மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind... - 21

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஓவியங்கள் : மணி, பாரதிராஜா

மூன்றாம் தமிழ் வளர்த்த மூவர்

 ##~##

திருவரங்கம் என்னும்

திவ்விய க்ஷேத்திரத்தில் -

உத்தர வீதி; சித்திரை வீதியில் உள்ள என்னொத்த பிராமணக் குடும்பத்துப் பையன்கள்-

S.S.L.C. முடித்தவுடன் - ஒன்று காலேஜுக்குப் போவார்கள்; அல்லது Short hand - Type writing படித்துவிட்டு -

ஏதேனும் ஒரு வடநாட்டுக் கம்பெனியில் Stenographer ஆகி -

அடுத்த வருஷமே கல்யாணமும் செய்துகொண்டு -

'இதுதான் நமக்கு இறைவன் இட்டது’ என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள்!

நானோ - S.S.L.C. முடித்ததும்; ஏன்; அதற்கு முன்பிருந்தும் நாடகம் எழுதுவது போடுவது என்றெல்லாம் -

அக்கிரஹார ஆசாரத்திற்கு, ஆகாத காரியங்களில் இறங்கினேன்!

நினைவு நாடாக்கள் ஒரு rewind... - 21

 மர்லின் மன்றோ நடித்த 'Seven Years Itch’ போல் - நாடக அரிப்பு என் நாடி நரம்புகளில் அப்பிக்கிடந்தது.

இது வியப்பல்ல; திருச்சி மண்ணுக்கும் நாடகங்களுக்கும் - ஒரு சொந்தம் இருந்தது!

நாடகக்காரர்களைக் 'கூத்தாடிகள்’ என்று நக்கல் செய்துகொண்டிருந்த -

இருபதாம் நூற்றாண்டின் இருபது, முப்பது களில் -

பெரிய கனவான்களும் தனவான்களும் பயில் முறை நாடகக் குழுவைத் தோற்றுவித்துத் தாங்களே நடிக்கவும் செய்தார்கள்.

மூன்றாம் தமிழை முயன்று முன் நின்று காத்த மூவர் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்!

மூலக் கச்சத்தோடும் முண்டாசோடும் -

அவர் திருச்சி - தென்னூர் வீதியில் சைக்கிளில் வருவதை நான் என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.

அவர் - தென்னக ரயில்வேயில் வெள்ளைக்காரன் காலத்தில் - மிகப் பெரிய பதவியில் இருந்தவர்.

அவர் நாடகக் குழுவில்தான், தனது பிள்ளைப் பிராயத்தில் ஒருவர் 'அரிச்சந்திரா’ நாடகத்தில் லோகிதாசன் வேடம் ஏற்று -

பின், வையம் வியப்பில் வாய்பிளக்க - விசும்பளவு வளர்ந்தார் வெள்ளித் திரையில்!

அந்த ரயில்வே அதிகாரியும் - ஒரு திரைப்படத்தில் கதாநாயகியின் கணவராக நடித்துப் பரபரப்பாக அற்றை நாளில் பேசப்பட்டவர்!

வரைப்போல் - இன்னொருவர், திருச்சி யில் மிகப் பெரிய டாக்டர்; Highly Celebrated Surgeon!

பயில் முறை நாடகங்களில் பங்கேற்று நடித்தவர்; அவர்தான் -

பின்னாளில் - திரு.எம்.ஜி.ஆர். சிவனாக வந்து ருத்ரதாண்டவம் ஆடிய, ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த 'ஸ்ரீமுருகன்’ படத்தில் சூரபத்மனாக நடித்தவர்!

நினைவு நாடாக்கள் ஒரு rewind... - 21

ற்றொருவர் -

திருச்சி தேசியக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அதி அற்புதமாக நடித்தவர்.

திரு.கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் 'அந்தமான் கைதி’ நாடகத்தில்.

வில்லன் பாத்திரம் ஏற்று விளாசித் தள்ளியவர். அவரைச் சுற்றி, மாணவர் கூட்டம் எப்பவும் இருக்கும்; Yes! He was a Hero Amidst Students!

ஆனால், அந்தப் பேராசிரியர் படத்தில் நடிக்கவில்லை; அவரது நெருங்கிய உறவினர் பெரிய படாதிபதியாகவும்; இயக்குநராகவும்; விளங்கி -

எம்.ஜி.ஆர்; சிவாஜி இருவராலும் வெகுவாக மதிக்கப் பெற்றவர்!

த்தகு மூவரை ஈன்று புறந்தந்த திருச்சி மண், இன்னும் சிலரையும் ஈந்து உவந்துஇருக்கிறது!

பிரபல நட்சத்திரமாகப் பிறங்கிய செல்வி ஜெயலலிதாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கம்தான்!

அகில இந்திய நட்சத்திரமாக விளங்கி இந்த சினிமாக்களில் இசைகொண்ட திருமதி ஹேமமாலினி, திருச்சியிலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ள ஜீயபுரத்தைச் சேர்ந்தவர்!

