ஸ்கூல் பையனா இருக்குறப்போ, காலேஜ் போற பசங்களைப் பார்த்தா, செம காண்டா இருக்கும். ஒரே ஒரு புக்கை விரல்ல சுத்திக்கிட்டே போறதைப் பார்த்தா, ராவாக் குடிச்சா மாதிரி எனக்கு வயிறெல்லாம் எரியும். நமக்கு மட்டும் ரோடு ரோலர் லோடு கணக்கா புத்தகப் பை. இவனுங்களுக்கு சிங்கிள் புக்கானு பொருமித் தவிப்பேன். அதுவும் இல்லாம, ஒவ்வொரு பையனும் தன்னோட நிறம், மணம், குணத்துக்கு ஏற்ப ஒரு ஃபிகரைக் கட்டம் கட்டி கூட்டினு போயிட்டே இருப்பானுங்க. அதை எல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பார்த்து, ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவோட திரிவோம். இதுக்காகவே நாம எப்படா காலேஜ் போவோம்னு காத்துட்டு இருந்தேன். ஆனா, அங்கதான் ஆண்டவனே எனக்குவெச்சான் ஆப்பு!
அப்பா, என்னை பாலிடெக்னிக்ல சேர்த்துவிட்டாரு. புஸ்தகத்தோட... ஸ்கேல், காம்பஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், ரப்பர்லாம் எடுத்துட்டுப் போகணும். மெகா சீரியல் கணக்கா, நம்ம வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் பார்த்தீங்களா?
ரொம்ப வெறுத்துப்போய், ஒருநாள் நானும் ரெண்டு ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸும் கிளாஸ் கட் அடிச்சுட்டுக் கிளம்பிட்டோம். அதுல ஒருத்தன் ஏற்கெனவே மூணு பொண்ணுங்களை உஷார் பண்ணிவெச்சிருந்தான். அவங்களைக் கூட்டிட்டு (தள்ளிட்டு இல்லீங்க!) பீச்சுக்குப் போனோம். மொளகா பஜ்ஜி சாப்பிட்டு, கடலை வாங்கி, கடலை போட்டு, காத்தாடிவிட்டு, கட்டக்கடைசியா வந்த இடம் பீச் ஸ்டுடியோ. ஜோடி ஜோடியா சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டோம். 'அட்ரஸ் தாங்கப்பா... வூட்டுக்குப் போட்டோ வித் நெகட்டிவ் அனுப்புறேன்'னு போட்டோகிராஃபர் சொன்னார். 'நீ என் வூட்டுக்குப் போட்டோ அனுப்புனா... என்னை வீட்டைவிட்டே அனுப்பிடுவாங்க'ன்னு நான் நழுவிட்டேன். 'கூல் மச்சி... இதெல்லாம் ஒரு மேட்டரா?'ன்னு ஹாஸ்டல் பையன் ஒருத்தன் அட்ரஸ் எழுதிக் கொடுத்தான். வீட்டு அட்ரஸ் எழுதிக் கொடுத்திருப்பான்னு நினைச்சா, நாதாரிப் பய... ஹாஸ்டல் அட்ரஸ் எழுதிக் கொடுத்திருக்கான். ஹாஸ்டலுக்கு வர்ற லெட்டர் எல்லாமே நேரா பிரின்ஸிபல் டேபிளுக்குத்தான் போகும். அவர் பிரிச்சுப் பார்த்து, கையெழுத்துப் போட்டு, ஹாஸ்ட லுக்கு அனுப்பி, அதை ஹாஸ்டல் வார்டன் சரிபார்த்து, அவர் பங்குக்கு முத்திரை பதிச்சுதான், பசங்களுக்குத் தருவாரு. இது ஹாஸ்டல் விதி. அதுல சிக்கிச் சின்னாபின்னமானது எங்க விதி!
'என்னடா, ஸ்டுடியோவில் இருந்து லெட்டர் வந்திருக்கு?'ன்னு பிரிச்சுப் பார்த்த பிரின்ஸிபல், பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டார். 'ஏதோ மேட்டராம். சந்தானமும் ரெண்டு சகலபாடிகளும் அப்பா வைக் கூட்டிட்டு ஆஜர் ஆக ணும்'னு ஆள் அனுப்பி, தாக்கல் சொன்னாங்க. அப்பாவைக் கூட்டிட்டு பிரின்ஸிபல் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே பதறிட்டேன். வீட்டுல பிள்ளையார் படத்தைப் பெரிய சைஸ் பிரின்ட் போட்டு மாட்டி இருப் பாங்கல்ல... அந்த சைஸ்ல பிரின்ஸிபல் எங்க போட்டோவை பிரின்ட் போட்டு, தலைக்கு மேல மாட்டிவெச்சிருக்கார். அப்பாவைப் பார்த்ததும், 'வாங்க சார், உங்க மருமகளைப் பார்த்தீங்களா?'ன்னு எரியுற நெருப்புல பெட்ரோல் குண்டைப் பிச்சு வீசுறாரு. அப்பா கண் சிவந்து, நின்ன மண் சிவந்து, லுக்விட்டார். அதுக்கு என்ன அர்த்தம்னா... 'மவனே வூட்டுக்கு வா... உரிச்சு உப்புக்கண்டம் போட்றேன்!'
கொத்து பரோட்டா ஆகி வெளியில் வந்தா, மத்த ரெண்டு பசங்களும் விவரம் தெரியாம சிரிச்சுட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். இத்தனைக்கும் போட்டோவில் நான் பொண்ணுககிட்டே இருந்து ரெண்டு அடி தள்ளி நிக்குறேன். |