கே.முரளிதரன் ஹாசிப்கான்
##~## |
ஓர் ஊரில் அண்ணன், தம்பி இருவர். அண்ணன் நேர்மையற்றவன். குறுக்கு வழியில்தான் சிந்திப்பான். தம்பி மிக மிக நேர்மையானவன்.
அவர்களின் தந்தை இறந்த பின்பு சொத்துக்களைப் பிரித்தனர். அப்போது தம்பியை ஏமாற்றி, எல்லாச் சொத்துக்களையும் பறித்துக்கொண்ட அண்ணன், தம்பியை வீட்டைவிட்டு விரட்டினான்.
பல இடங்களில் வேலை தேடினான் தம்பி. ஏதும் கிடைக்கவில்லை. ஊருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் கால்போன போக்கில் போனான். தான் இனி உயிரோடு வாழ்வதில் பயனில்லை என்று நினைத்து, இறந்துவிட முடிவு செய்தான்.
ஒரு மரத்தடியில் நின்றபோது, திடீரென எங்கிருந்தோ ஓர் ஓநாய் ஆவேசமாக ஓடிவந்தது.
என்னதான் இறக்க முடிவுசெய்தாலும் ஓநாயைப் பார்த்ததும் நடுங்கிப்போய், மரத்தின் மீது ஏறிக்கொண்டான். மரத்தில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவன், அப்படியே தூங்கிவிட்டான்.
கண் விழித்துப் பார்த்தபோது, கீழே நான்கு தேவதைகள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
மூச்சுக் காற்றுகூட அவர்களுக்கு கேட்காதவாறு உட்கார்ந்திருந்தான் தம்பி. முதலாவது தேவதை சொன்னது, 'பக்கத்து ஊரில் இருந்த பெரிய குளம் உடைந்துவிட்டது. விவசாயிகள் செய்வத றியாமல் தவிக்கிறார்கள்.'

உடனே தலைமைத் தேவதையைப் போலிருந்த தேவதை, அதற்குப் பதில் சொன்னது. 'அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அந்தக் குளத்தின் தெற்குப் புறமாக இருக்கும் புளிய மரத்தை வெட்டி, உடைப்பில் போட்டால் அடைத்துவிடலாம்' என்றது.
பிறகு இரண்டாவது தேவதை, 'நானும் ஒரு மோசமான செய்தியை வைத்திருக்கிறேன். தெற்குப் பக்கம் இருக்கும் ஊரில், கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மக்கள், குடிநீருக்காக 30 மைல் நடந்துபோய் தண்ணீர் கொண்டுவருகிறார்கள்' என்றது.
உடனே தலைமைத் தேவதை, 'அந்த ஊரில் மல்லிகைப் புதர் ஒன்று இருக்கிறது. அந்தப் புதரை அகற்றிவிட்டு, ஐந்து அடி தோண்டினால் தண்ணீர் ஊற்றெடுக்கும். அது வற்றவே வற்றாது' என்றது.
அடுத்ததாக மூன்றாவது தேவதை, 'என்னிடமும் ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. இந்த நாட்டின் இளவரசி விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளைப் பிழைக்கவைத்தால், மன்னர் நாட்டையே கொடுக்கத் தயாராக இருக்கிறார்' என்றது.
'அது ஒன்றும் பெரிய காரியமில்லை. வெட்டிவேரை எரித்து, அதன் புகையை அவளை சுவாசிக்கச் செய்தால், அந்த நோயிலிருந்து விடுபடுவாள்' என்ற தலைமைத் தேவதை, 'இதெல்லாம் தேவதைகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். யாருக்கும் சொல்லக் கூடாது' என்றது.
தேவதைகள் சென்ற பிறகு, மரத்தைவிட்டுக் கீழே இறங்கிய தம்பி, அடுத்த ஊருக்குப் போனான். அங்கே தேவதைகள் சொன்னதுபோலவே, குளம் உடைந்து போயிருந்தது. ஊர் மக்கள் எல்லோரும் மண்ணைக் கொட்டி குளத்தை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடனே தம்பி, அந்த ஊர்ப் பெரியவரைப் பார்த்து, ''இந்த உடைப்பை அடைக்கும் வழி எனக்குத் தெரியும்'' என்றான்.
பெரியவர், 'நீ மட்டும் குளத்தை அடைக்கும் சரியான வழியைச் சொல்லிவிட்டால், உனக்கு ஒரு குதிரையும் தேவையான அளவுக்குப் பணமும் பரிசாகத் தருகிறேன்' என்றார்.
