Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 4

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

அவனைக் கருவுற்ற நாளில் இருந்து அம்மா கொஞ்சம் கொஞ்ச மாக எனக்கு அந்நியமாகிப்போனாள்.

தம்பி

'தம்பி என்பவன் அண்ணனுக்காகத் தன் இன்பங்களைத் தொலைத்தவன்!’
ஜான் ஆஸ்டின்

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் என நினைத்து, என் தோளில் தொற்றிக்கொண்ட வேதாளம் கட்டளை இட்டது. ''என் கேள்விகளைக் கவனமாகக் கேட்டு யோசித்து, தெளிவாகப் பதில் சொல். தவறாகச் சொன்னால், உன் தலை சுக்கு நூறாகச் சிதறிவிடும்!''

நான் பதில் சொல்ல ஆயத்தமானேன்.

வேதாளம் கேட்டது. ''தம்பி என்று சொன்னவுடன் உன் மனதில் உடனே வரும் பிம்பம் என்ன?''

அணிலாடும் முன்றில்!
அணிலாடும் முன்றில்!

''நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும் என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால், என் பசி அறிந்தவன். என் நாணயத்தின் இன் னொரு பக்கம். துக்கத்தில் எனைத் தாங்கும் தூண். சக ஊன்!''

''முதன்முதலில் உன் தம்பியைப் பார்த்த தருணம் ஞாபகம் உள்ளதா?''

''கலங்கலாக நினைவில் உள்ளது. மருத்துவமனையில் இருந்து அம்மாவை அழைத்து வந்தார்கள். அறை எங்கும் மருந்து வாசனை. கட்டிலில் ஒரு பழைய சேலையைச் சுற்றிக்கொண்டு அம்மாவுக்குப் பக்கத்தில் சிணுங்கிக்கொண்டு இருந்தான். முகம் எங்கும் ரோஜாப் பூ போல ரோஸ் கலரில் இருந்தது. ஆங்காங்கே கொசுக்கள் கடித்து அநியாயத்துக்கு சிவந்து இருந்தான்.''

''அப்போது உன் மனதில் என்ன உணர்வு தோன்றியது?''

''அவனைக் கருவுற்ற நாளில் இருந்து அம்மா கொஞ்சம் கொஞ்ச மாக எனக்கு அந்நியமாகிப்போனாள். முன்புபோல், அம்மாவின் மடியில் சாய்ந்து கதை கேட்கும் தருணங்கள் குறைந்துகொண்டே வந்தன. அம்மாவின் அருகில் சென்றால், வெளியே போய் விளையாடும்படி யாராவது விரட்டிக்கொண்டே இருந்தார்கள். சாலையில் கண்டுஎடுத்த பறவை இறகின் ஆச்சர்யம்; கல் தடுக்கி நகம் கிழிந்த வலி; பெருமாள் கோயில் யானை வீதி வழியாகப் பாகனுடன் கடந்து சென்றது என எதையுமே அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

ஆகவே, அவன் பிறந்தபோது முதலில் அவன் மீது கோபம் கோபமாக வந்தது. தம்பி என்பவன் எனக்கும் அம்மாவுக்குமான இடைவெளியைக் கையில் ஏந்திக்கொண்டு வந்தவன் என்ற எண்ணம் அப்போது மேலோங்கி இருந்தது. அருகில் சென்றால், பிஞ்சுக் கண்களைச் சிமிட்டி என்னைப் பார்த்துச் சிரிப்பான். காற்றில் கை நீட்டி தொட எத்தனிப்பான். ஒருநாள் யாரும் அறியாமல் அந்தக் கையைப் பிடித்து லேசாகக் கிள்ளினேன். அதிர்ந்து அழுதவன் என் பக்கமாகத் திரும்பி, தன்னிடம் இருந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தினான். என் சட்டை எங்கும் நனைந்தது.''

