Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

 நடிப்புச் சூரியன்!

சரித்திரத்தில் 'சிவாஜி’ என்றால் வீரம் என்று பொருள்படுவதுபோல, திரையுலகில் 'சிவாஜி’ என்றால், நடிப்புக்கே இலக்கணம்

வகுத்தவர் என்றுதான் அர்த்தம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாரதத்தின் மிக உயர்ந்த மரியாதையான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. 'முதல் மரியாதையாக’ அல்லாமல் காலங்கடந்து அவருக்குத் தரப்பட்ட விருது இது. பிரெஞ்சு நாட்டவர் கள்கூட அவருக்கு 'செவாலியே’ பட்டம் தந்து நம்மை முந்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெறும் பாடல்களின் தொகுப்பே திரைப்படமாகக் கருதப்பட்ட சமயத்தில், இளம்புயலாக உள்ளே நுழைந்து நடிப்பில் ஒரு யுகப்புரட்சியை ஏற்படுத்தி, தனி முத்திரை பதித்தவர் சிவாஜி. அவரது முதல் படமான 'பராசக்தி’யில், நீதிமன்ற காட்சியில் கூண்டில் அவர் அடிபட்ட புலிபோல் வசனம் பேசி நடித்த காட்சி, 'இந்த இளைஞருக்கு இது முதல் படமா’ என்ற பிரமிப்பையும் சந்தேகத்தையும் கிளப்பியது. பிற்காலத்தில் சாதனை படைக்கத் துடிக்கும் ஒளி அவரது கண்களில் மின்னுவதை இன்றும் அந்தப் படத்தில் காணலாம்!

காலப்பெட்டகம்

இந்தத் தன்னிகரில்லாத நடிப்புச் சூரியனுக்கு விருது வழங்க மத்திய அரசுக்கு ஏன் இத்தனை காலம் பிடித்தது? இப்போது ஆட்சி நடத்த தமிழக எம்.பி-க்களின் ஆதரவு தேவைப்படுவதும், தமிழக முதல்வர் கருணாநிதியும், மூப்பனாரும், சிதம் பரமும் மத்திய அரசியல் செல்வாக் குடன் இருப்பதும்தான் சிவாஜிக்கு விருது கிடைத்ததற்குக் காரணம் என்று ஏன் சொல்லக்கூடாது?

சிவாஜி இந்த விருதை மறுக்காமல் புன்னகையோடு ஏற்றது தமிழ் பண்பாட்டின் அடையாளம்!

தஞ்சைப் பெரியகோயில் யாகப் பந்தல் தீ விபத்து, இந்துஸ்தான் பெட்ரோலிய சமையல் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து, சென்னை- அண்ணாசாலை தொலைபேசி இணைப்ப கத் தீ விபத்து எனப் பல பெரிய தீ விபத்துகள் இந்த ஆண்டில் நடந்தன. யாகப் பந்தல் தீ விபத்து பற்றி முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் கண்ணீர் வர்ணனையிலிருந்து ஒரு துளி இங்கே...

'போனோம்... பார்த்தோம்... பதறினோம்..!’

''சனிக்கிழமை ராத்திரி, முதல் தகவல் வந்தப்போ ஏழேமுக்கால் மணியிருக்கும்; அந்த நேரத்தில் பெரும்பாலும் அவர் (முதல்வர்) அறிவாலயத்தில்தான் இருப்பார்; அன்னிக்கும் அங்கேதான் இருந்தார். மறுநாள் தஞ்சாவூர் பெரியகோயில் கும்பாபிஷேகத்துக்காக யாகம் நடந்துக்கிட்டிருந்த பந்தல் தீப்பிடிச்சுச்சுன்னு மட்டும்தான் அவருக்குத் தகவல் வந்திருக்கு. 'தீ விபத்துனால பாதிப்பு ஏதும் வரக்கூடாது. தீவிரமா ஆக்ஷன் எடுங்க’னு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுட்டு 9 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தார். விஷயத்தை என்கிட்டேயும் சொல்லிட்டு மாடி யேறிப்போனார். ஒரு பத்து நிமிஷம் கூட இருக்காது; தீ விபத்தில் பத்துப் பதினஞ்சு உயிர்கள் பலியாகியிருக்க லாம்கிற கொடூரமான தகவலோட அந்த போன்கால் வந்தது. அடுத்த பத்து நிமிஷத்தில் 'உயிர்ப்பலி இன் னும் அதிகமிருக்கலாம்’னு அடுத் தடுத்து ரெண்டு போன்கால்கள்!

