மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 19

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 19

மனம் கொத்திப் பறவை! - 19
மனம் கொத்திப் பறவை! - 19
மனம் கொத்திப் பறவை! - 19
மனம் கொத்திப் பறவை! - 19

ண்கட்டு வித்தை என்கிறோம்; மேஜிக் என்கிறோம்; அதில் இன்று உலக அளவில்

பிரபலமாகி இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ப்ளேய்ன் (David Blaine). தண்ணீரில் நடக்கிறார். தீயில் மூழ்கி எழுகிறார். பிச்சைக்காரர்களின் டப்பாவைத் தொட்டால், டாலர்களால் நிரம்புகிறது. ஒரு முறை, ஒரு டாக்ஸி டிரைவரை அழைத்து லாட்டரிச் சீட்டை வாங்கச் சொல்கிறார். அந்த டிக்கெட்டைச் சுரண்டினால், அதில் உள்ள நம்பருக்குத்தான் அன்றைய தினம் லாட்டரி அடிக்கிறது. காலி பீர் கேனைத் தன் கையால் தொடுகிறார்; கேன் உள்ளே பீர் நிரம்பி வழிகிறது.

சாலையில் சென்றுகொண்டு இருக்கும் ஒருவரிடம் 1 முதல் 50-க்குள் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளச் சொல்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் கார் ஒன்று சைரன் சத்தத்துடன் செல்ல, 'இந்த சைரன் சத்தத்தில் நீங்கள் நினைத்தது என் காதில் விழவில்லை; கொஞ்சம் பொறுங்கள்' என்று ஜோக் அடித்துவிட்டு, அவர் நினைத்த எண் 37 என்று சரியாகச் சொல்கிறார். ஒரு பெண்ணிடம் இருந்து அவள் கையில் அணிந்து இருக்கும் மோதிரத்தை வாங்குகிறார். 'ஐயோ, இது என் காதலன் வாங்கிக் கொடுத்தது; எதுவும் செய்துவிடாதீர்கள்' என்று அந்தப் பெண் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, மோதிரம் டேவிட்டின் கையில் இருந்து நழுவிக் கீழே விழுந்துவிடுகிறது. தரையில் அல்ல; உடைந்து இருந்த பிளவின் வழியே பாதாள சாக்கடையில். கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் 'எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்' என்று சிரித்தபடி சொல்லும் டேவிட், அங்கே கூடைப் பந்து ஆடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களை அழைத்து, 'உங்கள் பந்துக்குள் இந்தப் பெண்ணின் மோதிரம் இருக்கிறதா பாருங்கள்?' என்கிறார். 'என்னது, பந்துக்குள் மோதிரமா?' ஆர்வத்துடன் இளைஞர்கள் பந்தைக் கிழித்துப் பார்த்தால், உள்ளே அந்தப் பெண்ணின் மோதிரம். அந்த மோதிரத்தில் அவளுடைய இனிஷியல் மிகச் சிறிதாகப் பொறிக்கப்பட்டு இருக்கும். சந்தேகமே இல்லை; அவளுடைய மோதிரமேதான்.

மனம் கொத்திப் பறவை! - 19

இதுபோல் ஆயிரக்கணக்கில் தெருமுனை மேஜிக்குகளை நிகழ்த்துகிறார் டேவிட். இதில் ஒரு முக்கியமான விஷயம், மற்றவர்களைப்போல் மேடையில் இல்லை; எந்த முன்னேற்பாடுகளும் தளவாடங்களும் இல்லாமல், யார் தெருவில் போகிறார்களோ அவர்களை அழைத்து, நம் கண் முன்னாலேயே செய்கிறார். ஓர் ஆளிடம் இருந்து மோதிரத்தை வாங்கி விழுங்குகிறார். அந்த மோதிரம் டேவிட்டின் வயிற்றுத் தோலைத் துருத்திக்கொண்டு தெரிகிறது. அப்படியே அதைப் பிய்த்து எடுத்து, சுத்தப்படுத்திக் கொடுக்கிறார். ஒரு முறை அப்படி ஒரு பொருளைத் தன் கண்ணின் வழியே எடுத்தார். டேவிட் ப்ளேய்னின் சாதனைகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது... நியூயார்க்கில் ஆறு டன் ஐஸ் பாறையின் உள்ளே 63 மணி நேரம் இருந்ததுதான். பாறைக்கும் அவர் உடம்புக்கும் இடையே இருந்த தூரம் ஆறு

