'என் மகனைக் கவிஞனாக்கி - என் மணாளனைப் புறங்கண்ட புலவனை - என் மகனைக்கொண்டே வீழ்த்துவேன்!'
'கற்றுப் பெறுவதல்ல கவித்துவம்; அது கடாட்சத்தால் பெறுவது!' என்கிறார் முனிவர்.
'சரஸ்வதி கடாட்சத்தை என் மகன் பெற - நான் சாகவும் தயார்!' என்கிறாள் தாய்!
'நான் - ஒரு மந்திரம் சொல்வேன்; அதை சவத்தின் மீதமர்ந்து உன் சேய் திரும்பத் திரும்பச் செபித்தால் - நாழிகைப் போதில் நாமகள் கடாட்சம் கிட்டும். ஆனால், பிரேதத்தின் மீது உன் பிள்ளை பயப்படாமல் அமர வேண்டுமே!' என்றார் முனி.
'முனிபுங்கவரே! நானே என் மகனை என் நெஞ்சின் மேல் அமர்த்தி - நீங்கள் உபதேசித்த மந்திரத்தை ஓதுவேன்; மழலைச் சொல்லால் என் மகன், அதைத் திருப்பித் திருப்பி மொழிந்தவாறிருக்கையில் - நான் மெல்ல மெல்ல, ஒரு கத்தியால் என் கழுத்தை அரிந்துகொண்டே வருவேன்; நான் சவமானது தெரியாமல் என் சேய் - அந்த மந்திரத்தைச் செபித்துச் செபித்துக் கவிஞனாவான்!' என்று கனலையும் புனலையும் கண்கள் கக்கக் கூறினாள் அந்த அன்னை!
அன்னணமே செய்தாள்; செத்தாள்; பிரேதத்தின் மீதமர்ந்து மந்திரம் செபித்த மகன், கவித்துவம் வரப்பெற்று...
தந்தையைத் தோற்கடித்தவனை வாதுக்கழைத்து, அதே அரசவையில் வென்று காட்டினான்!
அந்த மகன்தான், பின்னாளில் வட மொழியில் 'காவ்ய தர்சனம்' எனும் நூலை யாத்து - உஜ்ஜயினியில் இன்னொரு காளிதாசனாய் உலா வந்த -
மகாகவி வித்யாபதி!
'காளிதாசன் கம்பன் முதலிய வரகவிகளுக்குக் காளி - வாக்கில் எழுதிய கால முதல், அநாயாசமாகக் கவி சொல்ல வாய்ந்ததையும்; குமரகுருபரர்
ஐந்தாவது ஆண்டில் அரும்பாக்கள் இயற்றினார் என்ற கதையினையும் - அபூர்வக் கற்பனைகள் என்று புறக்கணித்த நான்...
பாரதியார் ஏழாவது வயதில் பாடல் இயற்றித் தமிழ்வாணர்கள் மெச்சும்படி காட்டிய திறமையை, நேரில் கண்டபொழுதுதான் - கேவலம் படிப்பினால் பாவன்மை வராது; கவிகள் பிறப்பிலேயே அமைய வேண்டும் என்று அறிந்தேன்!'
- இது, 'பசுமலைப் புலவர்' திரு.சோமசுந்தர பாரதியார் அவர்கள் சொன்னது!
|