அரக்கோணம் ரயில் நிலைய ஸ்டாண்டில் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தால், தமயந்தி அக்காவின் ஸ்கூட்டியில் மலர்... என்னைப் பார்த்ததுமே தமயந்தி அக்கா, "தனா வர்றான் மலரு... ரெண்டு பேரும் செம ஜோடி. போய் சுத்திப் போடுங்க. இன்னிக்கு கம்பார்ட்மென்ட்டே கண்ணுவெச்சுருச்சு" என்றது.
"ஆமாவா..." - மலர் கூச்சமாகச் சிரித்தது, தமயந்தி அக்காவின் வாய் முகூர்த்தம் பலித்துவிடக் கூடாதா என நினைத்தேன் தோழர்!
மறுநாள் ரஞ்சனியின் பர்த்டே. ஆவடியில் ஒரு பேக்கரிக்கு மேலே, நட்சத்திரங்களும் பலூன்களும் பூத்துக்கிடந்த மொட்டை மாடியில் கூடினோம் தோழர். மலருக்காக புதுச் சட்டையில் போயிருந்தேன். மலரால் பார்க்க முடியாது என்கிற ஞாபகம் இதயத்துக்கு இல்லையே தோழர். நான் தனியே ஒதுங்கி நின்றேன். புடவையில் வந்தது மலர், அரக்கு கலரில் பூக்கள் கொட்டும் புடவை.
ரஞ்சனி கேக் வெட்டி, தமயந்தி அக்காவுக்கு ஊட்டிவிட்டாள். மலர்விழி என்னிடம் வந்தது, "வாங்க தனா, போய் கிஃப்ட் குடுப்போம்."
"கிஃப்ட்டா... அய்ய, நமக்கு அந்தப் பழக்கம்லாம் கிடையாது மலர். நீங்க போங்க... என்னை மாதிரி அல்லக்கை எல்லாம் கடைசியா வந்து கை குடுத்துட்டு, ரெண்டு தடவை டிபன் சாப்பிடுவோம்."
'ஹாஹ்ஹாஹ்ஹா..." - சிரித்தபடி தான் வாங்கி வந்த கிப்ஃட் பேக்கை எடுத்து, மோகனிடம் கொடுத்து, 'ஹேப்பி பர்த்டே. பிரேயர்ஸ் அண்ட் விஷஸ் ஃப்ரம் மலர் அண்ட் தனா' என எழுதி வாங்கி என்னிடம் நீட்டியது.
"நீங்க குடுங்க தனா!"
எனக்கு பொலக்கென்று கண்ணீர் முட்டியது தோழர். எப்படி வந்தது இத்தனை பிரியம்!
ரஞ்சனிக்கு கிஃப்ட் கொடுத்து, இருவரும் இருபுறம் நின்று சிரித்ததின் மேல் பேரன்பின் பேரொளியாய் கேமரா ஃப்ளாஷ் மின்னியது.
"நீ சிந்தும் ரத்தத்தினால்
தூய்மை ஆகிறேன்
நீர் பட்ட காயத்தினால்
குணமும் ஆகிறேன்
எந்நாளும் உன்னைவிட மாட்டேன்
என் யேசய்யா எந்நாளும்
உன்னைவிட மாட்டேன்" - ஒரு யாசகர், டேப்படித்தபடி பாடிப் போன பின்னணியில் மலர் வந்தது.
"மலர் ஒரு நிமிஷம்... டிரெயினுக்கு 10 மினிட்ஸ் இருக்கு... இப்பிடி உட்காரலாமா?"
"ஆமாவா..."
"சும்மா தோணுச்சு... உனக்காக இதை வாங்கினேன்."
நான் எடுத்துத் தந்த இரண்டு மீன்கள் துள்ளும் ஹேர்க்ளிப்பை தடவித் தடவிப் பார்த்தது.
"ச்சும்மா, ஹேர் க்ளிப்தான்."
"எதுக்கு இதெல்லாம் தனா..?"
"ஏன் நான் தரக் கூடாதா?"
"ச்சேச்சே... அப்படி இல்ல" - சட்டென்று தலையில் இருந்ததை எடுத்துவிட்டு, புது ஹேர் க்ளிப்பை குத்திக்கொண்டு தலை சாய்த்துக் கேட்டது,
"நல்லாருக்கா தனா?"
"ஏய்... பின்னுது!"
"ஆமாவா..."
மறு நாள் ரயிலில் இறங்கி நடக்கும்போது, வேகமாகப் பின்னால் வந்து என் சட்டையை இழுத்த மலர், என் கையில் எதையோ திணித்தது தோழர்.
