FA பக்கங்கள்
Published:Updated:

நினைத்ததை முடிப்பவன் !

நினைத்ததை முடிப்பவன் !

##~##

காடும் மலையும் பனியும் நிறைந்த அழகான நாடு அது. அந்த நாட்டை ஆண்டுவந்த ராஜா, ராணிக்கு குழந்தையே இல்லை. இதனால், இருவரும் மிகுந்த கவலையில் இருந்தார்கள்.

திடீரென ஒருநாள், ராணியின் முன்பாகத் தேவதை தோன்றினாள். 'உன் கவலைகள் அனைத்தும் இன்றோடு தீர்ந்தன. உங்களுக்கு ஓர் அழகான மகன் பிறப்பான். அவன் மனதால் நினைத்தாலே, விரும்பியவை எல்லாம் உடனடியாக நடக்கும்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

ராஜாவும் ராணியும் சந்தோஷத்தில் திளைத்தனர். சில மாதங்களில் ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. நாடே மகிழ்ந்தது. அந்த அரண்மனையின் தலைமைச் சமையல்காரனோ பேராசை பிடித்தவன். அவன் ஒரு சதி திட்டம் தீட்டினான்.

ஒருநாள், அரண்மனைத் தோட்டத்தில் குழந்தையை மடியில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள் ராணி. அப்போது, ராணியின் கையில் இருந்த குழந்தையை மெதுவாக எடுத்துச்சென்று மறைத்து வைத்துவிட்டான் சமையல்காரன். ஒரு கோழியை அறுத்து, அதன் ரத்தத்தை ஆங்காங்கே தெளித்துவைத்தான். ராணி தூங்கி எழுந்தவுடன் குழந்தையைக் காணாமல் பதறி, எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தாள். அரண்மனை ஆட்கள் ஒவ்வொரு திசையில் போய்த் தேடினார்கள். ராஜாவும் வந்துவிட்டார்.

நினைத்ததை முடிப்பவன் !

அப்போது அங்கே வந்த சமையல்காரன், ''ராணி, நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இங்கே வந்த ஒரு காட்டு மிருகம் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது'' என்றான்.

ராஜாவுக்கு ராணி மீது அடக்க முடியாத கோபம். ''ராணியை சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ புக முடியாத ஓர் உயரமான கோபுரத்தில் அடையுங்கள். ஏழு வருடங்கள் அங்கே இருக்க வேண்டும். இவளுக்கு மிகக் குறைந்த சாப்பாடும் தண்ணீருமே கொடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டான்.

வானத்தில் இருந்த தேவதைகள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தன. அவை, வெண்ணிற அன்னங்களின் வடிவில் தினம் இரு முறை பறந்துவந்து, ராணிக்கு நல்ல உணவும் பானங்களும் கொடுத்துவிட்டுச் சென்றன.

அந்த சமையல்காரன் குழந்தையை ரகசியமாக வளர்த்துவந்தான். சில வருடங்கள் கடந்தன. குழந்தைக்குப் புரிந்துகொள்ளும் வயது வந்ததும், ''எனக்கு மிகப்பெரிய கோட்டையும் தங்க நகைகளும் உடனே கிடைக்க நீ நினைக்க வேண்டும்'' என்று சொன்னான் சமையல்காரன்.

குழந்தையும் நினைத்தது. உடனே கோட்டையும் செல்வமும் வந்தன. பிறகு, அந்தக் குழந்தையிடம், 'உன்னுடன் விளையாட யாரும் இல்லாததால், உனக்குப் பொழுதே போகாது. அதனால், உன்னுடன் விளையாட ஒரு பெண் வேண்டுமென நினை' என்றான்.

அந்தக் குட்டி இளவரசனும் அப்படியே நினைக்க, ஓர் அழகான பெண் தோன்றினாள். அவளும் இளவரசனும் நீண்ட நாட்கள் விளையாடி சந்தோஷமாக இருந்தார்கள். அவ்வப்போது அந்தக் குட்டி இளவரசனைப் பயன்படுத்தி, பெரும் செல்வம் சேர்த்தான் சமையல்காரன்.

