விகடன் வரவேற்பறை

மூன்றாவது கண்
உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்துக் கட்டுரைகள் எழுதும் பிரத்யேகத் தளம். பங்களாதேஷ் ஆடை நிறுவன விபத்தில் துணி நிறுவனங்கள் நடந்துகொண்ட விதம், சி.இ. ஓ.வு-க்கு ஒரு மில்லியன்டாலர் சம்பளத்தைக் கொட்டித் தரும் நிறுவனங்கள், ஊழியர்களை எப்படி கசக்கிப் பிழிகின்றன? ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர் கள் யார்... என நம்மை நாள்தோறும் சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை, ஆழமாக அலசும் கட்டுரைகள் ஆய்வாளர்களுக்குப் பெரும் பயனளிக்கும்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இசை: டி.இமான்; வெளியீடு; சோனி; விலை:

99

'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்....’ - காதலிக்கு எல்லாம் செய்துவிட்டு பிறகு சொல்லிக்காட்டும் 'வேணாம் மச்சான் வேணாம்’, 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ வகையறா பாடல். 'ஜில்லாவோ திண்டுக்கல்லு...’ பாடலைப் பாடியிருப்பவர்... அட, சிவகார்த்திகேயன். அந்தோணிதாஸன், கோவில்பட்டி அமலி ஆகியோரின் துள்ளல் குரல்களுக்கு ஈடு கொடுத்துச் சமாளிக்கிறார் சினா கானா. மெல்லிய சோகத்துடன் ஒலிக்கும் 'ஊதா கலரு ரிப்பன்.... உனக்கு யாரு அப்பன்?’ பாடலின் 'ரோஜா கலரு பொம்மி... உனக்கு யாரு மம்மி?, 'நீ தெருவில் நடந்தது எனக்குப் பெரிய தலைப்புச் செய்தி’ போன்ற சிம்பிள் வரிகளில் சுவாரஸ்யம் நிரப்பி இருக்கிறார் யுகபாரதி. ஸ்ரேயா கோஷலே பாடியிருந்தாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கிறது 'என்னடா என்னடா...’ மெலடி. 'கும்கி’ இமானின் இசையா இது? வருத்தப்படாமல் மெட்டு போட்டுட்டீங்களா பாஸ்?


தாகபூமி
இயக்கம்: அன்பு.ராஜசேகர்; வெளியீடு: விழிகள் கலைக்கூடம்
முப்போகம், இருபோகம் என்று பார்த்து செழித்த டெல்டா பூமி, ஒரு போகம்கூட விளையாமல் பிளாட் போட்டு விற்கப்படும் அவல நிலையைச் சொல்லும் குறும்படம். ஏழை விவசாயி கார்மேகத்துக்கு நிலமே அவரது நலம். திருச்சியிலிருந்து பிளாட் போட்டு விற்பதற்காக மொத்தக் கிராமத்தின் விளைச்சல் நிலத்தையும் விலைக்குக் கேட் கிறது ஒரு ரியல் எஸ்டேட் குரூப். மழை வரும் என்று கார்மேகம் காத்திருக்க, மழை வராது என்று மொத்த விவசாயிகளும் நிலத்தை விற்பதற்குத் தயாராகிறார்கள். நிலத்தைப் பிரிய மனம் இல்லாமல் அலை பாயும் மனதோடு கார்மேகம் எடுக்கும் முடிவு, கண்ணீர் க்ளைமாக்ஸ். இயல்பான கிராமத்துப் பேச்சு, மண் மணக்கும் பின்னணி, அழகான ஒளிப்பதிவு, அழவைக்கும் இசை என டீம்வொர்க்கில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். 'முயற்சி என்பது விதையே; அதை விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் அது மண்ணுக்கு உரம்’ என்று பாசிட்டிவ் வரிகளோடு ஆரம்பிக்கும் குறும்படம், '2012 நிலவரப்படி கார்மேகத்தோடு, கடந்த ஆறு வருடங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3,184-க்கும் மேல்’ என்று டெல்டா டேட்டா சொல்லும்போது மனம் கனக்கிறது!

தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு
சா.காந்தி
வெளியீடு: சமூக விழிப்புணர்வு பதிப்பகம். 68, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
பக்கம்: 138, விலை:

100
புள்ளிவிவரங்கள் அலுப்பூட்டுபவை. ஆனால், அவைதான் அறிவூட்டு பவை. 'தமிழக சூரிய மின் கொள்கை - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும் புள்ளிவிவரங்களே. அவற்றை ஊன்றிப் படித்தால் மின்சாரம் நம்மைத் தாக்கிய அதிர்ச்சி!
பொறியாளர் சா.காந்தியின் இந்தப் புத்தகம், தமிழில் மின்சாரம்குறித்த ஆய்வுகளில் மிக முக்கியமானது.
மாநிலம் முழுக்க மாபெரும் மின் தட்டுப்பாடு நிலவிவரும் சுழலில், 3,000 மெகா வாட் திறன்கொண்ட சூரிய மின் கொள்கையை, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. நீண்ட கால நோக்கத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு சூரிய மின்சாரம் ஒன்றே வழி என அறிவித்த அரசு, சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு ஏராளமான மானியங்களையும் அறிவித்துள்ளது. இதைப் பரந்த கோணத்தில் ஆய்வுசெய்கிறது இந்தப் புத்தகம்.
1954-ம் ஆண்டு தற்செயலாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு 1982-ல் உலகின் முதல் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா அமைத்தது. பிறகு மெள்ள, மெள்ள ஐரோப்பிய சந்தைக்குள் ஒரு சூறாவளியைப் போல இந்தத் தொழில்நுட்பம் புகுந்ததையும் சீன நிறுவனங்களின் வருகையையும் விவரிக்கும் நூலாசிரியர் காந்தி, இந்தியாவின் சூரிய மின் கொள்கையை இன்னும் ஆழமாக விவரிக்கிறார்.
சூரிய மின்சாரத்தில் மாபெரும் எதிர்காலம் இருப்பதாக நம்பிய பல பன்னாட்டு நிறுவனங்கள், சூரிய மின்தகடுகள் உற்பத்தித் துறையில் இறங்கின. ஆனால், அதிக செலவுப் பிடிக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்த்த வேகத்தில் வெற்றியடையவில்லை. அவர்களிடம் அபரிமிதமாகக் குவிந்துகிடக்கும் உற்பத்தியான அந்தத் தகடுகளை, சந்தைப்படுத்த நாடுகளைத் தேடுகின்றனர். அதற்குத் தோதாக சிக்கியிருக்கிறது இந்தியா.

தமிழக அரசின் புதிய சூரிய மின்சாரக் கொள்கையானது, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தங்களின் பயன்பாட்டில் ஆறு சதவிகித மின்சாரத்தை சூரிய மின்சாரம் மூலம் பெற வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. அதேபோல அமைக்கப்படவிருக்கும் தனியார் சூரிய மின் உற்பத்திநிலையங் களிலிருந்து, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடன் சுமையில் தள்ளாடும் மின்சார வாரியத்துக்கு இதன் மூலம் கூடுதல் சுமை உருவாகும். 2015-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், 1,100 கோடி ரூபாய் கூடுதலாகக் கட்ட வேண்டியிருக்கும். இது மின் கட்டணத்தின் பெயரால் மக்களின் தலையில்தான் விழும். ஏற்கெனவே நஷ்டத்தில் தடுமாறி நிற்கும் வாரியத்தின் தலையில், சூரிய மின்சாரம் மூலம் கூடுதல் சுமையை ஏற்றி, அது தடுமாறி விழும் தருணத்தில் தனியார் கைக்குத் தாரைவார்ப்பதுதான் அரசின் திட்டம்.
தமிழக அரசின் சூரிய மின் கொள்கை மூலம், உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய்க்கான புதிய சந்தை உருவாக்கப்பட்டு உள்ளது. வால்மார்ட், மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சூரிய மின்தகடு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன.
இதுபோன்ற அதிகபட்ச புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய புத்தகத்தில், சிறு பிழையும் பெரும் அனர்த்தங்களை கொடுத்துவிடும். அந்த வகையில், இந்த நூல் இன்னும் கூடுதல் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்!