''தம்பி, தோழன் ஆவதற்கு முந்தைய கணங்கள் எப்படி இருந்தன?''

''எல்லா அண்ணன்-தம்பிகளைப்போலவே நாங்களும் சண்டை போட்டுக்கொண்டும்; சமாதானம் ஆகிக்கொண்டும் வளர்ந்தோம். ஆட் காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்று சேர்த்து வளையமாக்கி, காயா... பழமா? கேட்காத நாட்கள் இல்லை. எனக்குப் பிடித்த குழித்தட்டு; நான் உறங்கும் பூப்போட்ட தலையணை; பூமிப் பந்தை மையமாக்கி ஒற்றைக்காலில் சுற்றும் பூண் வைத்த பம்பரம்; மர பெஞ்ச்சின் காலை உடைத்து செதுக்கிச் செய்த கிரிக்கெட் மட்டை; சைக்கிள் டியூபில் செய்த பந்து என என் ப்ரியங்களின் மேல் அவன் பார்வை படுகிறபோது எல்லாம் சண்டை கொழுந்துவிட்டு எரியும். ஆயினும், அவனை நான் அடித்ததைவிட, என்னை அவன் அடித்ததே அதிகம். தைரியத்தில் அவன் தேர்ந்தவன்.''

''எல்லாத் தம்பிகளும் அண்ணன்களைவிட முன் கோபிகளாகவும்; தைரியசாலிகளாகவும் இருப்பதன் காரணங்கள் அறிவாயா?''

அண்ணனின் நிழலில் வளர்வதை எந்தத் தம்பியும் விரும்புவது இல்லை. அண்ணனின் சின்னதாகிப் போன பழைய சட்டைகளை அணிய நேரும்போது எல்லாம் தம்பியும் சின்னதாகிப்போகிறான். ''உங்க அண்ணன் சட்டைதானே இது? போன வருஷம் ஏப்ரல் ஃபூலுக்கு வாழைச் சாறு கலந்து, நான் அடிச்ச இங்க் கறை அப்படியே இருக்கு பாரு'' என்று அண்ணனின் நண்பன் வழியில் நிறுத்தி விசாரிக்கையில், சின்னதான தம்பியின் உருவம் புள்ளியாகித் தேய்கிறது.

ஆங்காங்கே குட்டி போடாமல் ஏமாற்றிய மயிலிறகுடன், அட்டை கிழிந்து மௌன்ட்பேட்டன் 'பிரபு’ என்பதை அடித்து, மௌன்ட்பேட்டன் 'அடிமை’ என எழுதப்பட்ட அண்ணனின் பழைய வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து தன் வரலாற்றைக் கற்றுக்கொள்ள எந்தத் தம்பி யும் விரும்புவது இல்லை. நேருவின் முகத்தில் மீசையும்; காந்தியின் நெற்றியில் நாமமும் வரையப்பட்ட அந்தப் புத்தகங்கள், தம்பியின் கற்பனைக்கு இடம் கொடாமல் அவனைப் பெருத்த சவாலின் முன் நிறுத்துகின்றன. அண்ணனின் சாயல், வாழ்க்கை முழுக்கத் துரத்திக்கொண்டே இருப்பதன் வலி தம்பியாக இருந்து பார்த்தால்தான் தெரியும். ஆகவே, தம்பிகள் முன்கோபத்திடமும் அதன் விளை வான முரட்டுத்தனத்திடமும் தங்களை ஒப்படைக்கிறார்கள்.''

''உன் தம்பி என்று உன் தம்பியை நீ உணர்ந்த நிமிடம் எது?''