போனில் பேசியவர் அப்படியே உட்கார்ந்துட்டாரு. நான் அப்பத்தான் அவருக்கு நைட் டிபன் தர்றதுக்காக இட்லியும் இடியாப்பமும் எடுத் துட்டு மாடி ஏறிப்போனேன். 'இப்படி நடந்திடுச்சும்மா’னு முழுசா என்கிட்டே சொல்றதுக்குள்ளேயே வார்த்தை தடுமாறி அடக்கமுடியாம கதறிக் கதறி அழ ஆரம்பிச்சுட்டாரு! இத்தனை வருஷத்தில் அவரோட அரசியல், சொந்த வாழ்க்கையில் எத்தனையோ நல்லது- கெட்டதுகள் நடந்திருக்கு. திடுதிப்னு ஆட்சிக் கவிழ்ப்புச் செய்தி வந்திருக்கு. அப் பல்லாம் கொஞ்சம்கூடத் துவண்டு போகாம நின்னவர் அவர். சொல்லப் போனா அந்த மாதிரி நேரத்தில்தான் தைரியத்தைக் கூட்டிக்கிட்டு நிப்பாரு. கல்யாணமாகி 50 வருஷத்துக்கு மேல ஆகுது. இத்தனை வருஷ தாம்பத்தியத்தில், அவர் அம்மா இறந்தப்பவும், அறிஞர் அண்ணா இறந்தப்பவும் மட்டும்தான் இப்படி அவர் அடக்கமாட்டாம அழுததைப் பார்த்திருக்கிறேன். சில சந்தர்ப்பங் களில் வேதனைப்பட்டுக் கொஞ்சம் கண்கலங்கினது உண்டே தவிர, இப்படி அழுததில்லே. அவரைச் சமாதானப்படுத்தற தைரியம்கூட எனக்கு அன்னிக்கு வரலே!

காலப்பெட்டகம்

மறுநாள், விடிகாலை 5 மணிக்கே தஞ்சாவூருக்குக் கிளம்பிட்டாரு. எப்பவும் வெளியூர் போனா அவர் போற அதே கார்லதான் நானும் போறது வழக்கம். இந்தத் தடவை அவர் இந்த விபத்து விஷயம் பத்தி மத்த மினிஸ்டர்ஸ்கிட்டே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டே போகணும்னு நினைச்சார்போல! அதனால அவர், ஆற்காட்டார், துரைமுருகன் மூணு பேரும் ஒரு வண்டியில் ஏறிட் டாங்க! இன்னொரு வண்டியை வாடகைக்கு எடுத்து, நானும் அவரோட பர்சனல் செக்ரெட்டரி சண்முகநாதனும் ஏறிட்டோம். திண்டிவனத்தில் பொன்முடி, எங்க ளோட வந்து சேர்ந்துக்கிட்டார்.

நாங்க தஞ்சாவூருக்குப் போற துக்குள்ளே உள்ளூர் எம்.எல்ஏ-க் கள், எம்.பி-க்கள்னு கட்சிக்காரங்களும் கலெக்டருமா சேர்ந்து, பாதிக்கப் பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆறுதல் சொல்லி, தேவை யானதை செஞ்சு கொடுத்துட்டிருந்தாங்க!

காலப்பெட்டகம்

ஆஸ்பத்திரிக்குள்ளே எங்க வண்டி நுழையறப்பவே, தீக்காயம் பட்டவங்களோட உறவுக்காரங்க அழுதுக்கிட்டு நின்னதை வெச்சே, அந்தக் கோரத்தோட கொடுமையை என்னால உணர முடிஞ்சது! ஆஸ் பத்திரிக்குள்ளே போனப்ப எனக்கு உடம்பு நடுக்கம் கண்டுபோச்சு. தீநாக்கோட தீண்டலைப் பொறுக் காம, கையும் காலும் முதுகும் தோல் உரிஞ்சு பிளந்துபோன நிலை மையில் வரிசை வரிசையா படுத்தி ருந்தவங்களைப் பார்த்ததும் எனக்கு  அழுகை முட்டிட்டு வந்துடுச்சு!

ஆஸ்பத்திரியில் அட்மிஷன் ஆகி சிகிச்சையில் இருந்ததில், முக் கால்வாசிப் பேர் வயசானவங்கதான். அதிலும் பொம்பளைங்கதான் அதிகம். அடுத்த நாள் நடக்கிறதா இருந்த கும்பாபிஷேகத்தைப் பார்க்கணும்னு முதல் நாளே வந்து, இடம் பிடிச்சுக் காத்திட்டிருந்தவங்கதான் இப்படித் தீயில் சிக்கியிருக்காங்கனு தெரிஞ்சது.

நாங்க போன சமயம், இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னால் இருந்து நடத்திட்டிருந்த சரபோஜி இளவரசர் சத்ரபதி ராஜா பான்ஸ்லே இந்த தீ விபத்துனால பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஆகி, ஆஸ்பத்திரியில்தான் இருந்தார். உடம்பைவிட மனசால தான் அவர் ரொம்ப பாதிக்கப்பட்டி ருந்தாரு. படுக்கையில் இருந்த அவர் தலைவரோட பேச முயற்சி பண் ணினப்போ, வார்த்தை தெளிவா வரலே! அந்தளவுக்கு அப்செட்டாகி இருந்தார்.

