ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

குரங்கு தோளில் ஸ்கூல் பை !

ர.பிரீத்தி, கோபி. முத்து

##~##

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி. குட்டிக் குரங்கு கவின், தன் அம்மாவோடு வாழ்ந்து வந்துச்சு.

கவினுக்கு எப்பவும் ஜாலியா விளையாடணும்; இஷ்டம்போல சுத்தித் திரியணும்னு ஆசை. ஆனா, அம்மா விடுறதில்லை. 'இங்கே போகாதே, அங்கே போகாதே’னு ஏகப்பட்ட கண்டிப்புகள்.

ஒருநாள் அம்மாவுக்குத் தெரியாமல் ஆற்றைக் கடந்து, கால் போன போக்குல நடக்க ஆரம்பிச்சது கவின். வழியில் ஒரு பெரிய பாறை. அந்தப் பாறைக்கு மேல  ஏதோ துணி கிடப்பதுபோல தெரிஞ்சிச்சு. கவின் குரங்கு எப்படியோ கஷ்டப்பட்டு மேலே ஏறிப்போய் பார்த்தால், அது ஒரு ஸ்கூல் பை.

அந்தப் பையை எடுத்து திறந்து பார்த்தால், உள்ளே எதுவுமே இல்லை. 'ச்சே... கஷ்டப்பட்டு எடுத்தது வீணாயிருச்சே. சரி, எதுக்கும் இருக்கட்டும்’னு, ஸ்கூல் பையன் மாதிரி தோளில் மாட்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சது.

கொஞ்ச நேரத்தில பசி எடுத்துச்சு. 'சாப்பிட பலாப்பழம் இருந்தால் நல்லா இருக்கும்’னு நினைச்சது.

அப்படி நினைச்சதும் பை கனமாகிற மாதிரி ஃபீலிங். உடனே கவின், அந்தப் பையைத் திறந்து பார்த்துச்சு.  பைக்குள்ளே பலாப்பழம் இருந்துச்சு. அதிர்ச்சி... ஆனந்தம்!

ஆசை ஆசையா எடுத்து நிறைய சாப்பிட்டுச்சு கவின்.  வேகமாக சாப்பிட்டதால விக்கல் வந்திருச்சு. 'ஐயையோ பக்கத்தில் தண்ணி இல்லையே. ஆத்துக்குப் போகணுமே’னு கவலைப்பட்டுச்சு. மறுபடியும் பையில் கனம். பார்த்தால்,  ஒரு வாட்டர் பாட்டில். அதை எடுத்து 'மடக்... மடக்’னு குடிச்சது.

குரங்கு தோளில் ஸ்கூல் பை !

'ஆகா... நினைச்சதைக் கொடுக்கிற அதிசயப் பை இது’னு புரிஞ்சுக்கிருச்சு.

கவினுக்கு ரொம்ப சந்தோஷம். காடு முழுக்க குஷியாகக் சுத்திச்சு. அந்தநேரம், மழை தூற ஆரம்பிச்சது. கவின் குரங்கு  மரப்பொந்து ஒன்றில் போய் பதுங்கிக்கிச்சு.

அங்கே ஆமை ஒண்ணு இருந்துச்சு. அந்த ஆமை முகத்தில் கவலைக் கோடுகள். ''என்ன பிரதர் கவலையா இருக்கே?''னு கவின் கேட்டுச்சு.

''வேற என்ன? ஆண்டாண்டு காலமா நாங்க மெதுவாகவே போயிட்டிருக்கோம். வேகமாப் போக முடியலை''னு வருத்தப்பட்டுச்சு ஆமை.

கவின் யோசிச்சது. 'பேட்டரியில் போகிற மாதிரி ஒரு ஸ்கேட் போர்டு இருந்தால், இந்த ஆமைக்குத் தரலாம்’னு நினைச்சது.

உடனே ஸ்கூல் பையில்  ஸ்கேட்டிங் போர்டு வந்துச்சு. அதை எடுத்து ஆமைக்குக் கொடுத்துச்சு. மகிழ்ச்சியில் அந்த மழையிலும் வேகமாப் போச்சு ஆமை.

இந்த விஷயம் காடு முழுக்க பரவிச்சு. எந்த விலங்கு வந்து எதைக் கேட்டாலும் ஸ்கூல் பை மூலம் கொடுத்துச்சு கவின் குரங்கு.

இந்த விஷயத்தைக் கேட்ட கரடி ஒண்ணு, 'எப்படியாவது அந்தப் பையைக் குரங்குக்குத் தெரியாம எடுத்துடணும்’னு நினைச்சது.

குரங்கு தோளில் ஸ்கூல் பை !

ராத்திரி நேரம்... குரங்கு தூங்குறப்ப வந்து, அந்தப் பையை எடுத்துக்கிட்டு தனியாகப் போய் தோளில் மாட்டிக்கிச்சு. 'எனக்கு பெரிய பெரிய நாவல்பழங்கள் நிறைய வேணும்’னு நினைச்சது.

அப்புறம், பையைத் திறந்து பார்த்துச்சு. உள்ளே எதுவுமே இல்லை. ஏதேதோ நினைச்சு நினைச்சுப் பார்த்து ஏமாந்துபோச்சு கரடி. 'ஆகா... குரங்கு நினைச்சது மட்டுமே கிடைக்கும் போல. இந்த மேட்டரை வேற வழியில் டீல் பண்ணணும்’னு நினைச்சது.

தன் நண்பர்கள் மூணு பேருடன், குரங்கு இருக்கிற இடத்துக்கு மறுபடியும் போச்சு.  கவின் குரங்கைக் கடத்தி, ஒரு குகையில் கொண்டுபோய் கட்டிப்போட்டு, அதன் முதுகில் ஸ்கூல் பையை மாட்டிவிட்டுச்சு.

''குரங்கே, நாங்க கேட்கிறதை நீ நினைக்கணும். இல்லைனா நீ காலி''னு சினிமா வில்லன் மாதிரி மிரட்டிச்சு கரடி.

குரங்கு கவின் யோசிச்சது. 'இந்தக் கரடிங்களுக்குத் தெரியாமல் நான் மறைஞ்சுடணும்’னு நினைச்சது. உடனே கரடிகளோட கண்களுக்குத் தெரியாம குரங்கு மறைஞ்சு போச்சு.

குகைக்கு வெளியே ரொம்பத் தூரத்துக்குப் பறந்துவந்து விழுந்துச்சு குரங்கு. 'உழைக்காமல் கிடைச்சதால்தான் இந்தப் பிரச்னை. இனி இந்தப் பையே வேணாம்’னு முடிவு பண்ணி,  தன் தலையைச் சுத்தி தூக்கிப் போட்டுட்டு, அம்மாவைத் தேடி நடக்க ஆரம்பிச்சது.