Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

காவல்?

தவிச்ச வாய்க்கு
தண்ணீர் கேட்டு
காலிக் குடங்களுடன்
சாலையை மறித்து நின்றது
பொதுஜனம்

விரைந்து வந்து
விரட்டியடித்தது போலீஸ்

அனுமதியின்றி
ஆற்றில் மணல் அள்ளியதாய்
லாரிகளைப் பிடித்துவைத்திருந்தார்கள்

அங்கும் வந்து
அடித்து விரட்டியது
அதே போலீஸ்

சொல்வனம்

பள்ளிக்கு அருகில் இருக்கும்
அரசு மதுக் கடையை
அப்புறப்படுத்தவேண்டி
ஆர்பாட்டம் செய்தார்கள்

இங்கும் அதே போலீஸ்
இன்றும் அதே அடி

கூடுதலாக...
ஊற்றிக் கொடுக்கும் பணிக்கு
ஊறு விளைவித்ததாய்
வழக்குப் பதிவும் செய்தார்கள்

இத்தனைக்கும்...
அடித்து நொறுக்கியவர்கள்
வந்த வாகனத்தில்
'காவல்'
என்றுதான்
எழுதப்பட்டிருந்தது!

- எம்.கோசலை ராமன்

அம்மாக்கள் அறிவார்கள்

சொல்வனம்

வெள்ளிக் கிழமைகளில்
வீடு திரும்பும் குழந்தைகள்
அம்மாக்களின் இடுப்பைக்
கட்டிக்கொள்கிறார்கள்

கழுத்தை வளைத்துக்
கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்

கண்களை மூடச் சொல்லி
ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்.
பிறகு, ஒவ்வொன்றாக
மூன்று விரல்களை மடித்து
கண்களைத் திறக்கச் சொல்கிறார்கள்.

இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி
இடதும் வலதுமாக அசைத்து

'டூ டேய்ஸ் லீவ்'
எனக் கூறும் குழந்தைகளின்
குதூகலத்தை

அம்மாக்கள் மட்டுமே
அறிகிறார்கள்!

- பாப்பு

குடை

சொல்வனம்

கொடிய மழை நாள் ஒன்றில்
உள்ளாடைகளின்
குளிர்ச்சி தாளாமல்
அதிக நேரம்
குடை குறித்துப் பேசியிருப்போம்.

கைக்கு அடக்கமான குடை
கை தவறிவிடுகிறது.

அளவில் பெரிய குடை
மறந்துவைத்துவிட்டாலும்
கிடைத்துவிடுகிறது.

பத்துப் பதினைந்து நாட்கள்
அடித்த சாரல் மழையில்
குடைகளின் விலை மலிவானது.

நகரப் பகுதிகளில்
மழை நாட்களில்கூட
சுடிதாருக்குப் பொருத்தமாய்
குடை பிடித்தபடி போகிறார்கள்
சில பெண்கள்.

குளிரோ,
மழையோ,
வெயிலோ,
வெளியில் கிளம்பினால்

குடை கொண்டுதான்
போவார்
கறுப்பான எங்கள்
ஆங்கில ஆசிரியை!

- நலங்கிள்ளி

புது மணம்

சொல்வனம்

பச்சை மணம் மாறாத
கேரட்டை
தூக்கிப் பிடித்தபடி ரசிக்கிறார்
விவசாயி

சற்று முன் பிறந்த குழந்தையைத்
தலை கீழாக
நிறுத்திப் பிடிக்கும்
மருத்துவச்சியைப்போல!

- தபசி

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்