மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!
 ##~##

தநீர் குடிக்கச் சென்ற நம்மை பெண்ணைக் காட்டி ஜாடை செய்ய, அதிர்ந்து சாலையை நோக்கித் திரும்பினோம். அங்கிருந்த ஒருவர் கூடவே வந்தார். நம்மைப் பின்தொடர்ந்த அந்த ஆணிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம். ''ஒண்ணும் பயப்படாதீங்க... எல்லாம் சேஃப்டிதான். நூறு ரூபாய்தான். நல்ல கம்பெனி கிடைக்கும். வேற எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று நம்மை உற்சாகப்படுத்த முயற்சி செய்ய ஆரம்பித்தவர், அடுத்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சாலையில் ஏறும்வரை அந்தப் பெரியவரின் மன்றாடல் தொடர்ந்தது. 

அங்கிருந்த மூன்று ஆண்களுமே எங்களைவிட வயதில் பெரியவர்கள். அவர்களைப் பார்த்தால், இந்தத் தொழிலுக்கு ஆள் பிடிப்பவர்கள் என்று சொல்லவே முடியாது. கடின உழைப்பாளிகள் என்பது அவர்களின் கட்டுமஸ்தான உடல்களைப் பார்க்கும்போது தெரிந்தது. பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்து, லைசென்ஸ் வாங்கி, எத்தனையோ பேருக்குப் படி அளந்து, சம்பளத்துக்கு ஆள் வைத்து, தினசரி கள் இறக்கி, அதை விற்று காசாக்கி லாபத்தை வீட்டுக்குக் கொண்டுசெல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், ஒரு கலயம் 'கள்’ பத்து ரூபாய்க்கு விற்று பெருமுதலாளியாக மாற முடியாது அல்லவா?

நெடுஞ்சாலை வாழ்க்கை!

பொருளாதார மேதைகளால் அறிய முடியாத உழைப்பாளி வர்க்கம், வறுமை எனும் சுழலுக்குள் சிக்கி, காலம் காலமாக கரையேற முடியாமல் தவிப்பதை, கண்டும் காணாமல் கால நதியைக் கடந்துகொண்டே இருக்கிறோம்.

லாரியில் ஏறிக் கிளம்பினோம். எதிர்பாராமல் நிகழ்ந்த அழைப்பால் ஏற்பட்ட திகைப்பில் இருந்து நாம் மீளவில்லை. ''சார், ஆந்திராவுல இது சர்வ சாதாரணம். இந்தத் தொழிலுக்கு வர்றதுக்குக் காரணம் வறுமைன்னு எல்லாருக்கும் தெரியும். இதுல இருந்து காப்பாத்துறதுக்கு அரசாங்கம் இது வரைக்கும் என்ன செஞ்சது; செஞ்சுகிட்டு இருக்குன்னு தெரியலை. 25 வருஷமா இந்த ரூட்டுல போய் வந்துக்கிட்டு இருக்கேன். அப்போ, இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியவும் அதிர்ச்சியாயிட்டேன். அதுவும் வெறும் மூணு ரூபாய்க்கு உடம்ப விக்க வர்றவங்களோட குடும்ப நிலைமை என்னவா இருக்கும்? இன்னிக்கு அது நூறு ரூபாயாத்தான் ஆயிருக்கு. அவங்க நிலைமை மாறலைன்னுதானே அர்த்தம்?'' என்று கேட்டார் முருகன்.    

நெடுஞ்சாலை வாழ்க்கை!

''குடும்பத்தைப் பிரிந்து மாதக் கணக்கில் பயணம் செய்யும் டிரைவர்களில் சபலப்படுவோரும் உண்டுதான். அது, வெறும் காமமாக இல்லாமல், காதலாகவும் மாறியதும் உண்டு'' என்று சொன்ன முருகன், பல டிரைவர்கள் திருமணம் செய்து இங்கேயே செட்டில் ஆன கதைகளையும் சொன்னபோது, ஆச்சரியம் ஏற்படவில்லை. நெடுஞ்சாலையில் தென்படும் அனைத்துப் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற எண்ணத்துக்கு யாரும் வந்துவிடக் கூடாது. உழைத்துப் பிழைக்கும் எளிய மனிதர்களை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. கள் விற்பவராக, இட்லிக் கடை நடத்துபவராக, ஓட்டலில் வேலை செய்பவராக, பெட்டிக்கடை நடத்துபவராக பல்வேறு தொழிலுக்குள் இந்தத் தொழில் இலைமறை காயாக மறைந்து இருக்கிறது. யார், என்ன, எப்படி என்பது தெரியாமல் சட்டென்று அணுகிவிட முடியாது.

