான செயல் பாட்டில் வைத்திருக்கும். அதனால், கூடுதலாக மைலேஜும் கிடைக்கும். டீசலை மிச்சம் பிடித்தால், எங்களுக்கு அதுதான் சில சமயம் லாபமாக இருக்கும்'' என்றார் சிவக்குமார்.
முந்தைய தினம் சேலத்தில் புறப்பட்டு இதுவரை யாரும் தூங்கவில்லை. ''எப்போது தூங்குவீர்கள்'' என்றபோது, ''தூக்கம் வரும்போது தூங்கிவிட வேண்டியதுதான்'' என்றவர், ''பகல் வெப்பத்தில் லாரியை ஓட்டுவது சிரமம். மேலும், டிராஃபிக் அதிகமாக இருக்கும். டூவீலர்களும் கார்களும் உள்ளே புகுந்து வளைந்து செல்லும். அவர்களுடன் எங்களால் ஒருபோதும் போட்டி போட முடியாது. அதேபோல், குறைவான வேகத்தில் சென்றால்கூட, பிரேக் பிடித்தால், ஐந்து மீட்டராவது தாண்டித்தான் லாரி நிற்கும். இதை டூவீலர் ஓட்டுபவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலே டூவீலர்கள்தான். அதனால்தான் இரவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓட்ட விரும்புகிறோம். இரவில் விழித்து, பகலில் தூங்குவது எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இன்னொரு விஷயம், இரவில் லாரியை நிறுத்தித் தூங்குவதும் பாதுகாப்பான விஷயம் இல்லை'' என்று வயிற்றில் புளியைக் கரைத்தார் சிவக்குமார்.
சூரியன் உயர உயர வெப்பம் தகிக்க ஆரம்பித்தது. தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் உடனே நாக்கு வறண்டு விடுவதைக் கண்டு மிரண்டுவிட்டோம். உடலில் அணிந்த துணிகள் எல்லாம் கசகசத்து பாரமாகத் தோன்ற ஆரம்பிக்க, கிட்டத்தட்ட அரை நிர்வாண நிலையில்தான் அனைவரும் இருந்தோம். இதற்கிடையே ஜலேந்திரன் காய்கறிகளை நறுக்கிக்கொண்டே சமையலுக்கு ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார். ஓடும் லாரியில் ஸ்டவ் நிறுத்த கச்சிதமாக ஒரு ஸ்டாண்ட்; அதில் பக்காவாக உட்கார்ந்துகொள்ளும் குக்கர்; விசில் வந்ததும் அதை இறக்கிவிட்டு, அளவான பாத்திரத்தில் சாம்பார் வைக்க... அது கொதிக்க ஆரம்பித்தது.

வரிசையாக எதிர்ப்படும் டோல்கேட்டுகளில் கணிசமாகப் பணம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். டோல்கேட்டுகளில், திருப்பங்களில் விசில் ஊதி லாரியை நிறுத்தும் வணிக வரித் துறை, போக்குவரத்துத் துறை, போலீஸ் துறை என 20, 50, 100 என பிரசாதங்கள் வழங்கியபடியே பயணம் தொடர்கிறது. ஆனால், பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளும் பக்தனிடம் பய பக்தியோ, பணிவோ இல்லை; கை நீட்டுகிறோம் என்கிற வெட்கமும் இல்லை. 'போதாது, இன்னும் தா’ எனக் கேட்கும் அதிகாரம், மிரட்டல், வசவு என சொரணையற்ற செயல்பாடாக இந்த வாழ்க்கை இருக்கிறது.
நெல்லூருக்கு முன்பாக இருந்த ஒரு மோட்டலில் நிறுத்தி, திறந்தவெளியில் தொட்டியில் நிரம்பி வழிந்த சில்லென்ற நீரில், உற்சாகமாக அனைவருமே ஒரு குளியலைப் போட்டோம். குளித்து முடித்ததும் வயிறு பசியில் கிள்ள ஆரம்பிக்க... மர நிழலில் உட்கார்ந்து ஜலேந்திரனின் சமையலை ஒரு பிடி பிடித்தோம். சொல்லொணா ருசியுடன் அபாரமாக இருந்தது உணவு.