அந்தப் பையனை (தஞ்சாவூர் ராஜா) எனக்கு நல்லாத் தெரியும்! நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற பையன். சமீபத்தில்தான் கல்யாணம் ஆகியிருக்கு. மனைவி பரோடா இளவரசி. அவங்களும் பக் கத்துல இருந்தாங்க. நாலு வார்த்தை ஆறுதலா பேசிட்டு வந்தேன்.

அதுக்கு அப்புறம்தான் விபத்து நடந்த பிரகதீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். மெட்ராஸ்ல நாங்க கிளம்பறதுக்கு முன்னால இருந்தே சிலர், 'அந்தக் கோயில்ல ஏதோ மர்ம சக்தி இருக்கு; அது ராசியில்லாத கோயில்; முடிஞ்சவரைக்கும் கோயி லுக்குள்ளே போறதைத் தவிர்த் துடுங்க!’னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாங்க. இவர் அதையெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லை. 'ஏற்கெனவே நான் பல சந்தர்ப் பங்களில் அந்தக் கோயிலுக்குள்ளே போயிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி எனக்கு எந்தக் கெடுதலும் நேர்ந்ததில்லையே! இப்பவும் நான் அங்கே போய்த்தான் ஆகணும். நான் அங்கே போறதால் எனக்கு ஏதாவது கெடுதல் வரும்னா வந்துட் டுப் போகட்டும்’னுட்டார். எனக்கும் கூட அவர் சொல்றதுதான் சரியா இருந்தது. நானேகூட ஒரு தடவை தஞ்சாவூர் எலெக்ஷன்ல அவர் நின்னப்ப, கோயிலுக்குள்ளே போய்ப் பார்த்துப் பிரமிச்சு நின்னி ருக்கேன். அங்கிருக்கும் சிற்பங்கள் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்! இந்தத் தரம் பின்புற வழியாகத்தான் கோயிலுக்குள்ளே போனோம். ஆனா, அதுக்கு இந்த 'மர்ம சக்தி’ காரணம் இல்லை. எந்த வழியாகப் போனால் அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்னு தீர்மானிக்கிற செக்யூ ரிட்டி அதிகாரிகளே முடிவு பண்ணி கொண்டுபோய் விட்ட வழி அது... அவ்வளவுதான்!

முதல் நாள் வரைக்கும் மந்திர கோஷத்தோட மங்கலமா இருந்த அந்த இடம், முழுக்கச் சாம்பல் மேடா கிடந்தது. எரிஞ்சு உருக் குலைஞ்சு போன பொருட்கள்... வெண்கலக் கலசங்கள், கருகிப்போன மாவிலைகள், ஜனங்க பதறி ஓடி னப்ப கிழிஞ்சு துண்டாகி விழுந்த துணிகள், ஆணிகள், வெடிச்சு சிதறின பல்புகளோட கண்ணாடிச் சில்லுகள்னு பயங்கரமா இருந்தது! அத்தனை பெரிய தீ விபத்துலேயும் எந்தச் சேதமும் இல்லாம கம்பீரமா நின்ன சிலைகளையும், கோயில் சிற்பங்களையும் பார்த்தப்போ தலைவர் முகத்திலே அந்தச் சோகத் திலும் ஒரு பெருமையும் சின்ன ஆறுதலையும் பார்க்க முடிஞ்சது.

அவர் நெத்தியிலே நிறைய கோடுகள் இருக்கும். எப்பவாவது அவர் அளவுக்கு மீறின சோகத்தில் இருக்கிறப்போ, இன்னும் கொஞ்சம் ரேகை நெத்தியில் புதுசா தெரியும். முகத்தை இறுக்கமா வெச்சிருப்பாரு. அந்த ரெண்டு நாளும் அவர் முகத் துல அந்த ரேகைகள் ரொம்ப அழுத் தமா இருந்ததை நான் பார்த் தேன்!''

சந்திப்பு: லோகநாயகி

மண்டேலாவின் காதலி!

காலப்பெட்டகம்

வின்னியை விவாகரத்து செய்த பிறகு நெல்சன் மண்டேலா, கிரேகா மாஷெல்லுடன் நெருங்கிப் பழகி வருகிறார் என்ற செய்திகள் படங் களுடன் வெளிவரத் தொடங்கின.

சமீபத்தில், லண்டனில் அரசி எலிசபெத்தைக் காணச் சென்றிருந்த நெல்சன் மண்டேலா, கிரேகாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்.

கிரேகா, 1986-ல் விமான விபத் தொன்றில் இறந்துபோன மொஸாம் பிக் அதிபர் சமோரா மாஷெல்லின் மனைவி. வயது 52.

உள்ளங்கை அளவிலான 'பேஜர்’ என்றொரு தகவல் தொடர்புச் சாதனம், இந்த ஆண்டு அறிமுகமாயிற்று. செல் போன் பரவலாக உபயோகத்துக்கு வந்ததில், பேஜர் வந்த சூட்டோடு காணாமல் போயிற்று.

