ஃபீலிங்க்ஸ்
##~## |
ஆகஸ்ட் 18-ம் தேதியன்று காலை 7.30 மணி... சென்னை, கோட்டூர்புரத்தில் அடையாற்றின் குறுக்கே இருக்கும் குடிநீர் குழாய் செல்லும் பாலத்தின் கீழிருந்து... 'என்னைக் காப்பாத்துங்க..!’ என்கிற அலறல் சத்தம்... அருகே இருந்தவர்கள் ஓடிப்போய் பார்த்தால், 73 வயதுப் பாட்டி பேபியம்மாள், ஆற்றிலே தவறி விழுந்து, தன் வயதுக்கு மீறிய பலத்தோடும்... துணிவோடும்... பாலத்தின் தூணைப் பற்றிக் கொண்டு எழுப்பிய அபயக் குரல் என்று தெரிந்தது.
போட் கிளப் படகின் மூலம் அவர் மீட்கப்பட்டபோது... 'இந்த வயசுலயும் இந்த பாட்டிக்கு என்னவொரு நம்பிக்கை!’ என்று அதிசயித்துப் பாராட்டினார்கள் அங்கு குழுமியிருந்த அத்தனை பேருமே! ஆனால், அந்த நம்பிக்கைப் பாட்டி, அடுத்த நாளே... வீட்டுப் படிக்கட்டுகளில் தவறிவிழுந்து இறந்து போனதுதான் சோகம்!
''அந்த குடிநீர் பாலத்துல இந்தப் பகுதியில உள்ளவங்கதான் நடந்து போவாங்க. அப்படித்தான் அன்னிக்கு அம்மாவும் அங்க போனாங்க. அந்த ஆறு மொத்தமும் சாக்கடை தண்ணி. இதுல விழுந்தா இளவயசுக்காரங்களே பொழைக்கறது அரிது. அப்படியிருந்தும் 73 வயசான எங்கம்மா... தைரியமா தப்பிச்சாங்க. போட் மூலமா கரைக்கு கொண்டு வந்தப்ப மயக்கமா இருந்தாங்க. நல்ல தண்ணியில குளிப்பாட்டி வீட்டுக்குக் கொண்டு வந்தோம். மறுநாள் ரொம்ப நேரத்துக்கு அப்புறம் எழுந்தவங்க... 'எனக்கு ஏதாவது பழம் சாப்பிடணும் போல இருக்கு’னு ஆசையோடு சொல்லி, பழம் வாங்கித்தரச் சொன்னாங்க. உடனே பழம் வாங்கிக் கொடுத்துட்டு, வெளியில துணி காயபோட்டுட்டு இருந்தேன். அப்ப, 'அம்மா’னு அலறல் சத்தம் கேட்க... திரும்பிப் பார்த்தா... எனக்கு ஒரு பழத்தை கொடுக்கறதுக்காக என் பின்னாடியே வந்த அம்மா, படிக்கட்டுல தவறி விழுந்து, மண்டையில பலமா அடிபட்டுக் கிடந்தாங்க.

அலறித் துடிச்ச நாங்க... ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறதுக்காக தூக்கினோம். 'அட, எனக்கு ஒண்ணும் ஆகல. யாரும் அழாதீங்க’னு சொல்லிட்டு, தானே எழுந்து வீட்டுக்குள்ள போய் படுத்தாங்க. கொஞ்சநேரத்துல உசுரு போயிடிச்சு'' என்று சொல்லும் ராஜேஸ்வரி, கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.
இந்த பாட்டி ஆற்றிலிருந்து தப்பியதற்குக் காரணம், தன் வாழ்க்கைப் பாதையில் இதற்கும் மேலான ஆபத்துகளை எல்லாம் ஏற்கெனவே அவர் கடந்துவிட்ட தெம்பில்தான்... என்பது ஆச்சர்ய செய்தியே!
''எங்க வீட்டுல நானும், ரெண்டு தம்பிங்களும்தான். சின்ன வயசுலயே அப்பா இறந்துட, அப்போ ஆரம்பிச்சது எங்கம்மாவோட வாழ்க்கைப் போராட்டம். கூலி வேலை செஞ்சே மூணு பிள்ளைகளை வளர்த்தெடுத்து, படிக்க வெச்சு, எல்லாருக்கும் நல்லபடியா கல்யாணமும் செஞ்சு வெச்சாங்க. எனக்கு கல்யாணம் ஆன சில வருஷத்துலயே, என் வீட்டுக்காரர் உடம்பு முடியாம இறந்துபோக, மறுபடியும் எங்கம்மாவுக்கு பேரிடி. புருஷன இழந்து, குழந்தைகளோட நின்ன என்னைப் பார்த்து கதறிச் துடிச்சாலும்... பழையபடி தன்னோட தைரியத்தைக் கூட்டிக்கிட்டு, 'நான் இருக்கேன் கவலைப்படாதே'னு நம்பிக்கை சொல்லி தேத்தினாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் எங்கம்மாவைப் போலவே வாழ்க்கையில போராடக் கத்துக்கிட்டேன்'' என்ற ராஜேஸ்வரி,
''ஆத்துல இருந்து வீட்டுக்கு கொண்டு வந்தப்ப... 'இனி அவ்வளவுதான்னு பயப்படாம, அதெல்லாம் பிழைச்சுடலாம்னு திடமா இருந்ததாலதான் இந்த பாட்டியால கரைசேர முடிஞ்சுது. அதனால, என்ன பிரச்னை வந்தாலும் தளராம போராடணும்’னு பேரப்பிள்ளைங்களுக்கு அறிவுரை சொன்னாங்க. அதுக்கு தகுதியான வாழ்க்கைதான் அவங்க வாழ்ந்தது.

'நோயில விழுந்து, படுக்கையில கிடந்துனு உங்களுக்கெல்லாம் பாரமா இருக்காம... என் உயிர் சட்டுனு பிரிஞ்சுடணும்'னு எங்கிட்டயும் தம்பிங்ககிட்டயும் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க அம்மா. அப்படியே போயிட்டாங்க...'' என்று சொன்னார்.
தன் மூச்சையும் தான் விரும்பியபடியேதான் முடித்திருக்கிறார் பாட்டி!
- சா.வடிவரசு
படங்கள்: பா.கார்த்திக்
படங்கள் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

''மனசு கனக்குதுங்க!''
பாட்டியை மீட்ட 'சென்னை போட் கிளப்’ சசிகுமார், ''இந்த ஆறு முழுக்கவே மோசமான தண்ணிதான். இதுல விழுந்தவங்க மீண்டு வர்றது ரொம்பக் கஷ்டம். ஆனா, இந்த வயசுல அந்தப் பாட்டி மனசு தளராம போராடி, பாலத்து தூண்ல இருக்கற ஸ்லாப் மேல ஏறியிருந்ததைப் பார்த்து எங்களுக்கே ஆச்சர்யம். போட்ல ஏத்தினப்ப... 'உங்களுக்கு உசுரு கெட்டி பாட்டி’னு சொன்னபோது, 'என்னோட விடாமுயற்சி தான் என்னை காப்பாத்தி இருக்கு!’னு சொல்லிட்டுப் போனாங்க. அவங்கள பத்தின ஆச்சர்யம் கலை யறதுக்குள்ள, இறந்துட் டாங்க என்கிற செய்தி... மனசு கனக்குதுங்க'' என்றார் வருத்தத்தோடு.