பெருநகரத்தின் வண்ண ஒளி விளக்குகளுக்கு மத்தியில் மெல்லிய இசை கேட்டுக்கொண்டே லேப்-டாப்பில் சிலாகித்துக்கிடக்கும் இளைஞனின் காதுகளுக்கு வல்லரசு இந்தியாவின், வயிற்றுப் பசி சத்தம் விழவே இல்லை.
60 சதவிகிதம் மக்கள் நம்பி இருக்கும் விவசாயம் வீழ்ந்துகொண்டே இருப்பதைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், வெறும் அரை சதவிகிதம் பேர் பணி செய்யும் ஐ.டி. கட்டடங்களை அண்ணாந்து பார்த்து, 'அடேயப்பா!' சொல்லி நாமே மார்தட்டிக்கொள்கிறோம்.
பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் 4 கோடிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை, இன்னும் எட்டிப் பார்க்கவே இல்லை. 47 சதவிகித குழந்தைகளுக்கு இன்னமும் ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. உயிரைக் கொல்லும் ஹெச்.ஐ.வி-யின் வீரியம் இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது.
இதையெல்லாம் சரி செய்வது அரசாங்கத்தின் வேலை என்று இனியும் தொடர்ந்து பார்வையாளனாக இருப்பதில் அர்த்தம் இல்லை. அடுத்து, இந்தியா என்ன செய்யப் போகிறது என்று உலகம் காத்துக்கிடக்கிறது. இனியும், மாசக் கடைசி மனோபாவத்தோடு சுருங்கிப்போக வேண்டியது இல்லை.
மேற்சொன்ன பிரச்னைகள் வேறு எந்த தேசத்தில் இருந்தாலும், அது மிகப் பெரிய சவால்தான். ஆனால், உலகின் மாபெரும் இளைஞர் சக்தியை வைத்திருக்கும் இந்திய தேசத்துக்கு அவை ஒரு பிரச்னை இல்லை. மக்கள் தொகையில் பாதிப் பேரை இளைஞர்களாகக்கொண்டு இருப்பதைத் தவிர, வேறென்ன தகுதி வேண்டும் ஒரு வல்லரசுக்கு!
உண்மையில், ஒரு வல்லரசு தேசத்துக்கு உரிய எல்லா தகுதிகளையும் வைத்துக்கொண்டு, அதை அடைய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.உலகத்தையே கட்டி ஆளுகிற அறிவையும் அதிகாரத்தையும் வைத்திருக்கிற இந்திய இளைஞர் கூட்டம், தேச வளர்ச்சி என்ற நீரோட்டத்தில் தன்னை நேரடியாக இணைத் துக்கொள்கிறபோது, வல்லரசு என்ற அதிகாரம் தானாக வந்து சேரும்.
அடைத்துவைத்திருக்கிற ஜன்னல்களைத் திறங்கள்... இந்த தேசத்தின் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கிற உழைப்பையும் ஞானத்தையும் ஒன்றிணையுங்கள், சமூகத்தின் அத்தனை தளத்தையும் சமமாக்குங்கள்.
இத்தனை இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், வரலாறு நம்மைக் கேலி பேசிவிடும். பலம் படைத்தவன்தான் அதிகாரம் செய்ய வேண்டும். உலகின் மிகப் பெரிய இளைஞர் சக்தியை வைத்திருக்கிற இந்தியாதான், உலகத்தை அதிகாரம் செய்யத் தகுதியான தேசம்... அந்த நினைப்பும் நம்பிக்கையும் நம் அனைவரின் நெஞ்சுக்குள்ளும் எரியட்டும்!
இந்த தேசத்தின் கோளாறுகளுக்குக் கவலைப்படுவதையும் கண்மூடித்தனமாக அதை விமர்சனம் செய்வதையும் நிறுத்திவிட்டு, களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த உணர்வும் தீவிரமும் உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லும், எந்த தேசம் வல்லரசு என்று!
என்னைப் பொறுத்தவரை அறிவார்ந்த, சமூகப் பார்வைகொண்ட இளைஞர்களைக் கையில் வைத்திருக்கிற இந்திய தேசம்தான் என்றைக்கும் வல்லரசு!
ஜெய் ஹிந்த்!
|