'அப்போ - அகல்யாங்கறது...'
'அவனோட புனைப்பேரு! சரி, வா! படத்துக்குப் போவோம்!'
திருலோகமும் நானும் 'மனோகரா' படம் நடக்கும் - ஸ்டார் டாக்கீஸை நோக்கி நடந்தோம்!
பின்னாளில் - சென்னையில் 'கிளப் ஹவுஸ்' என்னும் இடத்தில் - நானும் நாகேஷ§ம் அறுபதுகளில் தங்கிக்கொண்டு - சினிமா வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது-
என் ரூமுக்கு ஒருவர் வருவார்; நான் ஆரம்பத்தில் ஓவியனாக இருந்தது அவருக்குத் தெரியும். அவரும் நல்ல ஓவியக்காரர். என்பால் அன்புகொண்டு அவ்வப்போது வந்து அளவளாவுவார்.
அவர் பெயர் திரு.கணபதிசுந்தரம். அவரிடம் நான் சொன்னேன்: 'கணபதியண்ணே! பல ஆண்டுகளுக்கு முன்னால் 'சிவாஜி' பத்திரிகையில் நான் ஒரு பாட்டைப் பாத்தேன். அது 'அருண் ராகவன்' இசையமைப்பிலே, ஒரு படத்துல வந்திருக்குது. பாட்டுப் புஸ்தகத்தெ வாங்கிப் பாத்தேன். எழுதியதுன்னு, உங்க தம்பி பேரு போட்டுருக்குதே!' என்று கேட்டுவிட்டு...
'ரெண்டு-
காசெ வெச்சா நிக்றபடி...'- அப்படீன்னு பல்லவியையும் சொன்னேன்.
'ஆமாம்! அது என் தம்பி எழுதிய பாட்டுதான்; பத்திரிகையில எழுதினதைப் படத்துக்குக் கொடுத்திருக்கிறான்!' என்றார் அவர்.
"பத்திரிகையில - எழுதியது 'அகல்யா'ன்னு போட்டிருந்துச்சே!" என்றேன் நான்.
"அவன்தான் 'அகல்யா'ன்னு, அப்ப புனைப்பேரு வெச்சுக்கிட்டு எழுதிக்கிட்டிருந்தான்; முழுப் பேரு - அ.கல்யாணசுந்தரம். அதுல முதல் நாலெழுத்தெ எடுத்து, 'அகல்யா'ன்னு வெச்சுக்கிட்டான்!' என்றார் கணபதிசுந்தரம்; அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சொந்த அண்ணன்!
பழையபடி - விட்ட இடத்திற்கு வருகிறேன். நானும் திருலோகம் அவர்களும், 'மனோகரா' படத்தைப் பார்த்தோம்.
|