பேஜார் தராத பேஜர்!

சென்னைவாசிகளுக்கு பேஜர் உபயோகம் பற்றி நன்கு தெரிந் திருக்கும். இந்த பேஜர் சர்வீஸை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, எண்களால் மட்டுமே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு நியூமரிக் (numeric) பேஜர் என்று பெயர். உலகில் இருக்கும் பேஜர்களில் சுமார் 80 சதவிகிதம் நியூமரிக் பேஜர்கள்தானாம்! பேஜர் களில் பெருமளவுக்கு வரும் செய்தி 'தயவுசெய்து இந்த எண்ணுடன் தொடர்புகொள்ளுங்கள்’ என்பது தான். அதனால் நியூமரிக் பேஜர் வைத்திருப்பவருடன் தொடர்பு கொண்டால், நாம் பயன்படுத்தும் தொலைபேசியின் எண் அவரது பேஜ ரில் பதிவாகி, அவரும் உடனே தொடர்புகொள்வார்.

காலப்பெட்டகம்

பேஜரில் இன்னொரு வகை, செய்திகளை அனுப்பப் பயன்படுத் தப்படுவது. ஆல்பா நியூமரிக் (alpha numeric) என்று பெயர். இதன் விலை சற்று அதிகம். இதில் நாம் சொல்லவேண்டிய விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். ஆங்கி லத்தில், பேஜர் மூலமாகச் செய்தி அவருக்குப் போய்விடும்.

சென்னையில் நான்கு நிறுவனங் களின் பேஜர் சாதனங்கள் புழங்கு கின்றன. பேஜிங் சர்வீஸ் என்பது வேறு. பேஜர்களுக்கான தொடர்பை வானொலி அலைகள் மூலம் அனுப் பும் நிறுவனங்கள் உள்ளன. அவற் றில் இந்தியாவிலேயே அதிகத் தொடர்புகளை உடைய நிறுவனம் மொபிலிங்க். பேஜிங் சர்வீஸுக்காக பேஜர் வாடிக்கையாளர்கள் ஒரு வருட சந்தா கட்டணமாக ரூ.1990/- செலுத்தவேண்டும்.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் ராணுவ இணை யமைச்சர் என்.வி.என். சோமு.

சொன்னார்... செய்தார்..!

சென்ற வியாழக்கிழமை மாலை... மத்திய ராணுவ இணை அமைச்சரான என்.வி.என்.சோமு, கல்கத்தாவிலுள்ள கோசிப்பூர் ராணுவத் துப்பாக்கித் தொழிற் சாலையைப் பார்வையிட்டுவிட்டு, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தாவாங்குக்கு வந்து இறங்கியபோது, நன்கு இருட்டி இருந்தது. மறுநாள் காலை இந்திய- சீன எல்லையில் இருக்கும் 'இளம்டா’ என்ற ராணுவ முகாமுக்குப் போவதாகத் திட்டம்.

அடுத்த நாள், வழக்கம்போல் பனிமூட்டத்தோடு விடிந்தது.

காலப்பெட்டகம்

''சார், நாம் போக இருக்கும் ராணுவ முகாம், மலைகளின் இடுக் குகளில் இருக்கிறது. அங்கே பெரிய ஹெலிகாப்டரில் போக முடியாது. பைலட் உட்பட, நான்கு பேர் உட்காரக்கூடிய ஹெலிகாப்டர்தான் சரிப்பட்டு வரும்'' என்று ராணுவ அதிகாரிகள் சொன்னதால், உதவி யா ளர்கள் கண்ணனும் தீனதயாளும் அங்கேயே தங்கிவிட... அமைச்சரும் ராணுவ அதிகாரிகளும் மட்டும் அந்த சிறிய ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர் தாவாங்கை விட்டுக் கிளம்பிய சில நிமிடங்களுக்குள் ராணுவத் தரைக் கட்டுப்பாட்டு அறையில் பீதி பரவியது! காரணம், அமைச்சர் சென்ற ஹெலிகாப்ட ருடனான ரேடியோ தொடர்பு அப்போது அறுந்துபோனது.

கொஞ்சமும் தாமதிக்காமல் ஐந்து ஹெலிகாப்டர்கள் அமைச்சர் சென்ற ஹெலிகாப்டரைத் தேடி, வானில் பறந்தன. அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் கோர விபத்துக்குள் ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்து எப்படி நடந்திருக்கக்கூடும் என்று பல சந்தேகங்கள்! பனிமூட் டத்தின் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்; அல்லது, ஹெலிகாப்டரிலேயே கோளாறு இருந்திருக்கலாம். அமைச் சர் சென்ற ஹெலிகாப்டரில் இருந்த 'உயரமானி’ சரியாக வேலை செய்ய வில்லை. உண்மை என்ன என்பது, ராணுவம் நடத்தும் விசாரணையின் முடிவில் தெரிந்துவிடும்.