அதீத வெப்பம், முன் தினம் தூங்காமல் பயணம் செய்தது, களைப்பு என அனைவரையுமே ஆட் கொண்டபோது நன்றாக இருட்டிவிட்டது. விஜயவாடாவுக்கு முன்பாக புறநகர் பகுதியில் சாலையோரம் லாரிகளை ஓரங்கட்டி படுப்பதற்கு ஆயத்தமானோம். காரில் இருப்பதுபோல ஏ.சி இல்லை; வீடுபோல ஃபேன் இல்லை; கால் நீட்ட இடம் இல்லை; கொசுக்களிடம் தப்பிக்க எந்த உபகரணங்களும் இல்லை. இப்படி பல இல்லைகள் இருந்தாலும் டிரைவரின் பின்னால் இருக்கும் சீட், பேனட், பக்கவாட்டுப் பலகை, கேபின் டாப் என கிடைத்த இடத்தில் சுருண்டுகொண்டோம். படுத்ததுமே அயர்ந்துவிட்டோம்.
லாரியின் டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி கடலில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். அலைகளைக் கவனமாகக் குறுக்குவாட்டில் கடப்பதும், அலையின் தாலாட்டுக்கு ஏற்ப ஒற்றைக் கையால் ஸ்டீயரிங்கை பேலன்ஸ் செய்தபடி, உற்சாகமாக அடுத்த அலையை எதிர்பார்த்து மிதந்துகொண்டு இருந்தபோது.... யாரோ என்னை அழைத்தார்கள். கடல் பயணத்தைவிட்டு உடனே திரும்ப மனமில்லாமல், அழைப்பது யாரென்று செவிமெடுக்க ஆரம்பித்தேன். தலைக்கு அருகே ஒருவர் சத்தமிடுவதும், பலகையில் படார் படாரென்று தட்டுவது உணர்ந்ததும் திடுக்கிட்டு விழித்தேன். லாரிக்கு அருகே சைரன் அலறியபடி போலீஸ் பேட்ரோல் கார் ஒன்று நிற்க, கான்ஸ்டபில் ஒருவர் எங்களை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை உணர்ந்த கணம் மனம் பதற ஆரம்பித்தது.
'பேப்பர், பேப்பர்’ என கான்ஸ்டபிள் கத்துவது எனக்குக் கேட்டாலும், சிவக்குமார் அதை எங்கே வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பானெட்டின் மீது உறங்கிக் கொண்டு இருந்த சிவக்குமாரை எழுப்ப முயற்சி செய்தேன். சும்மா உட்கார்ந்து வந்த எங்களுக்கே அவ்வளவு களைப்பு என்றால், இரண்டு தினங்களாக தூங்காமல் லாரி ஓட்டி வந்தவருக்கு எப்படி இருக்கும்? அவரை எழுப்பவே முடியவில்லை. வெளியே போலீஸ் கத்த... நான் என்ன செய்வது என்று புரியாமல் சிவக்குமாரை கிட்டத்தட்ட தூக்கி உட்காரவைத்தேன். அவருக்கு எதுவும் புரியவில்லை. அந்தச் சூழ்நிலையை அவரால் உணரக்கூட முடியவில்லை. காரில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி திடீரென, ''பேப்பர் பட்றா'' என கிட்டத்தட்ட உச்சஸ்தாயியில் கத்தினார். நான் தேடுவதுபோல பாவனை செய்ய... நீளமான லத்தியுடன், கோபமாக லாரியை நோக்கி வந்தார் அந்த அதிகாரி!
(நெடுஞ்சாலை நீளும்)