"எங்களுக்கு மட்டும் தோணாதா... வெச்சுக்கோங்க தனா. ஈவினிங் பார்க்கலாம்."
அது 'தனா' என எம்ப்ராய்டரி செய்த கர்ச்சீப் தோழர். நீல வண்ணத்தில் இழையோடிய எழுத்துக்களின் மேல் ஒரு பிறை நிலா. இதுவரை நிமிர்ந்து நாணா நிறை நிலா. இருளும் ஒளியுமற்ற மலரின் உலகில், இரவும் பகலுமாக நான் ஏந்தி தடம் காட்டப்போகும் தனி நிலா. மலர்... உன்னிடம் சீக்கிரம் என் காதலைச் சொல்வேன்!
கம்பார்ட்மென்ட்டில் ஜாஃபர் வீட்டு பிரியாணி மணந்தது. "மணி ஒலிப்பது எ... நெடில் அல்ல குறில்."
மலர்தான் ஆரம்பித்தது.
"எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை
உந்தன் மனது அறியுமே..."
"மனது... ம... குறில்" என்றார் ஆரோக்கியம் அண்ணன் என்னிடம்.
"மலரே மௌனமா...
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா...
பேசினால் ஓயுமா அன்பே
மலரே..." என நான் சிலிர்த்து இழுக்க, களுக்கென்று மலர் இதழ் உடைந்து சிரித்தது. கை விரல்களால் காற்றில் கோலம் போட்டு, சிணுங்கிச் சிரித்தது தோழர்.
பொசுக்கென்று விதிகள் மறந்து,
"சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா,
இன்னும் இருக்கா..." என இசை வழிந்தேன் தோழர்.
மலர் இன்னும் சிரிக்க, "ஓய்... என்ன இது போங்கு ஆட்டம்? செல்லாது... செல்லாது. ரெண்டு பேரும் தனியா அசத்தப்போவது யாரு நடத்துறீங்களா?" என தமயந்தி அக்கா சொல்ல, வெட்கம் பூசியது மலர்.
"ஆரோக்கியம் சார், தனா அவுட்டு. மலரைப் பாடச் சொல்லுங்க" என்றது அக்கா.
"மலர் 'த' வுல ஆரம்பி..."
புன்னகை கோத்த மலர், "தம்தன தம்தன தம்தனா தம் தனா..." என இழுத்து மறுபடியும் சிரிக்க, அத்தனை பேரும் சிரித்தனர் தோழர். புன்னகைதான்
மலருக்கு விழி. எனக்கு இனி மொழி. இதுதான் எங்களின் காதலுக்குப்
பிள்ளையார் சுழியோ?
மலருக்குச் சொல்வதற்கு முன் இதை தமயந்தி அக்காவிடம் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தபோதுதான், நீல் மெட்டலில் எனக்கு டிரெயினிங் தோழர்.
'குப்பை அள்ளியது போதும்' எனப் பெரிய மனது பண்ணி, எனக்கு சூப்பர்வைஸர் பிரமோஷன் போட்டு, 15 நாட்கள் டிரெயினிங். இரண்டு வாரங்கள் சென்னையிலேயே தங்க வேண்டும். மலர் வந்த நேரம் எனக்கு பிரமோஷன் தோழர்.
15 நாட்களுக்குப் பிறகு...
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கனவுகள் துள்ளக் காத்திருந்தேன். முதலில் தமயந்தி அக்காவிடம் சொல்ல வேண்டும். அடுத்து மலரிடம்...
'டேய்ய்ய்ய்... தனா!"
திரும்பினால் தமயந்தி அக்கா.
"அக்கா..."
"எப்படா வந்த?"
"இன்னிக்குத்தான்க்கா."
"மலர்தான் உன்னைத் தேடிட்டே இருந்துச்சு... உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!"
"என்னக்கா?" எனக்கு விழி மலர்ந்தது. அக்கா கைப்பையில் இருந்து ஒரு இன்விடேஷனை எடுத்துக் கொடுத்தது. மலருக்குக் கல்யாணம்!
"லவ் மேரேஜ்டா. அந்தப் பிள்ளை உன்கிட்ட நேர்ல இன்விடேஷன் குடுக்கணும்னுசொல்லிட்டே இருந்துச்சு."
பத்திரிகையைப் பிரித்துப் பார்க்கக்கூடத் தோணாமல், உறைந்து நின்றேன் தோழர்.
|