மறைந்த அமைச்சர் சோமு, புரசைவாக்கம் சுப்பிரமணியத் தெரு வுக்குக் குடி வந்து, 25 வருடங்களாகி விட்டன. ''அமைச்சரானவுடன் புது வீடு கட்டிப் போகப் போகிறார் என்று ஒரு வதந்தி! 'அதெல்லாம் தப்பான செய்தி. நான் மத்திய மந்திரியானாலும் இதே தெருவுல தான் குடியிருப்பேன்’ என்று அவர் எங்களிடம் சொன்னது மட்டுமல்ல... அப்படியே செய்தும் காட்டினார். எங்க வீதியில், மற்ற குடித்தனக்காரங்க டூ வீலர்கூட நிறுத்தக்கூடாதுன்னு போலீஸ் ஆர்டர் போட்டது. இது அமைச்சரின் கவனத்துக்குப் போன தும், 'அப்படியெல்லாம் மற்றவர் களுக்கு இடைஞ்சல் செய்யக் கூடாது’னு போலீஸைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு!''- அமைச்சர் வசித்த அதே சுப்பிரமணிய வீதியில் வசிப் பவர்கள் சோமுவைப் பற்றி இப்ப டிச் சொன்னார்கள்.

- கண்பத்

நூறு வயதாகும் முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தாவுக்கு பாரதத்தின் உயரிய விருதான 'பாரத ரத்னா’ விருதை அளித்துக் கௌரவித்தது இந்திய அரசு. அப்போது விகடன் வெளியிட்ட நேரடி ரிப்போர்ட்டிலிருந்து சில பகுதிகள் இங்கே...

நந்தா விளக்கு!

காத்மா காந்தியின் நல்ல நண்பர், சுதந்திரப் போருக்காகவே தனது முதல் பகுதி வாழ்க்கையைக் கழித் தவர், இரண்டு முறை இந்தியப் பிரதமராக இருந்தவர்...

இந்த ஜூலை 4-ம் தேதி தனது 100-வது வயதில் நுழைந்திருக்கும் அந்தச் சாதனை மனிதர் குல்சாரிலால் நந்தா. கட்டிலில் கண்மூடி படுத்திருந் தார். கழுத்து வரை ஒரு போர்வை யால் மூடப்பட்டிருந்தது. இரண்டு ஆண் நர்ஸுகள் அவரருகே உட் கார்ந்திருந்தனர். பக்கத்தில் ஒரு சின்ன டேபிளில் மருந்துகள்  வைக் கப்பட்டிருந்தன. மருத்துவக் கருவி களும் இருந்தன.

காலப்பெட்டகம்

இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னாவை நந்தாவுக்கு (இப் போதுதான்!) வழங்கிப் பெருமை அடைந்திருக்கிறது இந்திய அரசு.

பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் டில் பிறந்த நந்தா, 1964-ல் நேரு இறந்தபோதும், 1966-ல் லால்பக தூர் சாஸ்திரி இறந்தபோதும் தற் காலிகப் பிரதமராக இருந்தார். நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மூன்று பிரதமர்களிடமும் அமைச்ச ராக இருந்தவர். தொழிலாளர் துறை, வேலை வாய்ப்புத்துறை, திட்டக் கமிஷன், உள்துறை, ரயில்வே என்று முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

இப்போது அகமதாபாத்தில், 76 வயது மகள் புஷ்பாபென் நாயக்கின் கவனிப்பில் இருக்கிறார் நந்தா.நவ்ரங்புராவிலுள்ள இந்துக் காலனி யில் வீடு. முன்னாள் பிரதமரின் வீடு என்பதைவிட, பழுத்த தியாகி யின் வீடு என்ற மரியாதைதான் மக்களுக்கு. செக்யூரிட்டி ஏதும் கிடையாது.

கடந்த சில மாதங்களாகவே நினைவில்லாமல்தான் இருக்கிறார் நந்தா. டாக்டர்கள் தினமும் காலை யும் மாலையும் 'செக்’ செய்கின்றனர். உணவுகூட ட்யூப் மூலமாகத்தான் கொடுக்கப்படுகிறது.

புஷ்பாபென் ஒரு டாக்டர். 40 வருடங்களாக டெக்ஸ்டைல் யூனி யன் மருத்துவமனையில் இலவச மாக வேலை செய்து ரிட்டையரான பிறகு, இப்போது பிரைவேட்டாக க்ளினிக் வைத்துள்ளார்.

''அப்பா விருதுகளுக்காக உழைத் தவர் கிடையாது. இதற்கு முன்பு பலரும் விருதுகள் கொடுக்க வந்த போது மறுத்துவிட்டார். இப்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய பாரத ரத்னா கிடைத்திருப்பது இவருக்கு இதுவரை தெரியாது...'' என்றார் புஷ்பாபென்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950-ம் ஆண்டில், முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரித் தவரே நந்தாதான்.