நிறையப் படித்திருந்தும்; நிறையப் படங்களில் நடித்திருந்தும் - 'நாடகம்; நாடகம்’ என்று, இன்றளவும் -

மூன்றாம் தமிழின் பால் மூண்ட காதலை முனை முறியாது காத்து நிற்கும், என் இனிய இளவல் திரு.Y.G.மகேந்திரனின் தாயார் -

வைணவ சித்தாந்தத்தை வழுவறக் கற்றவர்; கணக்கற்ற சின்னஞ்சிறார்களின் கல்விக் கண்ணைத் திறந்தவர் - கலா ரசிகர்...

பத்மஸ்ரீ Y.G.P.ராஜலட்சுமி அவர்கள், தன் வேர்களைத் திருவரங்கத்தில் கொண்டவர்தான்!

ன் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஓர் இளைஞர் இருந்தார்; அவர் பெயர் திரு.கிருஷ்ணஸ்வாமி.

அந்த கிருஷ்ணஸ்வாமி கதாநாயகனாக நடித்து நாற்பதுகளில் வந்த படம்தான் -

'ஆனந்தன்;

அல்லது அக்கினி புராண மகிமை!’

- இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் புகழ்வாய்ந்த கவிஞர் திரு.ச.து.சு.யோகியார்!

ன் வீட்டுக்கு எதிர் வரிசையில் ஒரு பிரபல வக்கீல் இருந்தார். அவரது மகள் மிக நன்றாகப் பாடுவார். பெயர் திருமதி.எம்.எஸ்.கமலா.

அந்த கமலாவைப் பார்க்க, ஒரு சிலோன்காரர் - அப்போது அவர் திருச்சி St.Joseph College -ல் படித்துக்கொண்டிருந்தவர் - ஒரு நாடக Script  உடன் வந்து, திருச்சி வானொலியில் ஒலிபரப்பாக இருக்கும் அந்த நாடகத்தில், கமலா அவர்களைக் கதாநாயகியாகப் பாடி நடிக்க வேண்டினார்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind... - 21

அந்த நாடகம், அந்த நாளில் ஒலிபரப்பான போது -

தமிழ்நாடே காது கொடுத்துக் கேட்டது!

காரணம் - புகழ்வாய்ந்த மாபெரும் திரைப்பட நட்சத்திரம் - அந்த நாடகத்தில் கதாநாயகனாகப் பாடி நடித்தார்; அவர் நடித்த ஒரே வானொலி நாடகம் அதுதான்!

அவர்தான் - ஏழிசை மன்னர் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்! நாடகத்தின் பெயர் 'பில்ஹணன்’!

நாடகத்தை எழுதிய சிலோன்கார இளைஞர் - திரு.ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள்!

பின்னாளில் பிரபல திரைப்பட இயக்கு நராக விளங்கிய இவரிடம்தான், கலைஞர் அவர்கள் உதவியாளராகச் சேர்ந்தார்!

ன்னும் இதுபோல் ஸ்ரீரங்கத்து மண்ணின் கீர்த்தியைச் சொல்லலாம். சொல்லச் சொல்ல எஞ்சி நிற்கும் சொல்லெலாம்!

பின் குறிப்பு;

தென்னக ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருந்து நாடகம் நடத்தியவர் திரு.F.G. நடேசய்யர்!

இவர் நடத்திய 'அரிச்சந்திரா’ நாடகத்தில் 'லோகிதாச’னாக அறிமுகமானவர்தான் திருமதி.எம்.கே.டி.பாகவதர்!

இந்த நடேசய்யர் கதாநாயகனாக நடித்த படம் 'சேவாசதனம்!’; கதாநாயகியாக, அந்தப் படத்தில் அறிமுகமானவர் -

பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்!

நாடகப் பிரியரான F.G.நடேசய்யரின் பேரன்தான் - திரு.ஜெயராமன். என் இனிய சகோதரி பிரபலப் பாடகி திருமதி வாணி ஜெயராமின் கணவர்!

திருச்சியில் பெரிய டாக்டராக இருந்து - 'ஸ்ரீமுருகன்’ படத்தில், சூரபத்மனாக நடித்தவர் -

டாக்டர் திரு.O.R.பாலு அவர்கள்!

ஷேக்ஸ்பியர் நடிகராக விளங்கிய கல்லூரிப் பேராசிரியர் திரு.C.S.கமலபதி அவர்கள்; அவரது நெருங்கிய உறவினர்தான்...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் திரு.B.R.பந்துலு அவர்கள்!

வர்களை எல்லாம் பார்த்துதான் என்னுள் நாடகப் பொறி கனன்றது; அந்தப் பொறியை ஊதிக் கனல் வளர்த்தது -

கலைஞரின் படம் 'மருதநாட்டு இளவரசி! அவ்வளவுதான்; அதுகாறும் படம் வரைந்து கொண்டிருந்த நான் -

தூரிகையை விட்டேன்; காரிகையைத் தொட்டேன்!

காரிகை என்பது கன்னியல்ல; கன்னித் தமிழ் இலக்கணம்!

- சுழலும்...