எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்ட£லும், அதில் முழு வெற்றி அடைவதையே லட்சிய மாகக் கொள்வார் வாசன். படத் துறையில் விநியோகஸ்தராகத் தான் அவர் முதலில் அறிமுகமானார். முதன்முதலில் மூன்று சிறிய சிரிப்புப் படங்களைத்தான் அவர் விநியோகிக்கும்படி நேர்ந் தது. இவரைத் தவிர வேறு யாரா வது விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தால், அந்தப் படங்கள் வந்த வழியே போயிருக்கும். திரு. வாசன் இந்த மூன்று சிறிய படங்களையும் இணைத்து 'சிரிக்காதே' என்ற தலைப்பில் வெளியிட்டார். முற்றிலும் புதிய விதமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இன்று 'முருகன்' தியேட்டராக உள்ள தியேட்டரில்தான் அன்று அந்தப் படம் ரிலீசாகி, வசூலில் தனி ரிக்கார்டை ஏற்படுத்தியது.
தேச பக்தி மிக்கவர் வாசன். நான் ஒருமுறை காங்கிரஸ் மீது வெறுப்படைந்து, கதர்ச் சட்டையைக் களைந்தேன். புதிய மில் உடைகளை அணிந்து வந்த என்னை, "இது என்ன வேஷம்? கதர் என்ன ஆயிற்று?" என்று கேட்டார் வாசன். காங்கிரஸ்காரர்கள் மீது எனக்கு ஏற்பட்ட வெறுப்பைச் சொன்னேன். "அதற்குக் கதர் என்ன செய்யும்? கதர் தேச பக்தியையும், ஏழைக்கு உதவும் தன்மையையும் அல்லவா காட்டுகிறது!" என்று சொல்லிக் கதரையே அணியும்படி வற்புறுத்தினார். அவர் சொல்லுக்கு நான் பணிந்தேன்.
|