நந்தா மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது, அகமதாபாத்திலிருந்து பேரப் பசங்கள் டெல்லி வந்திருந் தனர். நாடாளுமன்றத்திலிருந்து வீட்டுக்கு வந்த நந்தாவிடம் பேரன், ''தாத்தா! நான் போட்ட டிராயிங் எப்படியிருக்கு, சொல்லு?'' என்று ஒரு பேப்பரை நந்தாவிடம் கொடுக்க, ''அடடே! அருமையான டிராயிங்..!'' என்று பேரனைப் பாராட்டிவிட்டு, ''அது சரி, இந்த பேப்பரும் பென் சிலும் உனக்கு எங்கிருந்து கிடைத் தது?'' என்று கேட்டார் நந்தா. ''உங்க ஆபீஸிலிருந்துதான் கிடைத் தது தாத்தா'' என்று பேரன் சொல்ல, ''அப்படியா, யார் கொடுத்தார்கள்?'' என்று மீண்டும் கேட்டார். ''உங்கள் செக்ரெட்டரிதான் எடுத்துக் கொடுத் தார்'' என்றான் பேரன்.

அடுத்த நிமிடம் செக்ரெட்டரி யைக் கூப்பிட்டார். ''இந்த பேப்பர் அரசாங்கப் பணத்தில் வாங்கியது. மக்கள் சொத்து. நம்முடைய சொந்த வேலைகளுக்கு இதைப் பயன்படுத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது'' என்று சொல்லி, பேரனிடம் மீத மிருந்த பேப்பரையும் பென்சிலையும் செக்ரெட்டரியிடம் திருப்பிக் கொடுத் தார். டிரைவரைக் கூப்பிட்டுப் பணம் கொடுத்து, 'பேப்பர் பென்சில் வாங்கி வா’ என்று கடைக்கு அனுப்பி வைத்தார்.

- புஷ்பாபென் இந்த நிகழ்ச்சியை நம்மிடம் விவரிக்க, இன்றைய அரசியலும், அணிவகுத்து நிற்கும் ஊழல் புகார்களும் மனதில் ஓடி ரணம் உண்டாக்கின.

முன்னாள் பிரதமர்களுக்கு அர சாங்கச் செலவில் தனி வீடு, செக்யூ ரிட்டி, வெளியூர்களுக்குப் போக இலவச விமான வசதி என்று நிறைய சலுகைகளை அறிவித்தார் பிரதமர் தேவகவுடா. ''இப்போது மக்களுக்கு நான் சேவை செய்ய வில்லை. ஓய்வு பெற்றுவிட்டேன். வரிப்பணத்தில் எப்படி சந்தோஷம் கொண்டாட முடியும்? எனக்கு எவ் வித சலுகையும் தேவையில்லை'' என்று கவுடாவுக்கு கடிதம் எழுதி விட்டார் நந்தா.

- டெல்லி ஸ்ரீதர்

இசையரசி எம்.எஸ்.சுப்புலட் சுமியின் கணவர் சதாசிவம் இந்த ஆண்டு மறைந்தார்.

சதாசிவம்

காதி விற்பனை செய்ய காங்கி ரஸ் மாநாடுகளுக்குச் செல்வார் சதாசிவம். அதேபோல் இமயமலைப் பகுதிகளுக்கும் அவர் செல்வதுண்டு. அங்கு திரிந்துகொண்டிருந்த ஒரு சாது, ''உன் வாழ்க்கையில் அபூர்வ மான பெண்மணி ஒருவர் இணை யப் போகிறார்...'' என்று ஆருடம் சொன்னது பலித்தது.

ஜூலை 10, 1940- எம்.எஸ்-ஸை சதாசிவம் மணந்த நாள்.

மகளிர் விழா ஒன்றில், சௌகார் ஜானகி சொன்னார்...

''எம்.எஸ். அவர்களுக்கு சதாசிவம் கணவராக வாய்த்ததுபோல் எல்லா பெண்களுக்கும் கணவர் வாய்த்தி ருந்தால் 'கீஷீனீமீஸீ’s லிவீதீ’ பற்றி பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்!''

- 'குறையன்றுமில்லை’ தொகுப்பிலிருந்து.

ஜனாதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.நாராயணன். அவரை வரவேற்றுத் தலையங்கமும், கட்டுரைகளும் வெளியிட்டிருக்கிறது விகடன்.

டாக்டர் அப்துல்கலாமுக்கு பாரத ரத்னா விருது அளித்துக் கௌரவித்தது இந்திய அரசு.

சகலகலாவல்லவர்!

விண்வெளி ஆராய்ச்சி, செயற் கைக்கோள் விஞ்ஞானம், ஏவு கணைத் தயாரிப்பு என்று முக்கிய மான பல துறைகளில் இன்று இந்தியா நெஞ்சை நிமிர்த்திக்கொள் ளும் அளவு வளர்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம், 'பாரத ரத்னா’ விருது பெறும் டாக்டர் அப்துல் கலாம். இப்போது ராணுவ அமைச் சகத்தில் ஆலோசகர்.

