பாடகரின் பெயர் ஸ்ரீராம். மனிதர் மூன்று மணி நேரம் அசராமல் பாடுகி றார். அங்கு இருந்த அனைவரும் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு, உருகி உருகிக் கேட்டார்கள். ஒரு பிரபல கதாநாயகி நடிகையும் இருந்தார். நடிகைகளின் பெயரைச் சொல்லவே பயமாக இருக்கிறது. வேண்டாம்! என் தமிழ் சினிமா இசை ரசனை விஸ்வநாதன் -ராமமூர்த்தி காலகட்டத்தோடு முடிந்து விட்டது.
பழைய சினிமா பாடல்கள் என்றதும் நான் எம்.கே.டி., பி.யூ.சின்னப்பா என்றெல்லாம் நினைக்கும் அளவு மோசம் இல்லை. ஆனால் கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் -ராமமூர்த்தி போன்றவர்களையாவது எதிர்பார்த்தேன். ஏ.எம்.ராஜா மற்றும் பி.பி.ஸ்ரீனிவாஸின் தீவிர ரசிகன் நான். பப் மெனுவில் அன்று இவர்களின் பாடல் இல்லை. எல்லாமே 80-களின் பாடல்கள். 'எப்படி... எப்படி?' என்று உற்சாகத்துடன் என்னைக் கேட்டுக்கொண்டு இருந்தார் பார்த்திபன். பயங்கரம், தூள், ரகளை என்று எனக்குத் தெரிந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன்.
It was a fantastic crowd என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்த நிலை யில் இருந்தார்கள் அவர்கள். பலரும் பாட்டுக்கு ஆடிக்கொண்டும் இருந்தார் கள். ஆனால், என் மனசெல்லாம் 80-களுக்கு முந்தைய பாடல்களில் இருந்தது. 'அமுதும் தேனும் எதற்கு?', 'அன்பு மனம் கனிந்த பின்னே', 'தேவன் கோயில் மணி ஓசை', 'யார் யார் அவர் யாரோ', 'நினைக்கத் தெரிந்த மனமே', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'பார்த்தால் பசி தீரும்', 'காலங்களில் அவள் வசந்தம்' என்று நூற்றுக்கணக்கான சாகாவரம் பெற்ற பாடல்களைக் கேட்க ஆசைப் பட்டேன். பப்பில் இந்தப் பாடல்களையும் வாரத்தில் ஒரு நாள் சேர்த்தால் என்னைப்போன்ற 'பழைய' ரசிகர்களுக்குப் பலன் உண்டு. பலரும் தமக்குப் பிடித்த பாடலைக் கேட்டு சீட்டு கொடுத்துக்கொண்டு இருந்ததால், எனக்குப் பிடித்த ஒரு பாடலுக்கு ('குணா'/கண்மணி) விருப்பம் கொடுத்தேன். துரதிர்ஷ்டம். கரோக்கியில் அது இல்லை.
இன்னொரு பாடல் கொடுத்தேன். 1975-ல் வெளிவந்த 'பட்டிக்காட்டு ராஜா' என்ற படத்தில் எஸ்.பி.பி. பாடிய 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்' என்ற பாடல். அது ஏன் எனக்கு அப்படிப் பிடித்துப்போனது என்று தெரியவில்லை. எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை. இசை ரசனை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அது ஒரு நாஸ்டால்ஜியா. கடந்த காலத்துக்குப் பயணிக்கும் கால எந்திரம்.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும் என் ஊர் நண்பர்களைச் சந்திக்கப் போகும்போது, மால் ரோட்டின் முனையில் இருந்த ஒரு தேநீர்க் கடையில் அந்தப் பாடலை நூற்றுக்கணக்கான தடவை கேட்டு இருக்கிறேன். என் முதல் காதலை அனுபவம்கொண்டதும் அப்போதுதான். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஊரை விட்டுத் தள்ளியிருக்கும் அந்தக் கல்லூரி. போகும் வழியில் முந்திரித் தோட்டங்களும் என் தேவதை படித்த கல்லூரியும் உண்டு. கல்லூரிக்குப் போகாமல், எந்த நேரமும் முந்திரிக் காட்டில் ஸாரி, ஸாரி... சரஸ்வதி மகால் நூலகத்தில் பழியாகக் கிடப்பேன்.
நான் இருந்தது வெங்கடேசப் பெருமாள் கோயில் தெரு. அந்த நாலு கால் மண்டபம், காசிக் கடைத் தெரு, ராணி வாய்க்கால் சந்து, மேல வீதி, அதையும் தாண்டி பிருந்தாவனம் என்ற அருமையான தோட்டம். அதில் இருந்த கிருஷ்ணன் கோயில், சிவகங்கைத் தோட்டம் என்று சுற்றாத இடம் இல்லை. இன்னொரு அற்புதம், பெரிய கோயில்! 20 வயதில் அப்படி ஓர் இடத்தில் பகல் முழுவ தும் அமர்ந்து, உலக இலக்கியங்களைப் படிக் கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்?
|