மனம் கொத்திப் பறவை! - 19

இஞ்ச் மட்டுமே. இது எந்த மனிதனாலும் இயலாத காரியம் என்று கருதப்படுகிறது. உடல் நிலை தேறுவதற்கு அவருக்கு ஒரு மாதம் ஆகியது. இன்னொரு முறை நியூயார்க்கின் பிரைண்ட் பார்க்கில் உள்ள 100 அடி உயர தூணின் மேலே ஒரு கிரேன் மூலம் போய் நின்றுகொண்டார். தூணின் விட்டம் வெறும் 22 இஞ்ச். கடுமையான காற்று. மே மாதத்தில் எப்போதும் இல்லாத குளிர். அப்படியே 35 மணி நேரம் நின்றார். பிறகு, கால் வலிக்கிறது என்று குதித்துவிட்டார். அதற்காக கீழே 12 அடி உயர காட் போர்டு அட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தச் சாதனையின்போது அவர் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

இதை எல்லாம் எப்படிச் செய்கிறீர்கள் என்று ஒரு முறை அவரைக் கேட்டபோது, 'மிகக் கடினமான பயிற்சிகளை மேற்கொள்கிறேன்' என்று சொல்லி டேவிட் தேம்பித் தேம்பி அழுதுவிட்டார். ஆனாலும், டேவிட்டின் சித்து வேலைகள் வெறும் கேளிக்கை மட்டுமே. நம் ஊரில் சித்தர்கள் அதைத் தத்துவமாகவும் வாழ்வியல் நெறியாகவும் மாற்றினார்கள். 10-ம் நூற்றாண்டில் காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவருக்குத் திடீரென்று தன் மகனாக வந்த இறைவனின் மூலம் 'காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே' என்ற உபதேசம் கிடைக்கிறது. (மேலே போகும்போது, காது அறுந்த ஊசிகூட உன்னுடன் வராது). அவ்வளவுதான். அந்தக் கணமே துறவி ஆகி ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார். 'வேண்டாம்; துறவைத் துறந்துவிடுங்கள்' என்று ஊர்ப் பெரியவர்கள் அவரை வேண்டியபோது, 'அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே; விழிஅம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இருகைத் தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே' என்று ஒரு பாடலைப் பாடுகிறார். (ஞாபகம் வருகிறதா; வீடு வரை உறவு.) அந்தத் துறவியின் பெயர் பட்டினத்தார்.

அவர் இப்படிப் பிச்சை எடுத்துத் திரிவது அவருடைய சகோதரிக்குப் பிடிக்கவில்லை. அவரால் குடும்பத்துக்கு அவமானம். அவரைக் கொன்றுவிடலாம் என்று அப்பத்தில் விஷமிட்டுத் தருகிறாள். அப்போது பட்டினத்தார், 'தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று சொல்லி, அப்பத்தைக் கூரையில் விட்டெறிகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது. ஒரு முறை அவர் பிச்சை எடுக்கும்போது அவரை ஒருவன் அவமானப்படுத்திவிடுகிறான். உடனே, 'இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் - பெருக்க அழைத்தாலும் போகேன்' என்று பாடுகிறார்.