அந்த இளவரசனுக்கு தந்தையைப் பார்க்க வேண்டுமென்று தோன்றினால் என்ன செய்வது என்று பயப்பட ஆரம்பித்தான். அதனால், அந்தப் பெண்ணிடம் சொல்லி,  இளவரசனைக் கொலைசெய்து, அவனது இதயத்தையும் நாக்கையும் தன்னிடம் காட்டும்படிச் சொன்னான்.

அந்தப் பெண்ணுக்கு மனம் கேட்கவில்லை. இளவரசனைப் படுக்கையின் அடியில் ஒளித்துவைத்துவிட்டு, வேறு ஒரு மிருகத்தைக் கொன்று, நாக்கையும் இதயத்தையும் சமையல்காரனிடம் காட்டினாள்.

'இது மனிதனுடைய இதயமில்லை' என்று கூறிய சமையல்காரன், அந்தப் பெண்ணையும் கொலைசெய்ய முயன்றான்.

அப்போது, ஒளிந்திருந்த இளவரசன் கோபத்துடன் எழுந்து, சமையல்காரனை ஒரு நாயாக மாற்றி, அதன் கழுத்தில் தங்கச் சங்கிலியை மாட்டினான். தன் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணை ஓர் அழகான பூவாக மாற்றி, தன் பையில் வைத்துக்கொண்டான். பிறகு, தன் தந்தையையும் தாயையும் பார்க்க அரண்மனைக்குக் கிளம்பினான்.

அங்கே சென்றதும் தன்னை இளவரசன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. மன்னனைச் சந்தித்து, தான் மிகச்சிறந்த வேட்டைக்காரன் என்றும் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ளும்படியும் கேட்டான். அரசனோ, அவன் திறமையை நிரூபிக்கும்படிச் சொன்னான்.

அது, காட்டில் விலங்குகளே இல்லாத காலகட்டம். ஆனாலும், இளவரசன் 64 மான்களை வேட்டையாடி வந்தான். அரசன் மகிழ்ந்து, அவனைத் தளபதியாகச்  சேர்த்துக்கொண்டான். ஒரு விருந்துக்கும் ஏற்பாடு செய்தான்.

நினைத்ததை முடிப்பவன் !

அப்போது, அந்த விருந்தில் கலந்துகொண்ட யாராவது தன்னுடைய தாயைப் பற்றி, அதாவது அரசியைப் பற்றிப் பேசினால், மன்னன் அவளையும் அழைப்பானா என்று பார்க்க விரும்பினான் இளவரசன். இப்படி இளவரசன் நினைத்ததுமே ஓர் அமைச்சர் எழுந்து, 'இந்த நல்ல தருணத்தில் ராணியும் இருந்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

உடனே ஆத்திரம்கொண்ட அரசன், 'அமைச்சரே, அவளைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். எங்களுக்கு இருந்த ஒரே மகனைப் பறிகொடுத்தவள்' என்றான்.

அப்போது எழுந்து நின்ற இளவரசன், 'தான்தான்  காணாமல்போன இளவரசன்’ என்று சொல்லி, சமையல்காரனின் சதியையும் விளக்கினான்.

அரசனுக்கு ஆச்சர்யமும் கோபமும் ஏற்பட்டது. நாய் வடிவில் இருந்த சமையல்காரனுக்கு எரிந்துகொண்டிருக்கும் கங்குகளைச் சாப்பிடக் கொடுக்கும்படி உத்தரவிட்டான். சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து, தன் மகனைத் தழுவிக்கொண்டான்.

இளவரசன் தன் பையில் இருந்த அழகிய மலரை எடுத்துப் பெண்ணாக மாற்றி, ''இவள்தான் என் உயிரைக் காப்பாற்றியவள்'' என்று அறிமுகம் செய்துவைத்தான்.

கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியை அழைத்து வந்தான் அரசன். ஆனால், பல வருடங்களாக சிறையில் இருந்ததால், அரசி வெகு நாட்கள் உயிர் வாழவில்லை. அவள் இறந்த பிறகு, அவளைத் தேவதைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச்சென்றனர். பிறகு, அந்தத் துக்கத்திலேயே அரசனும் உயிர் துறந்தான்.

அதன்பின் குட்டி இளவரசன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு நாட்டை சிறப்பாக ஆட்சிசெய்தான்.