இதனால், மனித ஆண் உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித ஆணின் உறுப்புதான் மிகவும் நீளமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் மனிதப் பெண்ணின் ஜனனக் குழாய் நீளம் என்னவோ எல்லோருக்கும் 10 செ.மீதான். இதனுள் சென்றடைய அதே 10 செ.மீ நீளம் உள்ள கருவி இருந்தாலே போதும். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும்.
பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ... ஆனால், ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்றுவரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. நீளத்தை நினைத்துக் கவலைப்படும் ஆண்கள் இன்றும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை வாட்டி, போலி வைத்தியர்களின் விளம்பரங்களில் சிக்கி, பணத்தையும் உடம்பையும் சீரழிப்பவர்கள் ஏராளமானோர்.
ஆடை இல்லாத அந்தக் காலத்தில், பெண்களும் அவர்களைவிட அதிக மும்முரமாக ஆண்களும் வெறும் பார்வையைவைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிகத் துல்லியமாக அளவிட முடிந்தது. அதனால், அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஆடை அணியும் கலாசார மாற்றம் ஏற்பட்ட உடனே, 'யாருக்குத் தெரியப்போகுது. பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே!' என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால், உடனே ஆண்கள் எல்லாம் அதைத் தேடிப் பிடித்து, எடுத்து வந்து இடுப்பில் சொருகிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbols-ஸை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலவற்றையும் அணிய ஆரம்பித்தனர். உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கத்தி, வாள், அரிவாள்... அப்புறம் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல் என்று இந்தச் சின்னங்களின் பட்டியல் மாறிக்கொண்டே இருந்தது.
|