ஒரு முறை உஜ்ஜயினியில் தவத்தில் இருந்த அவரை சிலை என்று எண்ணி, ஒரு கள்வர் கூட்டம் அரண்மனை நகை ஒன்றைக் கழுத்தில் போட்டுச் சென்றுவிடுகிறது. அரசன் பத்ரகிரி இவரைக் கள்வன் என்று எண்ணி, கழுமரத்தில் ஏற்றிக் கொல்ல ஆணையிடுகிறான். அப்போது 'என் செயல் யாதொன்றும் இல்லை; எல்லாம் உன் செயல்; இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை; பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே' என்று பாட, கழுமரம் தீப்பற்றி எரிகிறது. அதைப் பார்த்த பத்ரகிரி பட்டினத்தடிகளின் சீடர் ஆகிறார்.

கடைசியில் திருவொற்றியூரில் மணலுக்குள் மறைந்து சிவலிங்கமாக வெளிப்பட்டார் பட்டினத்தார். அவ்வப்போது திருவொற்றியூர் சென்று அந்த லிங்கத்தைத் தரிசித்து, அங்கே அமர்ந்து தியானித்து வருவது என் வழக்கம். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றில் இருந்து விடுபட வேண்டி, அவருடைய பாடல்களையும் அடிக்கடி படிப்பேன். அதில் ஒரு முக்கியமான ஆசையை விடுவதற்கு பட்டினத்தடிகள் பாடிய பாடல் இது: 'எத்தனைபேர் நட்டகுழி, எத்தனைபேர் தொட்டமுலை, எத்தனைபேர் பற்றிஇழுத்த இதழ், நித்தநித்தம் பொய்யடா பேசும்புவியில் மடமாதரை விட்டுஉய்யடா, உய்யடா, உய்!'

த்த அழுத்தத்தை அதிகரிக்கும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் என்று டாக்டர் சொல்லி இருந்ததால், கடந்த ஒரு மாதமாக நான் தினசரிகளைப் படிக்காமல் இருந்தேன். பிறகு, அது சரியல்ல என்று தோன்றியது. 'நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளாமல் ஒரு பத்திரிகையில் பத்தி எழுதலாமா?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு, சில தினங்களுக்கு முன்பு செய்தித்தாளைக் கையில் எடுத்தேன். முதல் பக்கச் செய்தி. போலீஸ் சுட்டு இரண்டு மாணவர்கள் மரணம்! என்ன கொடுமை இது? போலீஸை, நக்சலைட்டுகளும் தீவிரவாதிகளும் சுடுகிறார்கள். பதிலுக்கு போலீஸ், மாணவர்களைச் சுடுகிறதா? சீனாவில் கிண்டர் கார்டன் குழந்தைகளைச் சமூக விரோதிகள் கொன்று குவிக்கிறார்கள் என்று எழுதி இருந்தேனே, அதுபோல் இந்தியாவில் போலீஸ்காரர்கள் ஆரம்பித்துவிட்டார்களா?

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்காக 'போலீஸைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்ற நிகழ்ச்சி. அதில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுவது எப்படி என்று காண்பித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் ஆர்வக் கோளாறில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு இருந்த துப்பாக்கியின் ட்ரிக்கரில் விரல்வைக்க, சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பலி. ஒரு மாணவன் கவலைக்கிடம். போலீஸைத் தெரிந்துகொள்ளுங்கள்... தெரிந்துகொண்டுவிட்டோம். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில், ஒரு சிறிய தண்டனையோடு மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுவார். குழந்தைகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. இந்தச் செய்தியைப் படித்து உண்மை யில் என் ரத்தம் கொதித்தது!