''கோடை விடுமுறையில் ஒருநாள் நண்பனின் வீட்டில் கேரம்போர்டு விளையாடிவிட்டு வந்துகொண்டு இருக்கிறேன். தெரு முனையில், என் தம்பியை நாலைந்து பெரிய பையன்கள் சுற்றி வளைத்து சண்டை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எங்கே இருந்து எனக்கு ஆவேசம் வந்தது என்பதை நான் அறியேன். ஒரு மரக் கிளையை ஒடித்து, அந்தக் கம்பால் அவர்களைத் துவைத்து எடுத்துவிட்டேன். அலறியபடி ஓடிவிட்டார்கள். 'அண்ணா’ என்று தேம்பி அழுதபடி தம்பி என் கைகளைப் பிடித்துக்கொண்டான். இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக வீட்டுக்கு வந்தோம். அந்த மௌனத்துக்குப் பெயர் பாசம் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது.''

''தம்பி, தோழனானது எப்போது?''

அணிலாடும் முன்றில்! - 4

''அவரவர் கனவுடன் வளர்ந்தோம். வயதுஎன்னும் புகைவண்டி பால்யத்தின் தண்டவாளங்களைக் கடந்து, எங்களை வாலிபத்துக் குள் அழைத்துச் சென்றன. வேலையும் தேடலும் எங்களை வேறு வேறு திசையில் நிறுத்தின. என் திருமணத்துக்குப் பிறகு ஒருநாள், 'அண்ணா, உன்கிட்ட பேசணும்’ என்றான்.

'என்ன?’ என்றேன்.

'நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன். நீதான் வீட்ல சொல்லணும்!’ என்றான்.

அண்ணன்கள் அப்பாவாகும் தருணத்தை அன்று உணர்ந்தேன்.

மதுரைக்குப் பக்கத்தில் அழகர் கோவிலில் அவன் திருமணம், ஒரு சில உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. எப்படி எல்லாம் நடக்க வேண்டிய திருமணம் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டு இருந்தது. தாலி கட்டிய பிறகு காலில் விழுகிறார்கள். பதறியபடி, 'நல்லா இருங்க!’ என்று தம்பியைத் தொட்டு எழுப்பு கிறேன்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் தம்பியைத் தொடுகிறேன். 'என் தம்பியைப் பத்திரமாப் பாத்துக்கம்மா!’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஏன் இந்தக் கண்கள் எதற்கெடுத் தாலும் கலங்குகின்றன? கோயில் மண்டபத்தில் அன்று மூன்று திருமணங்கள் நடந்தன. வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பந்திகள். பேருக்கு கை நனைத்துவிட்டு, சிறு குன்றின் மரவெளியில் நடந்தேன். அந்த மரவெளிகள் என் கால்களைப் பால்ய காலத்துக்குள் கூட்டிச் சென்றன. திரும்பி வரும்போது,தம்பி ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான். அந்தப் பெண் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டு இருந்தது.''

''திருமணத்துக்குப் பிறகு அண்ணன்- தம்பி உறவின் நிலை என்ன?''

''எந்தத் திசையில் வீசினாலும் காற்றின் ஈரம் காற்றில் இருப்பதைப்போல, பிரிந்திருந்தும் சேர்ந்திருப்பதுதானே சகோதரத்துவம். நான் வாழும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் எனக்காக இன்னோர் இதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இவ்விடமும் அப்படியே!''

அணிலாடும் முன்றில்! - 4

''மீண்டும் கேட்கிறேன். தம்பி என்றவுடன் உன் மனதில் உடனே வரும் பிம்பம் என்ன?''

''கூறியது கூறலுக்கு மன்னிக்கவும். நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ. என் உதிரத்தின் பங்காளி. வேற்றுருவன் ஆனாலும், என் மாற்றுருவன். நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன். ஆதலால் என் பசி அறிந்தவன். துக்கத்தில் என்னைத் தாங்கும் தூண். சக ஊன்!''

என் பதில்களில் திருப்தி அடைந்த வேதாளம், ''தம்பி உடையவன் படைக்கு அஞ்சான்'' என்றபடி மீண்டும் முருங்கை மரத்தை நோக்கிப் பறந்தது!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan