மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

போருக்குப் பிந்தைய ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள 'பெயரற்றது’, புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

மொத்தம் எட்டுக் கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. 'தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்’ என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைசெய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம், தஞ்சம் கோருவோருக்கு உண்டு. இந்தக் கதையில் தஞ்சம் கோரும் பிரதீபன், ராணுவத்தால் ஏற்படும் தொல்லைகளைப் பட்டியலிடுகிறார். விசாரணை அதிகாரியோ, 'உனக்கு ராணுவத்தாலும் பிற குழுக்களாலும் பிரச்னை. உன்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உனக்கு உயிராபத்து ஏதும் இல்லை’ என்கிறார். ஏதோ ஒரு குறை வைத்துவிட்டதை உணர்ந்த பிரதீபனின் அடுத்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மனிதர்கள் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இயல்புடையவர்கள் என்பதை மிகவும் நுட்பமாகச் சொல்கிறது இந்தக் கதை.

நூலின் தலைப்பான 'பெயரற்றது’ கதை, ஈழத்தில் உள்ள சாதி முரண்களைச் சரடாகவைத்துப் பின்னப்பட்டுள்ளது. இயக்கம், அமைப்பு, போராட்டம் எல்லாம் ஒரு கவர்ச்சியாக மக்களிடம் கவிந்திருந்தாலும், பொதுச் சமூகம், சாதி என்னும் சாபக்கேட்டை மீறாமல் இருப்பதை 'பெயரற்றது’ கதை உணர்த்துகிறது. நீடித்த யுத்தம், கடற்தொழிலைப் பாழாக்கி வறுமையைக் கொடுக்கும்போது, எப்படியாவது தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் 'சின்ராசு மாமா’ கதை, முடிவில் மூன்று விதமான அரசியல் கோட்பாடுகளை விமர்சிக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள எட்டுக் கதைகளில் '90 சுவிஸ் பிராங்குகள்’ எனும் கதைதான் ஈழத் தமிழர்களின் புகலிட வாழ்வின் யதார்த்த நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. 'அபிதேமி’ என்ற கறுப்பின ஆஃப்ரிக்க அகதி, ஈழத் தமிழ் அகதியிடம் தன் கதையைச் சொல்கிறாள். தாய் நிலம் பிரிந்த அந்தப் பெண்ணின் கதையை வலியோடு ஈழ அகதி கேட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைகிற இன்னோர் ஈழத் தமிழரான றமணன், இப்படிச் சொல்வதோடு அந்தக் கதை முடிகிறது 'கள்ளக் கறுவல் நாய்களோடு உனக்கென்ன கதை வேண்டியிருக்குது!’

சயந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்கள் சராசரிக்கும் கீழான எளிய மனிதர்கள். தேவையில்லாத இடத்தில்கூட பொய் பேசக்கூடியவர்கள். இத்தகைய இயல்புடையவர்களின் கதையை, கிண்டலுடன் கூடிய மொழியில் சொல்லும்போது, அது மேலும் வலுப் பெறுகிறது. இதை யுத்தத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஒருவனின் படைப்பாகக் கொள்ளலாம்!

விகடன் வரவேற்பறை

பேரறிவாளனின் போராட்டம்!  www.perarivalan.com

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் பேரறிவாளனின் ஆன்லைன் முகவரி. இந்தியாவுக்கே முன்னோடியாக உருவான தமிழகத்தின் மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனின் புகைப்படங்கள், மரண தண்டனை தொடர்பான ஆவணப்படங்கள், கடிதங்கள், புத்தகங்கள் என அனைத்தும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தளத்தை ஆங்கிலத்திலும் நடத்துவது சிறப்பு. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மற்றும்

விகடன் வரவேற்பறை

மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தவரால் நடத்தப்படும் இந்த இணையத்தில், 'தன் வழக்கு, சிறை வாழ்க்கை’ என்ற தலைப்பில் தன்னுடைய  போராட்ட வாழ்வை ஒரு தொடராக எழுதுகிறார் பேரறிவாளன்!

'என் பெயர் சிவப்பு’ -  இயக்கம்: ராஜு சுப்ரமணியம்  

பிறந்த ஆறாவது மாதத்தில் சகோதரச் சேவலோடு சண்டையை ஆரம்பிக்கும் சேவல்களின் மூர்க்கம், தன் எல்லைக்குள் பிறிதொரு சேவலை அனுமதிக்காத அதன் ஆதிக்க வெறியை மனிதர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வரலாற்று ஆதாரங்களோடு விளக்கும் ஆவணப்படம். ஒவ்வொரு சண்டைக்கும் சேவல் எப்படி விருப்பத்துடன் தயாராகிறது, தினசரி மசாஜ், நீச்சல், அசைவ உணவுகள் என அதை எப்படி மனிதர்கள் தயார்படுத்துகிறார்கள் என்பதையும் விரிவாக விளக்குகிறார்கள். போட்டியில் ரத்தம் சிந்தி தலை சாய்த்து சேவல்கள் மரணித்த பின்,  'மாபெரும் யுத்தத்துக்குப்பின் வரும் பேரமைதி’ என்று வருணித்திருப்பதும் கலங்கடிக்கிறது!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ராஜா ராணி

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்  

வெளியீடு:  திங்க் மியூஸிக்; விலை:

விகடன் வரவேற்பறை

99

மென்மையாக மிக மென்மையாக ஆரம்பிக்கிறது 'ஹேய் பேபி...’ பாடல். வார்த்தைகளுக்கு வலிக்காமல் வருடும் ஜாஸ் இசை நடுவழியில் சடாரென தடதடத்து கடகடவென ஓடி முடிகிறது. 'மேரேஜஸ் ஆர் மேட் இன் ஹெவன்’ என்று பீட்டர் மேட்டர்களாலும் 'மேரேஜ் கலீஜ்’ என சலம்பல் சம்பாஷணைகளாலும் காக்டெயில் தோரணம் கட்டும் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் - 'கானா’ பாலா என இரு துருவக் குரல் காம்போ நச். 'அஞ்ஞாடே...’ ஆல்பத்தின் கிளாஸிக் மெலடி. சக்திஸ்ரீ கோபாலனின் குழைந்து வளையும் குரல் மெஸ்மரிக்கிறது. 'அலங்காரி அல்ட்டிக்கிட்டேனே.... அலுங்காம அள்ளிப்புட்டானே...’ என பனங்கள் போதை தரும் வரிகள் ப்ளஸ் குரலுடன் பாந்தமாகப் பயணிக்கிறது இசை. ராக், மலையாளம், தெம்மாங்கு கலந்த கலவையாக கடக்கிறது 'சில்லென ஒரு மழைத்துளி’ பாடல். வந்தனா ஸ்ரீனிவாசன் குரல் 'உன்னாலே...’ பாடலின் ஹைலைட். சின்ன பிட்... ஆனால், செம பீட். 'இமையே இமையே...’ பேத்தாஸில் ஜி.வி.பிரகாஷ் குமார், சக்திஸ்ரீ கோபாலன் குரல்கள் தேவையான ஃபீல் கொடுக்க, ஆர்கெஸ்ட்ரா செம செட். ஹிட் பட்டியலில் இடம் பிடிக்கும் ஆல்பம்!

விகடன் வரவேற்பறை