அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.
பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள் வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.
நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந் தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற் றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட் டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர் கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். 'நன்றி மறப்பது நன்றன்று' என்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பதனையும் நான் அறிவேன்.
என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
'இனிய உளவாக இன்னாத கூறல்' அவசியமா திரு.ஸ்ரீதர்?
- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.
ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!
ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, "என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!" என்று டைரக்டர் ஸ்ரீதரிட மிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்...
"என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெய லலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!
ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!
|