மேற்கு ஐரோப்பிய நகர் ஒன்றில் இப்படி நடந்து இருந்தால் அந்த தேசமே தீப்பற்றி எரிந்து இருக்கும். சும்மா சொல்லவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 27-ம் தேதி பாரிஸ் நகரில் ஒரு சம்பவம். போலீஸ் சில இளைஞர்களிடம் அவர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டார்கள். போலீஸின் அநாவசியக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக ஓடியவர்களை போலீஸ் விரட்டியது. சுவர் ஏறிக் குதித்தபோது மின்கம்பி தாக்கி, இரண்டு இளைஞர்கள் இறந்தார்கள். அவர்கள் ஃபிரான்ஸில் வசிக்கும் லட்சக்கணக்கான அகதிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக ஃபிரான்ஸ் தேசமே எரிந்தது. 274 நகரங்களில் கலவரம். 9,000 வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசுக்கு ` 1,200 கோடி இழப்பு. மூன்று மாதங்கள் அவசர நிலைப் பிரகடனம். அப்போது, உள்துறை மந்திரியாக இருந்த சார்க்கோஸியை, இறந்த இளைஞர் களின் பெற்றோர் சந்திக்க மறுத்துவிட்டனர். நான் வன்முறைக்கு ஆதரவாக இதை எழுத வில்லை. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. இரண்டு இளைஞர்களின் உயிர் அநியாயமாகப்போனதால் நேர்ந்த சம்ப வங்கள் அவை. ஆனால், இங்கே இரண்டு பள்ளி மாணவர்கள் போலீஸின் கவனக்குறை வால் செத்தால், அது ஒரு செய்தி மட்டுமே. மறு நாள் இதேபோல் 'டாக்டரைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். மருத்துவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. கண் பார்வை குறைந்தவர்களுக்கு, அவ்வப்போது கண் சிகிச்சை முகாம்கள் நடப்பது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் அப்படி ஒரு முகாம் நடந்தது. கண்ணில் பிரச்னை இருந்தவர்கள் சிகிச்சை செய்துகொண்டார்கள். 45 பேருக்குப் பார்வை பறிபோனதுதான் மிச்சம். எப்போ தாவது விபத்துகள் நடக்கலாம். ஆனால், இந்தியாவில்தான் சிகிச்சை செய்கிறோம் என்று சொல்லி, நம் கண்களைக் குருடாக்குகிறார்கள்; 'போலீஸைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று கூப்பிட்டு, நம் குழந்தைகளை சுட்டுக் கொல்கிறார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 19
மனம் கொத்திப் பறவை! - 19

அது சரி, மாணவர்கள் ஏன் துப்பாக்கிபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? துப்பாக்கி என்பது மனித உயிர்களைக் கொல்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி; மனித நாகரிகத்தின் அவலங்களில் ஒன்று. துப்பாக்கியே இல்லாத சமூகம் உருவாவதைப்பற்றி அல்லவா மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அன்பையும் பண்பையும் போதிக்க மறந்துவிட்ட நாம், நம் குழந்தைகளுக்கு இவ்வாறாக வன்முறையைப் போதித்துக்கொண்டு இருக்கிறோம். செய்தித்தாள் அலர்ஜிக்கு இன்னொரு காரணம், அதில் வரும் செய்திகளின் லட்சணம். ஒரு அப்பாவை மகன் சென்று பார்த்து, தன்னுடைய மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுக்கிறார். இது ஒரு செய்தியாக புகைப்படத்துடன் வருகிறது. அநியாயத்துக்கு ஓர் அளவு இல்லையா? கருணாநிதியும் அழகிரியும் தங்கள் குடும்ப விஷயமாகப் பார்த்துக்கொண்டதைத் தெரிந்துகொள்வதற்காகவா நாம் தினசரிகளை வாங்குகிறோம்? கேட்டால், முதல் மந்திரியை, மத்திய மந்திரி சந்தித்தார் என்கிறார்கள். எதற்குச் சந்தித்தார்? நாட்டின் முன்னேற்றம் அல்லது செயல் திட்டங்களைப்பற்றிப் பேசுவதற்கா?

மனம் கொத்திப் பறவை! - 19
மனம் கொத்திப் பறவை! - 19

- பறக்கும்...