மசாஜ் சென்டர்களில் மற்ற விஷயங்களும் நடப்பதுபோல, இங்கும் சில ஓட்டல்களில் இந்தத் தொழில் நடக்கிறதாம். பல இடங்களில் காதலனால், கணவனால் கைவிடப்பட்ட, ஏமாற்றப்பட்ட காதலிகள், மனைவிகள் விலை பேசப்பட்டு இந்த ஓட்டல் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டு சீரழியும் கதைகளும் ஏராளம். ஆனால், இவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்கள் யார்? நிச்சயம் லாரி டிரைவர்கள் அல்ல. சொகுசு வாகனங்களில் வருபவர்கள்தான் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்க முடியும். ஆனால், ஒட்டுமொத்தமாக எளிய சாதியான டிரைவர்களையே சுலபமாகச் சுட்டி விடுகிறோம். அன்பும், அற உணர்வுகளும் நம்மில் ஒருவராக உள்ள டிரைவர்களுக்கும் இருக்கும் என்பதை ஏற்க மறுக்கிறோம். கடக்க விரும்பாத பெரும்பள்ளம் நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

''லாரித் தொழிலில் திருட்டு அதிகம். அதனால் சபலப்படுகிற டிரைவராகவே இருந்தாலும் திருட்டுக்கும் வழிப்பறிக்கும் பயந்து எல்லை மீற யோசிப்பார். பெண்ணைக் காட்டி டிரைவரை மயக்கி, சரக்குகளைக் கொள்ளை அடிக்கும் கும்பல் எல்லா நெடுஞ்சாலைகளிலும் இருக்கிறது. இது ஒருவகை என்றால், லாரியில் விலையுயர்ந்த பொருள் செல்கிறது என்பது தெரிந்தாலே, டிரைவருக்குத் தெரிந்தே கொள்ளையடிக்கும் கும்பல்களும் உண்டு. இவர்களுக்கு பகல் - இரவு பாரபட்சம் இல்லை. கொள்ளையடிக்க முடிவு செய்துவிட்டால், சினிமாக் காட்சிகளை மிஞ்சும் வண்ணம், வாகனம், ஆயுதம் என சகலவிதமான பரிவாரங்களோடும் வருவார்கள். கொள்ளையர்களைத் தடுக்க நினைத்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீஸோ, சாலையில் செல்லும் சக லாரிகளோ நம்மைக் காப்பாற்றும் என்று துளியும் நம்பக் கூடாது. கூட்டாகப் பயணிப்பது மட்டுமே இப்படிப்பட்ட திருடர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி.

இதில், சர்தார்ஜி என அழைக்கப்படும் பஞ்சாபியர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஏனெனில், அவர்களே ஆயுததாரிகள்தான். பிரச்னை என்றால், சட்டென ஒன்று சேர்வது அவர்களது இயல்பு. அவர்களைத் தடுக்கவோ, தாக்கவோ போலீஸும் கொள்ளையர்களும் விரும்புவது இல்லை'' என்று சிவக்குமார் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

குடித்த பதநீர் உடலின் வெப்பத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி இருந்தது. உடல் நனைந்தே கிடந்தாலும், அதில் வெப்பக் காற்று படும்போது சற்று குளிர்ச்சியை அளித்தது. ராஜமுந்திரி தாண்டி விசாகப்பட்டினத்தை, இருவழிச் சாலையான பைபாஸில்  கடந்தபோது இருட்ட ஆரம்பித்தது. புறப்பட்டு மூன்று தினங்கள் ஆன நிலையில், சரியான தூக்கமின்மையால், மிகச் சோர்வாக இருந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பாதியில் திரும்பிவிடலாமா என்றுகூட யோசித்தோம்.

பெட்ரோல் பங்க் ஒன்றில் லாரியை ஒதுக்கினார் முருகன். அருகில் ஒரு ஓட்டல். ''சாப்பிட்டுவிட்டு இங்கேயே தூங்கிவிடுவோம். இந்தப் பகுதியில், இரவில் பயணிப்பது பாதுகாப்பானது இல்லை'' என்றார். சாப்பிட்டுவிட்டு பெட்ரோல் பங்க்கின் கூரை தந்த நிம்மதியில், அன்று ஆழ்ந்து தூங்கினோம்.

( நெடுஞ்சாலை நீளும்)

 எல்லா மாநிலத்திலும் கேஸ்!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

க்கானிக்கல் கேஸ் என ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, நேஷனல் பெர்மிட் வாங்கும் லாரிகள், எங்கு பதிவு செய்யப்படுகிறதோ, அந்த மாநிலத்தில்தான் வரி கட்டுகின்றன. இப்போது தமிழகத்தில் பதிவு செய்த லாரி, வேறு மாநிலங்களுக்குள் செல்லும்போது அந்த மாநிலத்துக்குத் தனியாக வரி செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், அதை வேறுவிதமாக வசூலிப்பதுதான் மெக்கானிக்கல் கேஸ். தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஆந்திராவுக்குள் செல்ல வேண்டுமென்றால், மாதம் ஒருமுறை இந்த மெக்கானிக்கல் கேஸுக்குப் பணம் கட்டுகிறார்கள். இந்த ரசீது, ஒரு மாதம் வரை செல்லும். ஒரு மாதம் முடிந்து ஒருநாள் ஆகி விட்டால்கூட விடமாட்டார்கள். இதற்கான தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆந்திராவில் 1,000 ரூபாய்; ஒடிசாவில் 1,500 ரூபாய், மேற்கு வங்காளத்தில் 4,000 ரூபாய் (இது ஒரு ஆண்டுவரை!). அப்படி என்னதான் இந்த மெக்கானிக்கல் கேஸ் என்று ரசீதை வாங்கிப் பார்த்தால், எக்ஸ்ட்ரா ஹாரன் பொருத்தியது; இன்ஜினில் இருந்து அதிகம் புகை வந்தது; சைலன்ஸரில் அதிகம் சத்தம் வருகிறது என்று பெயருக்கு எதையாவது எழுதியிருக்கிறார்கள். இதன் முக்கிய நோக்கம், மாநில அரசுக்கு வருவாய் பெற்றுத் தருவது மட்டுமே.!

நெடுஞ்சாலை வாழ்க்கை!