மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind... - 03

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind... - 03

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03
வாலி
ஓவியம்:மணி, படம்:கே.ராஜசேகரன்
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03

நம்பிக்கை நம் மூன்றாம் கை!

ந்தோனேஷியாவில் வசித்தபோது - இந்திய நண்பர்கள் வழங்கியதாம்;

அழகிய

அனுமார் சிலை -

பராக் ஒபாமாவின்

பாக்கெட்டில்! ஆம்;

கறுப்புக்குப் பிறந்தவன் பையில் -

காற்றுக்குப் பிறந்தவன்!

வெள்ளை இருட்டு

வீற்றிருந்த இடத்தில் -

கறுப்பு வெயிலைக்

காற்றுதான் உட்கார்த்தியது என்று...

ஒருவேளை

ஒபாமா எண்ணியிருக்கலாம்;

நம்பிக்கைதான் - மனிதனை

நகர்த்துகிறது!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03

ந்தியாவிற்கு ஒரு படப்பிடிப்புக்காக வர - இந்தியா பிடித்துப்போக...

'ப்ரெட்டி வுமன்' புகழ் ஜூலியா ராபர்ட்ஸ் கையில் - பகவத் கீதை!

உலகு

உச்சி முகர்ந்து பாராட்டும் -

உச்ச நட்சத்திரத்தின்

உதட்டு நாற்காலிகளில்...

வட மொழி ஸ்லோகங்கள் இப்போது

வீற்றிருக்கின்றன!

'முன்னம் என் உளம் - கல்லெறிந்த குளம்;

இப்போது நிச்சலமான நீர்நிலை!' -

என்கிறார் ஜூலியா!

நம்பிக்கைதான் - மனிதனை

நகர்த்துகிறது!

தெருப் பாடகர்களாகத்தான் வாழ்க்கை தொடங்கியது;

அதன் பின் அவர்கள்தாம் அகிலத்தின் அனைத்துச் செவிகளையும் அடகுபிடித்தவர்கள்!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03

'பீடில்ஸி'ன் பிரசித்தத்தில், விழி பிதுங்கி நின்றது பிரபஞ்சம்; வாலிபத்தை வசமிழக்கச் செய்வதில் DRUGS தோற்றன; DRUMS வென்றன! நாளங்களில் நெருப்பு மூட்டவல்ல தாளங்களில் - வெளிப் போந்தன அவர்களது வர்ண மெட்டுகள்; நில நடுக்கம் வராமலேயே, நிலம் நடுங்கியது - அவ்வளவு அதிரடியான PERCUSSION!

சமயக் குரவர் நால்வர்போலிருந்த, அந்த சங்கீதக் குரவர் நால்வரும்...

பட்டை உரிக்கும் பால்மரம்போல்; சட்டை உரிக்கும் சருப்பம்போல் -

புகழைப் பொருளைப் 'பொக்'கென ஒரே நாளில் உரித்துப்போட்டனர்; BASS GUITAR-களிலிருந்தும், BANGOS-களிலிருந்தும், தமது விரல்களையும்; POP-களிலிருந்தும், RAP-களிலிருந்தும், தமது குரல்களையும் விடுவித்துவிட்டு...

இமய மலைச் சாரலில் இளைப்பாறிக்கொண்டிருந்த -

மகேஷ் யோகியின் மாணாக்கரானார்கள்; ஓசைகளால் உலகை ஆண்டவர்கள், ஓசைகள் ஒடுங்கிப்போய் உள்ளளி கண்டதாய் உரைத்தார்கள்!

நம்பிக்கைதான் - மனிதனை

நகர்த்துகிறது!

வ்வொரு முறை செஞ்சுரி அடிக்கும்போதும் -

பெவிலியனுக்கு பேட்; விசும்பிற்கு விழி; என உயர்த்திக் காட்டி நன்றி உரைப்பது, சச்சினின் சம்பிரதாயம்!

'அ'னாவில்தான் - படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது, அமரர் திரு.ஏவி.எம் அவர்கள் காத்து நின்ற மரபு!