இளைஞன், குளத்தின் கரையில் இருந்த காய்ந்துபோன புளிய மரத்தை வெட்டி வீழ்த்தி, குளத்தை அடைத்தான். பெரியவரும், சொன்னபடி குதிரையும் பணமும் கொடுத்தார்.

இளைஞன் அதை வாங்கிக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணம் செய்தான். தேவதைகள் குறிப்பிட்ட ஊர் வந்தது. ஊரே காய்ந்துகிடந்தது. மக்கள் தண்ணீருக்காக அலைந்துகொண்டிருந்தார்கள். அந்த ஊரின் மத்தியில் சென்று நின்ற இளைஞன், 'இந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க என்னால் முடியும்' என்றான்.
ஊர் மக்கள் அவனை சந்தேகத்துடன் பார்த்தார்கள். ''இந்த ஊரில் இருக்கும் மல்லிகைப் புதரை அகற்றிவிட்டு, ஐந்து அடிக்குத் தோண்டினால், வற்றாத சுனை உருவாகும்'' என்றான். ஊர் மக்களும் அதேபோல செய்தார்கள். தண்ணீர் ஊற்றெடுத்தது. ஊர் மக்கள், அவனுக்கு உணவளித்து, நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார்கள்.
அவன் அடுத்ததாக அந்த நாட்டின் அரண்மனைக்குப் போனான். இளவரசியின் நோயைத் தன்னால் தீர்க்க முடியும் என்று காவலர்களிடம் தெரிவித்தான். காவலர்கள் அதனை மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னர், உடனே இளைஞனை வரச் சொன்னான். இளைஞனின் தன்மையான பேச்சும் தோற்றமும் மன்னரை வெகுவாகக் கவர்ந்தன.
இளவரசி இருந்த அறைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே போனவுடன், தான் கையில் கொண்டுவந்திருந்த வெட்டிவேரைக் கொளுத்தி, அதன் புகையால் அறையை நிரப்பினான். அந்தப் புகையைச் சுவாசித்த இளவரசி, மயக்கத்திலிருந்து மெதுவாக மீண்டாள். சில மணி நேரங்களிலேயே எழுந்து அமர்ந்தாள்.
மன்னருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இளைஞனுக்கு ஏகப்பட்ட பரிசுகளைக் கொடுத்து, அவனையே தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவும் செய்தான். மன்னருக்குப் பிறகு, நாட்டை ஆளப்போகும் பட்டத்து இளவரசனாகவும் அறிவிக்கப்பட்டான்.
பெரும் மகிழ்ச்சியடைந்த தம்பி, பக்கத்து ஊரில் இருக்கும் தன் அண்ணனை அழைத்துவரச் சொன்னான். அரண்மனைக்கு வந்த அண்ணன், தம்பியைப் பார்த்து ஆச்சர்யமடைந்தான்.
''எப்படி இதெல்லாம் நடந்தது?'' என்று கேட்டான். தம்பி எல்லாவற்றையும் சொன்னான். உடனே அண்ணன் தானும் இதேபோல ஒரு நாட்டுக்கு ராஜாவாக ஆசைப்பட்டான்.
உடனே அரண்மனையிலிருந்து கிளம்பி, தம்பி சொன்ன மரத்தில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரத்தில் தம்பி சொன்னதைப் போலவே நான்கு தேவதைகள் வந்து கீழே அமர்ந்தன. பக்கத்து ஊர்களிலும் அரண்மனையிலும் நடந்த சம்பவங்களை அவை கேள்விப்பட்டிருந்தன. தாங்கள் பேசிய ரகசியங்கள் எப்படி வெளியில் வந்தன என்று யோசித்தன.
'இந்த மரத்தின் மீது யாராவது ஒளிந்திருந்து நம் ரகசியங்களைக் கேட்டிருக்கலாம்' என்றது தலைமைத் தேவதை. உடனே ஒரு தேவதை மேலே பார்த்தது. அங்கே அண்ணன் ஒளிந்துகொண்டிருந்தான்.
இவன்தான் இதையெல்லாம் கேட்டுப்போய் சொல்லிவிட்டான் என்று ஆத்திரம் அடைந்தன தேவதைகள். தேவதைகளுக்குப் பறக்கும் சக்தி உண்டு அல்லவா? உடனே, நான்கும் சேர்ந்து அவனைத் தூக்கிக்கொண்டு பறந்தன.
உயரத்துக்குச் சென்றதும், சற்றுத் தூரத்தில் இருந்த முள்காட்டின் மீது அவனை வீசின. உடம்பு முழுக்க முட்கள் குத்திய வலியுடன் தன் பொறாமைக்குத் தகுந்த தண்டனை கிடைத்தது என அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்றான் அண்ணன்.
கே.முரளிதரன்
ஹாசிப்கான்