FA பக்கங்கள்
Published:Updated:

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

நண்பர்களே... நீங்களும் சின்னச் சின்ன வண்ணக் கதைகளை எழுதி,  எங்களுக்கு அனுப்புங்கள்.  அஞ்சல் அட்டையில் எழுதினாலே போதும்.

அம்மாவின் வாசனை!

##~##

மாலா டீச்சர் ரொம்ப வித்தியாசமானவர். மாணவர்களை அடிக்காமல் அன்பாகப் பழகுவார். அதன் காரணமாக மாணவர்கள் தங்கள் பிறந்த நாளின்போது டீச்சருக்கு ஏதாவது ஒரு பரிசு தருவார்கள். அந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பில் படிக்கும் பாலு, ரொம்பவும் முரடன். யார் பேச்சையும் கேட்க மாட்டான்.  சுத்தமாக உடுத்த மாட்டான். பாலுவின் பிறந்த நாள் அன்று, அவன் டீச்சருக்கு என்ன பரிசு தரப் போகிறான் என்று வகுப்பே காத்திருந்தது. பாலு தயங்கிக்கொண்டே ஏற்கெனவே தான் பயன்படுத்திய சென்ட் பாட்டில் ஒன்றைத் தந்தான். டீச்சரும் சென்ட்டை தன்மேல் அடித்துக்கொண்டு, எல்லோரையும் பாலுவுக்கு வாழ்த்துச் சொல்லச் சொன்னார்.

ஆசிரியர் அறையில், மாலா டீச்சர் மற்ற ஆசிரியர்களிடம் பாலு கொடுத்த பரிசைப் பெருமையாகக் காட்டினார்.

ராணி டீச்சர், ஆறாம் வகுப்புக்கு பாடம் சொல்லித் தருபவர். ''மாலா டீச்சர், பாலு நல்ல பையன். என்கிட்டதான் ஆறாவது படிச்சான். அரையாண்டுத் தேர்வின்போது அவன் அம்மா இறந்துட்டாங்க. அவன் அப்பாவும் சரியாகக் கவனிக்கலை. அதனால்தான் அவன் இப்படி நடந்துக்கிறான்'' என்றார்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

ஆசிரியர் அறையின் வாசலில் பாலு வந்து நின்றான். மாலா டீச்சர் அவனை உள்ளே வரச்சொன்னார். பாலுவின் கண்கள் கலங்கி இருந்தன. டீச்சர் அருகே வந்து, ''டீச்சர், உங்க மேல என் அம்மா வாசனை அடிக்குது'' என்று சொல்லிவிட்டு அழுதான். பாலுவை அணைத்துக்கொண்டு, ''நானும் உன் அம்மா மாதிரிதான். உன் அம்மா ஆசைப்பட்ட மாதிரி நல்லாப் படிச்சு நல்ல பழக்கங்களோடு இரு'' என்றார்.

பாலுவின் மனம் பஞ்சு மேகம்போல உற்சாக வானில் மிதந்தது.

 எண்ணம் போல வாழ்வு!

மாறுவேடத்தில் போய்க்கொண்டிருந்த அரசன் ஒருவனுக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் இருந்த கரும்புத் தோட்டத்துக்குச் சென்று, அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்டான். அவள் ஒரு கரும்பை ஒடித்து, அதன் சாற்றை அரசனுக்குத் தந்தாள். அதைப் பார்த்த அரசன், 'ஒரு கரும்பில் இவ்வளவு சாறு கிடைத்தால், எல்லாக் கரும்பிலும் எவ்வளவு சாறு கிடைக்கும்? இதை விற்று இவர்கள் நிறையப் பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால், இவர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்’ என்று நினைத்தான்.

தாகம் தீராமல், இன்னும் கொஞ்சம் கரும்புச்சாறு கேட்டான் அரசன். அவளும் கரும்பை எடுத்துப் பிழிந்தாள். சாறு வரவில்லை. இன்னொரு கரும்பைப் பிழிந்தாள் அதிலும் சாறு வரவில்லை. அரசன் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். 'இத்தனை கரும்புகள் பிழிந்தும் சாறு வரவில்லையே. பாவம் இவர்கள்’ என்று வரி விதிக்கும் எண்ணத்தை விட்டான்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

''எங்க மகாராஜா ரொம்ப நல்லவர். அவர் ஆட்சியில் இப்படி நடக்குதே'' என்று புலம்பியபடி அடுத்தக் கரும்பை எடுத்துப் பிழிந்தாள் அந்தப் பெண். இப்போது சாறு வழிந்து பாத்திரம் நிறைந்தது!

கண்களால் காண்பது பொய்!

ஒரு ரயிலில் 25 வயதுள்ள இளைஞனும் அவரது அப்பாவும் பயணம் செய்தார்கள். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அங்கே ஒரு நாய் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த இளைஞன், ''அது என்ன?'' என்று அப்பாவிடம் கேட்டான். ''அதுதான் நாய்'' என்றார். சிறிது நேரம் கழித்து மாடு ஒன்றைப் பார்த்த அந்த இளைஞன், ''அது என்ன?'' என்றான். அப்பாவும் ''அதுதான் மாடு'' என்று சொல்லி, மாடு கத்துவதுபோல் கத்திக் காட்டினார். அடுத்து, ஒரு பெரிய குளம் ஒன்றைப் பார்த்ததும், அதில் எப்படிக் குதிப்பது என்று மகனுக்கு சொல்லிக் காட்டினார். இருவரும் சிரித்துக்கொண்டனர்.

இருவரையும் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் அருவருப்பாகப் பார்த்தனர். 'இவ்வளவு பெரிய இளைஞனுக்கு நாய், மாடு கூடத் தெரியலையே. இப்படி மனநிலை சரியில்லாதவனை மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்காமல், இப்படி ஊர் சுற்றுகிறாரே’ எனப் பேசிக்கொண்டனர். அது அந்த இளைஞனின் அப்பா காதிலும் விழுந்தது. காற்று நன்றாக வீசியதால், இளைஞன் தூங்கிவிட்டான். அப்போது, எதிர் இருக்கையில் இருப்பவர்களைப் பார்த்து அப்பா சொன்னார்...

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

''என் மகன் மனநிலை சரியில்லாத பைத்தியம் இல்லை. அவனுக்கு சிறு வயதிலேயே பார்வை போய்விட்டது. ஒரு நல்ல மனம் கொண்டவரால் வேறு கண் பொருத்தப்பட்டு, இன்றுதான் பார்வை வந்திருக்கிறது. அதனால்தான் அவன் பார்த்ததை எல்லாம் என்ன என்று கேட்கிறான்'' என்றார்.

எதிர் இருக்கைக்காரர்கள் மன்னிப்புக் கேட்டனர்.