தனது வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமானவர்கள் என இரண்டு பேரைக் குறிப்பிடுகிறார் அப்துல் கலாம். ஒருவர், இவருடைய பள்ளி ஆசிரியர். இன்னொருவர், பாண்ட்லே! சென்னை, எம்.ஐ.டி- யில் இவருக்கு கிளாஸ் எடுத்தவர்!

தற்போது எம்.ஐ.டி-யிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட பாண்ட்லே, தன் மாணவர் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை, 'இந்தியன் ஏவியேஷன்’ என்ற அறிவியல் மாத இதழில் எழுதப்போகிறார்!

காலப்பெட்டகம்

''அப்துல்கலாமுக்குச் சொந்த ஊர் ராமேஸ்வரம். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்தான். எம்.ஐ.டி-யில் சேர அவருக்கு ஸீட் கிடைத்த சமயம்... காலேஜில் சேரு வதற்கு 1,200 ரூபாய் கட்டவேண் டும். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை! அப்துல்கலாமின் அப்பா, ஒரு சாதாரண இமாம் (மதப் போத கர்). அவரிடம் பணம் இல்லை. கலாமின் சகோதரிதான் தன் நகை களை அடகு வைத்துப் பணம் புரட்டி, எம்.ஐ.டி-யில் சேர்த்து விட்டார்!'' என்கிறார் பாண்ட்லே.

எப்போது சென்னைக்கு வந்தா லும் பழைய புரொபசர்கள், உடன் படித்த மாணவர்கள் என எல்லோ ருக்கும் போன் செய்வாராம் அப்துல் கலாம். நேரம் இருந்தால் வீட்டுக்கும் வருவதுண்டாம்.

காலப்பெட்டகம்

''அப்போதெல்லாம், தான் ஈடுபட் டிருக்கும் ப்ராஜெக்ட்ஸ் பற்றித்தான் விவாதிப்பார். அவருக்குத் தெரிந்தது, படித்தது, ரசிப்பது எல்லாமே வேலைதான்! இப்படி சப்ஜெக்டில் இருந்த அதிக ஈடுபாடு, அவரைக்  கல்யாணம், குழந்தை என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவே விட வில்லை. அதனால், நாங்கள்கூட 'ராக்கெட்டையே கல்யாணம் செய்து கொண்டார்’ என்று அவரைக் கேலி செய்வோம்!'' என்கிறார் பாண்ட்லே.

''அப்துல்கலாம் முஸ்லிமாக இருந் தாலும் சுத்த சைவம். சிகரெட், மது என்ற எந்தக் கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது. அதனால் நண்பர்கள் வட்டத்தில், 'கலாம் ஐயங்கார்’ என்று செல்லமாக இவ ரைக் கூப்பிடுவார்களாம்.

''கலாம் தமிழில் கட்டுரை, கவிதை எழுதுவார். அருமையாக வீணை வாசிப்பார். குறள், நாலாயிர திவ் வியப்பிரபந்தம்லாம் மனப்பாடமா சொல்வார். கீதை தெரியும்.''

-இது, பாண்ட்லேயின் பாராட்டுரை!

- தயாமலர்

மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையானது இந்த ஆண்டில் தான்!

ஜோல்னா கவுன்சிலர்!

காலப்பெட்டகம்

மீசைகூட முளைக்காத முகம்; கொஞ்சம் அலட்சியமான பார்வை; ஒரு மாபாதகச் செயலைச் செய்த சுவடே இல்லாமல் மிகச் சாதாரண மாக நிற்கிறான் முருகன். மதுரை கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்ய அமர்த்தப்பட்ட கூலிப்படை இளைஞன்.

மதுரையில் ரௌடி நண்பர்கள், அராஜகப் பேர்வழிகள் மத்தியில் இந்தச் சின்னப் பையன் பிரபலம். முருகனுக்கு 'சொங்கு’ என்று கார ணம் தெரியாத ஒரு பட்டப்பெயர் இருக்கிறது!

கொலை நடந்த தினத்தன்று அரி வாளும் கையுமாக முத்துராமலிங்கம் கோஷ்டியோடு வேறொரு இடத்தில் காத்திருந்த முருகன்தான் லீலாவதி யின் நடவடிக்கையைக் கண்காணித் திருக்கிறான். காலையில் தனது வீட்டைவிட்டு லீலாவதி வெளியே வந்ததும், முருகன் தனது சகாக்க ளிடம் லீலாவதி வருவதைச் சொல்லி யிருக்கிறான். அதன்பின், அந்தக் கொலைவெறிக் கும்பல் அரிவா ளோடு தெருவுக்குள் நுழைந்து லீலாவதியைச் சரமாரியாக வெட்டிச் சாய்க்க, ரியாக்ஷன் எதுவும் காட் டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் முருகன். அதன்பின், அந்தக் கும்பலோடு தெருவில் சிதறி ஓடியவர்களை விலக்கிவிட்டுக் கைதேர்ந்த ஒரு தாதாவாக ஸ்லோமோஷனில் நடந்து போயிருக்கிறான்.

