அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவால் இந்தியாவிலும் ஐ.டி. துறையில் பாதிப்பு ஏற்பட்டது. அது தொடர்பான ஒரு 'நீயா-நானா'வில் நிதி ஆலோசகர் புகழேந்தி பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தைச் சொன்னார். 'ஐ.டி துறையில் வேலை இழந்தால் என்ன செய்வது என்றே தெரியாமல் ஏன் தவிக்க வேண்டும்? இத்தனை வருடங்களாகச் சம்பாதித்த பணத்தைச் சேமித்துவைக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தோம்?' என்ற கேள்வியை முன்வைத்தார்.
அந்தக் கேள்வி, நம் நிதிக் கலாசாரம் எவ்வளவு மழுங்கிப்போய் இருக்கிறது என்பதை உணர்த்தியது. மற்றொரு நிதிக் கொள்கை நிபுணர் நாகப்பன், நிகழ்ச்சிக்கு ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அது அந்தக் காலத்தில் அவர் தாயார் எழுதிய செலவுக் கணக்கு தினசரி நோட்டுப் புத்தகம்.
உண்மையில் இன்று நாம் செலவுக் கணக்கும் எழுதுவது இல்லை. சேமித்துவைக்கவும் பழகுவது இல்லை. இன்றைய சூழ்நிலையில், பணத்தை உண்டியலில்தான் சேமித்துவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ புதிய திட்டங்களும், சேவைகளும், நமது பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் தன்மைகொண்டவையாக அமைந்து இருக்கின்றன.
ஆனால், அவை மீது கவனம் ஏற்படவும், அதை அறிந்துகொள்ளவும்கூட சேமிக்க வேண்டும் என்ற தன்முனைப்பு அவசியமாகிறது. மழை நீர் கொட்டி வெள்ளம் அடித்துக்கொண்டு போகும்போது, அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. அதற்குரிய பாதை கட்டி, அணைப்பு கொடுத்துத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகள் ஆயிரம் இருந்தும் அதை உதாசீனப் படுத்துகிறோம்.
ஒட்டுமொத்த தேசத்திலும், கடந்த காலத் துடன் ஒப்பிடும்போது, பணம் இப்போது அதிகம் புழங்குகிறது. அதுவும் இளைஞர்கள் கையில் புழங்கும் பணம் அதிகம். அதனைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகளை உணர்ந்து இருந்தும் செலவு மட்டுமே செய்துகொண்டு இருந்தால் எதிர்காலம் என்னவாகும்?
சம்பாதிப்பதில் 20 சதவிகிதத்தைச் சேமிப்புக்கு என்று ஒதுக்குங்கள் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். சின்னத் தொகையோ, பெரிய தொகையோ ஏதோ ஒன்றைச் சேமிப்போம். நாம் தொலைத்துவிடக் கூடாத அற்புதமான நிதிக் கலாசாரம் அது. ஆடித் தீர்த்த பிறகு அமெரிக்கா புரிந்துகொண்டது, எதுவும் சாஸ்வதம் இல்லை என்று!
நாமும் அடிபட்டுத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்தவர் அனுபவத்தில் இருந்தே கற்றுக் கொள்ளலாம்.
முதலில் போய் சின்னதாக ஒரு நோட்டு வாங்குங்கள். அதன் முதல் பக்கத்தில் இன்றைய செலவை எழுதுங்கள். இரண்டாம் பக்கத்தில் சேமிப்பை எழுதுங்கள். நானும்கூட அப்படி ஒரு நோட்டுப் புத்தகம் வாங்க வேண்டும்!
|