ஒரே ஒரு விஷயத்தில்தான் நமக்கும் சிலி தொழிலாளர்களுக்கும் செட் ஆகிறது. ஒரு தொழிலாளி தன் மனைவிக் குத் தெரியாமல், இன்னொரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அவர் சுரங்கத்தில் இருக்கும்போது காதலி வந்து அவருக்காகப் பிரார்த்தனை செய்ய, அங்கே நின்றுகொண்டு இருந்த மனைவிக்கு விஷயம் தெரிந்து, சுரங்க வாசலிலேயே அடிதடி சண்டை. இரண்டு பெண்களும் உருண்டு புரண்டது தொலைக்காட்சியிலும் வந்துவிட்டது. 'அவளைக் கைவிட்டால் தான் நீ என்னோடு வாழலாம்!' என்று சொல்லிவிட்டு, அங்கே இருந்து கிளம்பிவிட்டார் மனைவி. தொழிலாளியின் சகோதரி, 'என் அண்ணன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போது, இந்தப் பெண்கள் இப்படி அடித்துக்கொண்டதால், இரண்டு பேருமே சரியில்லை. அண்ணன் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து மணந்துகொள்ள வேண்டும்!' என்று சொல்லி இருக்கிறார். பாசமுள்ள தங்கை!
நமக்கு புத்தகங்கள் என்றாலே கசக்கிறது. வெளிநாடுகளில் ஐந்து லட்சம் பேர் வசிக்கும் நகரில் உள்ள நூலகத்தில் 10 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால், வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். பாரிஸில் உள்ள பொம்பிது நூலகத்தில், நம் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பார்த்தேன். இங்கே அப்படிக் கிடைக்கிறதா? அவர்கள் நூலகங்களைக் கட்டுகிறார்கள்; நாம் மல்டிப்ளெக்ஸ் சினிமா அரங்குகளைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்.
சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் நூலக வாரம் கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு, பெசன்ட் நகர் எட்வர்ட் எலியர்ட்ஸ் பீச்சில் ஒரு சிறிய புத்தகக் கண்காட்சி நடந்தது. ஆறு, ஏழு பதிப்பகங்களே கலந்துகொண்டன. அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் 'இப்படி புத்தகங்களை வைக்கக் கூடாது!' என்று ஆங்கிலத்தில் ஆட்சேபித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழர்தான். உடனே 100-க்கு போன் செய்து போலீஸையும் வரவழைத்துவிட்டார். போலீஸும் ஏதோ நக்சலைட்டுகள்தான் புத்தகங்கள் விற்றுப் புரட்சி பரப்புகிறார்கள் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு சைரன் ஒலிக்க வந்துவிட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சி அரசாங்கத்தின் ஆதரவில்தான் நடக் கிறது. நக்சலைட் பிரச்னை அல்ல என்று பதிப்பாளர்கள் போலீஸிடம் விளக்கி, அங்கே வைக்கப்பட்டு இருந்த முதலமைச் சரின் புகைப்படத் தட்டியைக் காண்பித்த பிறகுதான் போலீஸ் கிளம்பியது!
இவ்வளவுக்கும் அந்த பீச்சில் கால்பந்து, கைப்பந்து எல்லாம் ஆடி, அங்கே வருபவர்களைக் கலவரப்படுத்துகிறார்கள் இளைஞர்கள். அரசுத் தடை இருந்தும், ஏதோ சந்தை மாதிரி பெட்டிக் கடைகள் பெருத்துவிட்டன. போதாக்குறைக்கு ஒரு பெரிய படுதாவைக் கட்டி அரசாங்கத்தின் விளம்பரப் படம் ஓடுகிறது. சமயங்களில் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரத்துக்காகத் தங்கள் பொருட் களை இலவசமாகக் கொடுத்து அதகளம் பண்ணுகிறார்கள். அதற்காக ஸ்பீக்கரில் பாட்டு போட்டு கடற்கரையை ஒரு decibel infernoவாக மாற்றுகிறார்கள். இதையெல்லாம் கேட்க நாதி இல்லை. புத்தகங்கள் விரித்தால் போலீஸ் வருகிறது. இந்த அளவுக்கு புத்தகங்களை வெறுக்கக் கூடிய சமூகம் உலகில் வேறு எங்காவது உண்டா?
|