பதினெட்டே வயதில் கொலை செய்யுமளவுக்கு மனசு கடினப்பட் டுப் போயிருக்கும் முருகன், தாய்- தந்தை இறந்துபோனதும், கண வனை இழந்து தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தியோடு ஒட் டிக்கொண்டான். பள்ளி செல்லும் பருவத்தில்கூட பள்ளிக்குச் செல் லாமல் தன்னைப் போலவே சீரழிந்து திரிந்த சிறுவர்களின் துணையோடு தியேட்டர்களில் இரவுக் காட்சிகளில் அசந்து தூங்கும் பக்கத்து ஸீட்காரர்களின் பர்ஸை அடிப்பதுதான் முருகனின் ஆரம்ப அத்தியாயம், அவனியாபுரம், வில்லாபுரம் பகுதி ரௌடிக் கும்பலுக்கு எடுபிடியாக இருந்து பிராந்தி வாங்கிக் கொடுப்பது, தகவல்கள் சுமந்து செல்வது என்று அந்தக் கும்பலோடு இணக்கமாக இருக்கவும், அந்த ரௌடிக் கும்பல் முருகனைத் தங்களில் ஒருவனாகத் தத்து எடுத்துக்கொண்டிருக்கிறது.

தண்ணீர் லாரிக்கு வீடு வீடாகப் பணம் வசூலிப்பது, ரேஷன் கடை கும்பலைக் கட்டுப்படுத்துவது, மாமூல் வாங்கும் கோஷ்டியோடு கடைகளுக்குச் சென்று 'ஹூம்! யார்ராவன்..?’ என்று நாக்கைத் துருத்தி, தொடையைத் தட்டி வசூல் செய்வது என்று ஒரு சமூக விரோதியாக மாறியிருக்கிறான். ஒரு குவார்ட்டர் வாங்கிக் கொடுத்தால், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வானாம் முருகன்.

லீலாவதி குடும்பத்து நிலை பரிதாபத்தின் உச்சம்! வெறும் பத் துக்குப் பத்து அறை; சமையல், படுக்கை, வரவேற்பு என்று அத்த னையும் அந்த வீட்டின் ஒரே அறைக்குள்! இருவர் மட்டும் உட்கார்ந்து பேசக்கூடிய இடம் தவிர்த்து, மீதமுள்ள சொற்ப இடத்தையும் துணி நெய்யும் தறி அடைத்து நிற்கிறது. 120 ரூபாய் மாத வாடகையில், இந்த அறையில் தான் குடித்தனம் நடத்தியிருக்கிறார் லீலாவதி. கவுன்சிலர் வீடு என்ற அடைமொழியைத் தவிர, வேறு எந்த வசதிகளும் இல்லாத அந்த வீட்டில்தான் கடந்த 20 வருடங்களாக அவர் வாழ்ந்து வந்திருக்கிறார்.

பகல் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகள், போராட்டங்கள் என்று சுழன்றுவிட்டு, இரவு நேரத்தில் வீட்டில் குடும்பத் தொழி லாக இருக்கும் நெசவு வேலையில் ஈடுபடுவார் லீலாவதி.

தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப் பை. அந்தப் பைக்குள் பகுதி மக்கள் எழுதிக் கொடுத்த புகார்கள், பிரச்னைகளுக்கு அதிகாரிகள் கொடுத்த விளக்கம் என கத்தை கத்தையாக பேப்பர்கள்..!

லீலாவதிக்கு அந்தப் பகுதி மக்கள் வைத்திருந்த செல்லப் பெயர் - 'ஜோல்னா கவுன்சிலர்’!

- பாலா

காலப்பெட்டகம்

'மனம் மலரட்டும்’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

 

இந்த ஆண்டு ஜனவரியில் விகடன் டாட் காம் தொடங்கப்பட்டு, இன்டர்நெட்டிலும் வெளியாகத் தொடங்கியுள்ளது விகடன்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் மீண்டும் மாடி பஸ் ஓடத் தொடங்கியது. இது குறித்துக் கட்டுரைகளும், ஜோக்குகளும் விகடனில் வெளியாகியுள்ளன.

அவதார புருஷனைத் தொடர்ந்து, விகடனில் வாலியின் 'பாண்டவர் பூமி’ புதுக் கவிதைக் காவியம் தொடங்கியது.

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு இது. அதைச் சிறப்பிக்கும் வகையில் 17.8.97 இதழை இரண்டு புத்தகங்களாக வெளியிட்டுள்ளது விகடன். 'இது ஒரு பொன் நாள்!’ என்னும் தலைப்பில் தலையங்கம் தீட்டி, சுதந்திரம் தொடர்பான கட்டுரைகள் பலவற்றைப் பிரசுரித்துள்ளது.

காலப்பெட்டகம்

பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது இந்த ஆண்டுதான்!