அஞ்சாம் ரீலில்தான், ரீ-ரிக்கார்டிங்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது - மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.வி அவர்களின் சென்டிமென்ட்!

பாடல்களின் மேல் - ஸ்வரங்களைப் பென்சிலால்தான் குறித்துக்கொள்வார் - வெண்குலக் குரல் வேந்து, திரு.டி.எம்.எஸ் அவர்கள். பென்சில் சீவ ப்ளேடும் எடுத்து வருவார்!

தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத் தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பதில், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். படங்களின் பெயர்களும் கூடிய வரையில் ஏழெழுத்தில் வருவதை விரும்புவார். உதாரணம்-'நாடோடி மன்னன்'; 'அரச கட்டளை'; 'உரிமைக் குரல்'; இத்தியாதி இத்தியாதி!

'ம'; 'மா'; 'மு'; என்று மகர வரிசையில் நான் அவரோடு எழுதும் பாடல்கள் தொடங்கப்பெற்றால், அவை பெரிதும் ஹிட் ஆகின்றன என்பது திரு.ஏ.ஆர்.ரஹ்மானின் கணிப்பு; உதாரணங்கள்:

'முக்காபுலா';

'முஸ்தாபா';

'மரியா! மரியா!';

'மாயா! மாயா!';

'மாயா மச்சீந்தரா!'

'மயிலிறகே!'

'மருதாணி உன் விழியில்!'

- படம்: 'சக்கரைக்கட்டி'/

'மச்சான்! மச்சான்! மச்சான்!'

- படம்: 'சிவாஜி'/

'முன்னால் முன்னால் முன்னால் போடா! தோழா!' - படம்: 'அழகிய தமிழ் மகன்'/

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03

'அன்பே! வா! முன்பே வா!' என்று நான் எழுதியதை, ரஹ்மான்தான் மாற்றினார் - 'முன்பே வா! அன்பே! வா!' என்று; பாட்டு - பேய் ஹிட்! பாட்டைப் பாடிய ஷ்ரேயா கோஷல், அரசு விருது பெற்றார் - அந்தப் பாடலுக்காக!

நம்பிக்கைதான் - மனிதனை

நகர்த்துகிறது!

ரு படம். இயக்குநர் திரு. ஏ.காசிலிங்கம் அவர்கள்; இசை திரு.டி.ஆர்.பாப்பா அவர்கள்.

நான் பாடல் எழுத உட்கார்ந்தேன்; மணி, பகல் பத்தரையை நெருங்கிக்கொண்டிருந்தது.

'ராகு காலம் நெருங்குகிறது; முதலில், ஒரு பிள்ளையார் சுழியைப் போடும்!' என்றார்

திரு.பாப்பா அவர்கள்.

'படத் தயாரிப்பாளர் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்; ஆகவே, நான் பிள்ளையார் சுழியைப் போட்டு, அவர் மனம் வருத்தப்பட வைப்பானேன்!' என்று -

வெகு நேரம் பிள்ளையார் சுழி போடாமல், பிடிவாதமாக இருந்தேன்.

கடிகார முள் - பத்து இருபத்தொன்பது காட்டியது; ராகுகாலம் வர, இன்னும் ஒரு நிமிஷம்தான் இருந்தது.

திடீரென்று ஒரு குரல் கேட்டது; 'எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. போடுய்யா, பிள்ளையார் சுழியை!' என்று என் பின்னால் நின்று குரல் கொடுத்தார் -

'பராசக்தி' எடுத்தவர்!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03

நெடுங்காலம் நாத்திகராக இருந்து, இறுதியில் இறைப்பற்று மிக்கவராகி, இரவெலாம் குருத்வாராவில் பிரார்த்தனை செய்யலானார்...

திரு.குஷ்வந்த் சிங்!

ம்பிக்கைதான் - மனிதனை

நகர்த்துகிறது; அது -

முடமாக இருந்தாலும்

மூடமாக இருந்தாலும்!

வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03
வாலியின் நினைவு நாடாக்கள்! ஒரு rewind...  - 03
- சுழலும்...